இந்தியா தற்சமயம் எதிர்க்கொண்டுவரும் தேசியவாதம், தேச விரோத விவாதங்கள் குறித்து வரலாற்றிஞர் ரோமிலா தாப்பருடன் ஸியா அஸ் ஸலாம் நடத்திய நேர்காணல்.
கேள்வி : தேசத் துரோகக் குற்றச் சாட்டு என்பது அலட்சியமாகவும் பொறுப்பற்ற முறையிலும் அரசை விமர்சனம் செய்யும் மாணவர்கள் மீது சுமத்தப்படுகின்றது. அனைத்து தனி மனித சுதந்திரத்தையும் அரசு நசுக்குகின்றது என எடுத்துக்கொள்ளலாமா?
பதில் : தேசத் துரோகக் குற்றச் சாட்டானது மிகவும் கவனமாக பார்க்கவேண்டிய விஷயம். அதனை அண்மைக்காலத்தில் செய்யப்படுவது போன்று போகிறபோக்கில் உச்சரிக்கக்கூடாது. ஒரு குடிமகன் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டை சுமத்துபவர்களுக்கு அது என்னவென்று புரிய வைப்பதோடு அது எதனைக்குறிக்கின்றது என சொல்லவேண்டியுள் ளது. அதோடு அதனுடைய தாக்க மானது எத்தகையது; அது எப்போது பொருத்தமானது என்பதை பலர் அறிவதில்லை. ஒரு நூற்றாண்டிற்குள் நாடு களுடைய எல்லைகள் மாறுகின்றன. பிரிட்டிஷ் இந்தியாவின் எல்லைகள் இருபதாம் நூற்றாண்டில் மாறி மூன்று நாடுகளாக ஆனது.
இன்று சொல்லப்படுகின்ற தேசியவாதம் பல வகையானது. எனவே ஒரு குடிமகன் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டை சுமத்தும் போது அரசு மிக மிக கவனத்துடனான புரிதலுடனும் அதனுடைய அர்த்தத்தின் மீது உணர்வுரீதியிலான ஈடுபாட்டோடும் செயல்படவேண்டும். அதனை போகிறபோக்கில் தவறாக பயன்படுத்தக்கூடாது. காலனியாதிக்கக் காலத்தில் காலனி அரசுகளின் மீது வன்முறையைத் தூண்ட தேசத் துரோகக் குற்றச்சாட்டு பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று காலனியாதிக்க அரசுகள் இல்லை. இன்று அவை மூன்று தனித்தனி சுதந்திரமான நாடுகளாக (இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம்) உள்ளதால் தேசத் துரோகக் குற்றச்சாட்டு இந்த அளவில் சிக்கலானதாக மாறியுள்ளது. தேசத் துரோகச் சட்டம் மாற்றப்படவேண்டும்.
கேள்வி : ஜே.என்.யு அனுபவப் பின்னணியில், அரசு கருத்துச் சுதந்திரத்தை நோக்கி பயணிக்காமல், தேசியவாதம் ஒரு சிலரால் உச்சரிக்கப் படுவதை மகிழ்ச்சியாக பார்க்கின்றது. உரத்துப் பேசுகின்ற அறிவுஜீவி யாகவுள்ள உங்களை இது எவ்வகை யில் வருத்தமடைய செய்கின்றது?
பதில் : சராசரி வாழ்வை நடத்துவதில் பலர் திருப்தியடைகின்றனர். இவர்களுக்கு அசாதாரணமான செயல் பாடுகளும் கோணங்களும் தேவைப்படுவதில்லை. ஆனால் கல்வியாளர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் அறிவை வளப்படுத்துவதற்கு கேள்விகள் கேட்கின்ற பொறுப்பு வழங்கப் படுகின்றது. இது அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் செயல்பாடே ஆகும். இவ்வாறு செய்யும்போது சராசரியான வழிமுறைகளிலிருந்து விலகிப்போகின்ற, சமூகத்திற்கு பாதகமில்லாத, விஷயங்களை சிந்திக்க அனுமதிக்கப்படுவார்கள் என்னும் நம்பிக்கைவேண்டும். எது சமூகத்திற்குபாதகமான விஷயம் என்பது விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.
அறிவுஜீவிகள் பயமின்றி புதிய கருத்துக்களை உருவாக்க வேண்டும். ஆனால்அவர்கள் பயத்துடன் வாழ்வார்களே யானால், அந்த பயம் மக்களுக்கும் பரவிவிடும். பயத்துடனேயே வாழ்கின்ற சமூகத்தினுடைய சுற்றுச்சூழல், ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை வளர்ப்பதை நிறுத்தி விடுவதோடு அற்பமான சராசரி வாழ்க்கையாக மாறிவிடுகின்றது. விரிந்த அளவிலே பார்த்தால், பேச்சு சுதந்திரத்துக்கான அனைத்து தளங்களுமே அபாயத்தில் உள்ளது போன்று தோன்றுகின்றது. இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஜே.என்.யு…இத்தகைய நிறுவனங்களின் மீது வலது சாரி கட்சிகளும் மற்றும் அதனுடைய துணை அமைப்புகளும் வீசுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு முடிவேயில்லை என்பது போல தோன்றுகின்றது.
கேள்வி : இது உங்களுக்கு அவசரகால நிலையை நினைவுபடுத்துகின்றதா?
பதில் : ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை ஊக்குவிக்கின்ற நிறுவனங்களை குலைக்கின்ற நடவடிக் கை நடக்கின்றது. ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை செய்யாத, புதிய சிந்தனைகளை தேடாத நபர்களை இந்நிறுவனங்களின் மீது அதிகாரம் செலுத்தும் இடத்தில் அமர்த்துகின்றனர். ஏனெனில் அவர்கள் அமைச்சரவைகளிலிருந்து வரும் உத்தரவுகளை செயல்படுத்துவார்கள். இதுவரையில் இதுதான் பாணி. ஒரு சந்தர்ப்பத்தில் தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநர் தரம் மிகுந்த பல புதிய பொருட்காட்சிகளை ஏற்பாடு செய்திருந்த நிலையில் அவர் விரைவாக விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டார்! பேச்சு சுதந்திரத்தை முடக்குகின்ற முயற்சிகளெல்லாம் தன்னம்பிக்கையில்லாததோடு, சுதந்திரமான குடிமக்களின்பால் அசௌகரியமான மனநிலையைக் கொண்டுள்ள அரசைக் குறிக்கின்றது.
கேள்வி : உயர்கல்வியைத் தொடருதல் அல்லது ஆக்கப்பூர்வமான செயல்வடிவங்கள் ஆகியவற்றை செய்கின்றவர்கள் பயத்தில் வாழ்ந்தால், சாதாரண மக்களுக்கு ஏதேனும் நம்பிக்கையிருக்கின்றதா?
பதில் : தேசியவாதம் என்பது கட்டிடங்களின் மீது தேசியக் கொடியைபறக்க விடுவதிலோ தாயாக சித்தரிக்கப்பட்ட தேசத்தை புகழ்ந்து பாடுவதிலோ இல்லை. தேசியவாதமானது காலனியாதிக்கத்தை தூக்கியெறிந்திட்ட, ஆழமான விசுவாசத்தை அடையாளமாகக் கொண்ட மக்களிடத்தில் உள்ளது. சிலர் இத்தகையவற்றை ஹிந்து தேசத்துடனோ இஸ்லாமிய அரசுடனோ தொடர்புபடுத்திவிடுகின்றனர். தேசியவாதம் என்பது சமமான உரிமைகளைக் கொண்டு ஒரு நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்களுடைய அடையாளத்தை உள்ளடக்கியதாக அமைய வேண்டும். இவ்வுரிமைகள் என்பது அனைத்து பாகுபாடுகளையும் அகற்றிய, அனைத்து மக்களின் நலன் சார்ந்த, குடிமக்களே முதன்மை பெற்ற வராக கருதுகின்ற அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
முதன்மையான அடையாளம் என்பது இந்தியாவின் குடிமகன்(ள்) என்பதோடு சாதி, மதம், மொழி, இனம் போன்ற இன்னும் பிறவற்றிற்கும் மேம்பட்டதாக இருத்தல் வேண்டும். தேசியவாதம் என்பது இந்தியாவில் ஒரு ஹிந்துவையோ பாகிஸ்தானில் ஒரு இஸ்லாமியரையோ ஒரு பெரும்பான்மை மதத்தைச் சார்ந்தவர் என்ற முறையில் முதன்மையானவராக, ஒரு சலுகையாக பெற்றவராக அனுமதிக்கவில்லை. ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் அனைவருமே சம உரிமைகொண்ட குடிமக் கள்.
அனைத்து குடிமக்களுக்குமே அரசிடம் தங்களுக்கான கடமை களையும் கட்டுப்பாடுகளையும் விவாதிப்பதற்கான உரிமை இருக்க வேண்டும். இது அனைத்து குடிமக் களுக்கும் சமமான அளவில் மனித உரிமையை உத்தரவாதப்படுத்துவதாக அமையவேண்டும்.
நன்றி : இந்து நாளிதழ் (ஆங்கிலம்), தீக்கதிர்
தமிழில் : பேரா.ச.இராமசுந்தரம்