“ரவிக்குமார் ஈழத்து தலித்துகளுக்கு ஆதரவாக செயல்பட்டதுண்டா?” துரைரட்ணம்-ரவிக்குமார் விவகாரம் குறித்து அ.மார்க்ஸ்

கடந்த வாரம், யாழ் பல்கலையில் உடைக் கட்டுபாடு குறித்து தெரிவித்திருந்த ரவிக்குமாருக்கு இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர் துரை ரட்ணம் சாதிய சொல்லாடலைப் பயன்படுத்து கடுமையாக சாடியிருந்தார். அந்த விவகாரம் குறித்து எழுத்தாளர் அ. மார்க்ஸ் எழுதிய கட்டுரை…

அ.மார்க்ஸ்
அ.மார்க்ஸ்
 நான் டெல்லியில் இருந்து ரயிலில் வந்துகொண்டிருந்தபோது ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு, “நீங்கள் ஏன் இதில் மௌனம் சாதிக்கிறீர்கள்?” எனக் குற்றம் சாட்டும் தொனியில் வினவினார். ரவிக்குமாருக்கும் எனக்கும் உள்ள கருத்து வேறுபாட்டின் அடிப்படையில் நான் ரவிக்குமார் இப்படி இழிவு செய்யப்பட்டதைக் கண்டிக்கவில்லை என்கிற தொனி அந்த நண்பரின் கேள்வியில் இருந்தது.

எனக்கு அந்த நேரத்தில் இது குறித்த விவரங்கள் தெரியாது. நான் ஒன்றும் அவருக்கு அப்போது பதில் அளிக்கவில்லை.

இப்படி சாதி வெறியுடன் ஒரு நபர் பேசியுள்ளதைக் கண்டிப்பதில் எனக்கு என்ன தயக்கம் இருக்க இயலும். துரைரட்ணத்தின் சொற்கள் ஈழச் சமூகத்தில் காலம் காலமாக இருந்து வரும் தீண்டாமை குறித்து என்னைப் போன்றவர்கள் கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழகத்தில் பேசி வருவதற்கு இன்னொரு நிரூபணமாகியுள்ளன. இங்கே உள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்கள், “விடுதலைப் புலிகள் சாதியை ஒழித்தார்கள்; போர்ச்சூழலில் சாதிச் சமத்துவம் நிறுவப்பட்டுவிட்டது; தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது” என்றெல்லாம் சொல்லிவந்தவற்றையும் துரைரட்ணத்தின் இழி சொற்கள் தகர்த்து விட்டன.

அது மட்டுமல்ல, இன்று சாதி, பண்பாட்டுப் பிரச்சினை குறித்துப் பேசியவுடன் “எங்கள் விடயங்களில் நீங்கள் தலையிட வேண்டாம்” என துரைரட்ணங்கள் சீறுவது என்பது இதுகாறும் அவர்கள், “தொப்பூள்கொடி உறவு, தாய்த் தமிழகம்” அது இது என்றெல்லாம் பேசிக்கொண்டு இங்கு உதவி நாடியதெல்லாம் எத்தனை போலித்தனமானது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

துரைரட்ணத்தின் சாதி வெறித் திமிர் பேச்சு இன்று தோழர்கள் சுகன், சரவணன் நடராசா, சிவா சின்னப்பொடி, சுதாகரன் கணபதிப் பிள்ளை, ஆதவன் தீட்சண்யா, கலையரசன் எனப் பலராலும் கண்டனத்திற்குள்ளாகி உள்ளது வரவேற்கத் தக்கது.

2.

இங்கு நாம் இன்னொன்றையும் சிந்திக்க வேண்டும். துரைரட்ணத்தின் இந்த இழி சொற்களை இங்குள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்கள் யாரும், இயக்கங்களும் எதுவும் கடுமையாகக் கண்டிக்கவில்லை என்பது புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால் ரவிக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர் தரப்பிலிருந்தே பெரிய கண்டனங்கள் ஏதும் வராததேன்? ஏனெனில் அதற்கான தார்மீக நியாயத்தை ரவிகுமாரும் அவரது நண்பர்களும் இழந்துவிட்டார்கள் என்பதுதான்.

அவர்கள் எந்நாளும் ஈழத்தில் நிலவிய, நிலவுகிற தீண்டாமைக் கொடுமை குறித்துப் பேசியதில்லை. தமிழகத்திற்கு முன்னோடியாக விளங்கும் ஈழத்துத் தலித் இலக்கியம் குறித்தும் அவர்கள் வாய்திறந்ததில்லை. தமிழ் தலித் இலக்கியத்தின் தாய் எனக் கொண்டாடத் தக்க டேனியலின் பெயரைக்கூட ரவிகுமாரும் காலச்சுவடு மற்றூம் இந்தியாடுடே போன்றவற்றில் ஒட்டிக் கொண்டு அவர்களின் அரசியலைப் பேசித் திரியும் யாரும் உச்சரித்ததில்லை.

அவ்வளவு ஏன், டேனியல் அவர்கள் தஞ்சையில் என் வீட்டில் காலமானபோது அவரது உடலை இலங்கைக்கு அனுப்ப வசதியின்றித் தவித்துக் கொண்டிருந்தபோதும் கூட சென்னையிலிருந்து செ.கணெசலிங்கன், நெல்லியடி சிவம், டேனியலின் மருமகன், குடந்தையிலிருந்து மூத்த எழுத்தாளர்கள் கரிச்சான் குஞ்சு, எம்.வி வெங்கட்ராம், பொதியவெற்பன், எண்ணற்ற பல ‘புரட்சிப் பண்பாட்டு இயக்க’ உறுப்பினர்கள் எல்லாம் கூடி அஞ்சலி செலுத்தியபோதும் ரவிக்குமார் மற்றும் அவரது கருத்துநிலையை ஆதரிப்பவர்கள் யாரும் அங்கு வரவில்லை.

டேனியல் இறப்பதற்கு ஒருவாரம் முன்னர் சென்னை அழைத்து வந்திருந்தேன். அங்கு இலக்கியக் கூட்டங்களில் பேசினார். திரும்பி வரும் வழியில் பேரா. து.மூர்த்திக்கும் அவரது மனைவிக்கும் சமரசம் செய்து வைக்க முயன்று ஒரு நாள் கடலூர் வந்தார். அப்போது புதுச்சேரியிலும் ஒரு இலக்கியக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ராஜ்கவுதமன், ரவிக்குமார் முதலானோர் டேனியலை நோக்கி, “”நீங்கள் தலித் இலக்கியம் என்கிற பெயரில் வெள்ளாளப் பெண்கள் தலித்களிடம் சோரம் போவதாக எழுதிய வகையில் பெண்ணியச் சிந்தனைகளுக்கு எதிரானவர்” எனக் குற்றம் சாட்டினர்.

அவரது இறுதி இரண்டு நாட்களில் டேனியல் இந்தக் குற்றச்சாட்டுகளால் எந்த அளவிற்கு நொது போயிருந்தார் என்பதை அவரை அருகிருது கவனித்துக் கொண்ட நண்பர் வி.ரி.இளங்கோவனைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்.

கொழும்பில் வாழும் அருந்ததியர் பிரச்சினை இன்னும் தனித்துமானது. இது குறித்துத் தொடர்ந்து பேசி வரும் தோழர் சரவணன் நடராசாவின் நேர்காணல் ஒன்றை பல ஆண்டுகளுக்கு முன் ‘தலித் முரசு’ இதழ் வெளியிட்டது. அதையும் நான்தான் செய்தேன். அது குறித்தும் இவர்கள் யாரும் பேசவில்லை.

ஈழத்து தலித் இலக்கியம் பற்றி இவர்கள் பேசியதில்லை. ஈழச் சமூகத்தின் சாதிக் கொடுமைகள், தீண்டாமை ஆகியவை குறித்து வாய் திறந்ததில்லை. பேரா. ந. ரவீந்திரன் போன்றோர் இவற்றை ஆவணப்படுத்திய காலத்தில் இவர்கள் யாரும் அவற்றை இங்கு அறிமுகம் செய்யவும் முயன்றதில்லை.

ஈழத்து தலித்கள் மற்றும் முஸ்லிம்கள் பிரச்சினைகளைப் பேசவே கூடாது எனும் நிலை இங்கு ஏற்படுத்தப்பட்டபோதும், பேசியவர்கள் தாக்கப்பட்டபோதும் ரவிகுமார் போன்றோர் அது குறித்து வாய் திறந்ததில்லை.மொத்தத்தில் ஈழத்துத் தலித் மக்களுக்கு இவர்கள் எந்த ஆதரவும் காட்டியதில்லை.

இன்று போர் ஓய்ந்து, புதிய அரசியல் யாப்பு, பகைமறப்பு என்றெல்லாம் பேச்சு நிலவும் சூழலில் வெளிநாடுகளில் வாழும் சில நண்பர்கள் புதிய மாற்றங்களின் ஊடாக தலித்களுக்கு இடஒதுக்கீடு முதலான சில கோரிக்கைகளை வைக்கும்போது அவர்களுக்கெல்லாம் ஒரு தார்மீக ஆதரவையும் காட்டுவதில்லை. ஈழச் சமூகத்தின் சாதிக் கொடுமைகளைத் தொடர்ந்து கண்டித்து வரும் சுகன் போன்ற தோழர்கள் இவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

3.

ஈழச் சமூகத்தில் நிலவும் சாதீய மனநிலை, ஏற்றத் தாழ்வுகள் ஆகியவை குறித்து இங்குள்ள தலித் தலைவர்கள், குறிப்பாக நான் மிக மதிக்கும் தலைவர் தொல், திருமாவளவன் அவர்கள் பேச வேண்டும். அப்படிப் பேசுவது என்பது இன்று தலித் உரிமைகள் பற்றிப் பேசுகிற ஈழத்து தலித் இயக்கவாதிகளுக்கு மிக ஆறுதலாக இருக்கும், ஊக்கமாகவும் இருக்கும். இது நாள்வரை ஈழப் போராட்டத்தையும், விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் முழுமையாக ஆதரித்து வந்த திருமா அவர்கள் இதைப் பேசுவதற்கு முற்றிலும் தகுதியானவர்.
டேனியலின் படைப்புகள் குறித்து ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றையும் விடுதலைச் சிறுத்தைகள் நடத்த வேண்டும். தமிழகப் பல்கலைக் கழகம் ஒன்றில் டேனியலின் பெயரால் தலித் இலக்கியம் குறித்த ஆய்வுகளுக்கென ஒரு இருக்கையும் அமைக்க வேண்டும்.

ஒருமுறை செ.கு.தமிழரசன் அவர்கள் என் வீடு தேடி வந்து, “ஈழத்துத் தீண்டாமை குறித்து நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அது குறித்து ஒரு மாநாடு ஏற்பாடு செய்யலாம் என நினைக்கிறேன்” என்றார். நான் அது குறித்த நூல்கள், டேனியலில் நாவல்கள் முதலியவற்றை எல்லாம் சேகரித்துத் தந்ததோடு பாரிசில் இருந்து இயங்கும் நண்பர்கள் தேவதாசன் முதலானவர்களோடு தொடர்புகளும் ஏற்படுத்தித் தந்தேன். ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரும் ஒன்றும் செய்யவில்லை.

துரைரட்ணத்தின் சாதிவெறிப் பேச்சுக்கள் இவை எல்லாவற்றையும் இன்று நினைவுபடுத்துகின்றன. ஈழப் பிரச்சினை குறித்து இங்கு நடைபெற்ற பல விவாதங்களிலும் சாதிப் பிரச்சினைக்கும் உரிய இடத்தைத் தந்திருந்தால் இன்று துரைரட்ணங்களுக்கு இப்படிப் பேசும் துணிவு ஏற்பட்டிருக்காது.

One thought on ““ரவிக்குமார் ஈழத்து தலித்துகளுக்கு ஆதரவாக செயல்பட்டதுண்டா?” துரைரட்ணம்-ரவிக்குமார் விவகாரம் குறித்து அ.மார்க்ஸ்

  1. புலிகளின் மாவீரர் துயில் இல்லம் வடக்கில் உள்ளது போல, கிழக்கில் அமைக்காதது ஏன்?

    சாதி பாகுபாடு தான் காரணமா?

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.