2004ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் மும்பையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான். அந்தச் சமயத்தில் குஜராத் முதலமைச்சராக இருந்தவர் நரேந்திர மோடி. நரேந்திர மோடியின் தூண்டுதலின் அடிப்படையிலே இந்த போலி மோதல் நடந்ததாக மத்திய அரசு பிரமாண பத்திரத்தில் சொன்னது.
மத்திய அரசு முதலில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இஷ்ரத் ஜஹான் தீவிரவாதி என சொல்லப்பட்டார். ஆனால், அவருடைய குடும்பத்தினரிடமிருந்து, மனித உரிமை அமைப்புகளிடமிருந்து ஒரு சாதாரண பெண்ணை தீவிரவாதியாக சித்தரிப்பதற்கு கடும் கண்டனங்கள் கிளம்பியது. மத்திய அரசு மீண்டும் தன்னுடைய விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் திருத்தப்பட்ட பிரமாண அறிக்கையை சமர்பித்தது.
அதன் அடிப்படையில் நரேந்திர மோடி, அமித் ஷா, போலி எண்கவுண்டரை நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. நரேந்திர மோடிக்கு இதில் உள்ள பங்கு என்ன என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவரை நீதிமன்றம் விடுவித்தது. அதேபோல் அமித்ஷாவும் விடுவிக்கப்பட்டார்.
சமீபத்தில் மும்பை தாக்குதல் வழக்கில் அப்ரூவராக மாறிய டேவிட் ஹெட்லியிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடத்தப் பட்ட விசாரணையில் அவர் இஸ்ரத் ஜஹான் தீவிரவாதியாக இருக்கலாம் என்று ஒரு வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தை அரசு தரப்பு வழக்கறிஞரும் பாஜக அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான உஜ்வால் நிகாம் வாங்கினார்.
இந்நிலையில் இஷ்ரத் ஜகான் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்தரத்தை, அப்போதைய காங்கிரஸ் அரசு திருத்தி, இரண்டாவது மனுவை தாக்கல் செய்ததாக முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கடந்த வாரம் கூறினார்.
“லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தீர்க்கமாக தெரிந்துகொண்ட பிறகுதான், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டோரை குஜராத் போலீஸார் சுட்டுக் கொன்றனர். ஆனால், இச்சம்பவத்தில் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கில் பிரமாணப் பத்திரம் திருத்தப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த நடவடிக்கையானது வெறும் துறை ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு இல்லை. அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் உத்தரவின் பேரிலேயே அந்தப் பிரமாணப் பத்திரம் திருத்தப்பட்டது” என்று முன்னாள் உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை தெரிவித்துள்ளார்.
2011-ஆம் ஆண்டு அரசு பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிள்ளை, இத்தனை காலம் ஏன் அது குறித்து வாய்த்திறக்காமல் இருந்தார் என்பதற்கு அவரிடம் பதில் இல்லை. காங்கிரஸ் அரசால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று தெரிந்திருந்தால், பாஜக ஆட்சிக்கு வந்த 2104-ஆம் ஆண்டில் கூட அவர் சொல்லியிருக்கலாம்.
இப்போது சொல்லக் காரணம் இருக்கிறது…அடுத்தடுத்த வரவிருக்கும் அசாம், கேரளம், மேற்குவங்கம், தமிழ்நாடு ஆகிய மாநில தேர்தல்களை எதிர்கொள்ள இந்த விவகாரம் துருப்புச் சீட்டாக பயன்படும் என நினைக்கிறது பாஜக. அதன் அடிப்படையிலேயே ஜி.கே. பிள்ளை போன்றவர்களை தங்களுக்குச் சாதகமாக பேச வைக்கிறது.
இதில், குறிப்பிட்டு சொல்ல வேண்டிய என்னவென்றால், மோடிக்கு மிக நெருக்கமான கார்ப்பொரேட் நண்பரான கவுதம் அதானியின் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களின் ஜி.கே.பிள்ளையும் ஒருவர். இதற்கு மேல் இந்த விவகாரம் குறித்து விவரிக்க எந்தத் தேவையும் இல்லை.
இஷ்ரத் ஜகான் எப்படி மீண்டும் மீண்டும் கொல்லப்படுகிறார் என்பதை அவருடைய தாயின் தரப்பு வழக்கறிஞர் ஆதாரங்களுடன் தி வயரில் எழுதியிருக்கிறார். அரசும் அதிகாரமும் இணைந்தால் ஒரு சாமானிய பெண்ணை பிறப்பிலிருந்தே கூட தீவிரவாதி ஆக்க முடியும் என்பதற்கு இஷ்ரத் ஜஹான் வழக்கு ஒரு உதாரணம். இதே போன்றுதான் ஜேஎன்யூ மாணவர்களுக்கு எதிராக பரப்பப்பட்ட ஜோடிப்பு ஆதாரங்கள் அவர்களை தேசவிரோதிகளாக்கியது. ஆக மொத்தம் நீங்களும் நானும் எப்போது வேண்டுமானாலும் தீவிரவாதியாக, தேச விரோதியாக நிரூபிக்கப்படலாம்.
தி டெலிகிராப், தீக்கதிர், தினமணி செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.