
இன்று சீமான் பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று இருந்தேன். அப்படியே இருந்திருக்கலாம். தெரியாமல் ‘தமிழ்.ஒன்இண்டியா’ இணையத்தில் சீமானின் பேட்டியின் இரண்டாம் பாகத்தை படித்துத் தொலைத்து விட்டேன்.
‘சீமானின் கேள்விகளால் ஒரு வேள்வி செய்வோம்’ என்று அதற்கு ஒரு தலைப்பு வேறு. வேள்வி என்றால் ஆடு வெட்டுவதா அல்லது நெருப்பு வளர்த்து இந்திரனைக் கூப்பிடுவதா என்பது தெரியவில்லை. அதைப் பிறகு ஒரு நாள் பார்ப்போம்.
அந்தப் பேட்டியிலே சீமான் சொல்கிறார் ‘என்னையே எடுங்க…. இதுவரை நீங்க என்ன ஆளுங்கன்னு கேட்காத ஒரே ஒருத்தன் பிராமணன்தான். நம்ம தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவங்கதான் நீங்க என்ன ஆளு, என்ன சாதின்னு கேட்டிருக்கான்’
உண்மையில் இதைப் படித்த போது சீமானை ‘லூசுப் பயல்’ என்றுதான் சொல்லத் தோன்றியது.
தலையிலே இருந்து பிறந்தவன் காலிலே இருந்து பிறந்தவனிடம், நீ எந்தக் கால் விரலில் இருந்து பிறந்தாய் என்று கேட்பானா? அது பற்றி அவன் ஏதும் அக்கறைப்படுவானா?
சீமான் அவர்களே! நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்!
வர்ணாச்சிரமம் பற்றி தந்தை பெரியாரின் பாசறையில் படித்திருப்பீர்கள். அதை மீண்டும் நினைவுபடுத்துங்கள். பார்ப்பனர்கள் கடவுளின் தலையிலேயே இருந்து வந்தவர்கள். நாம் எல்லாம் சூத்திரர்கள். கடவுளின் காலிலே இருந்து பிறந்தவர்கள்.
சூத்திரர்கள் யார் என்பதற்கு மனு தர்மம் ஒரு அருமையான விளக்கமும் தந்திருக்கிறது.
இந்த சூத்திரர்களுக்குள்தான் ஆயிரம் பிரிவுகள். அவர்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள். அந்த ஏற்றத் தாழ்வுகளின் அடிப்படையில், ஒரு சூத்திரன் இன்னொரு சூத்திரனைக் காணும் போது, ‘நீ என்ன ஜாதி’ என்று கேட்பான். தன்னை விட அவன் சாதியில் உயர்ந்தவனா என்று அறிவதுதான் நோக்கம்.
எல்லாவற்றிற்கும் மேலே இருக்கின்ற பார்ப்பானுக்கு தனக்கு கீழே உள்ளவன் எந்தப் படியில் நிற்கிறான் என்பதில் அக்கறை இல்லை. இந்த ஏணிப்படிமுறை உடையாமல் இருந்தால் போதும்.
பார்ப்பானுக்கு ஒருவன் பார்ப்பானா அல்லது பார்ப்பான் இல்லையா என்பதுதான் முக்கியம். பார்ப்பான் இல்லையென்றால் அவன் எதுவாக இருந்தாலும் கவலை இல்லை.
விளங்குகிறதா சீமான் அவர்களே?
அந்தப் பேட்டியைப் படித்துப் பார்த்தேன். சோ.ராமசாமி , எஸ்.வி.சேகர், எச்.ராஜா போன்றவர்கள் தரக் கூடிய ஒரு பேட்டி அது. இன்று இவற்றை எல்லாம் சீமானின் வாயில் இருந்து கேட்க நேர்ந்திருப்பது காலத்தின் கொடுமை.
வி. சபேசன் உங்களைப்பற்றிய கொஞ்சம் எழுதுங்களேன் பிளீஸ்!
LikeLike