ஹைதராபாத் பல்கலைக் கழக தலித் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலாவின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் அப்பட்டமாக பொய்களை அள்ளி வீசி, நாடாளுமன்றத்திற்கும், நாட்டிற்கும் தவறான தகவல்களை அளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீதுஉரிமை மீறல் தீர்மானங்களை கொண்டு வந்தன. இந்த தீர்மானங்களை எதிர்கொள்ள முடியாமல், ஆளுங்கட்சியான பாஜக, உரிமை மீறல் தீர்மானத்திற்கு பதிலடி என்ற பெயரில் காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு எதிராக ஒரு உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த 2 உரிமை மீறல் தீர்மானங்கள் குறித்த மோதல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்குமிடையே எழுந்த நிலையில், திடீரென்று சம்பந்தமே இல்லாமல் அதிமுகவினர் எழுந்து அராஜகமான முறையில் ரகளையில் ஈடுபட்டு இரு அவைகளையும் முடக்கினர். பாஜகவினரின் தூண்டுதலின் பேரிலேயே அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டினார் என்று சொல்கிறது தீக்கதிர் நாளிதழ்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியதும், அஇஅதிமுக உறுப்பினர்கள் எழுந்து தங்கள் கைகளில் ஒரு செய்தித்தாளை வைத்துக் கொண்டு“கைது செய், கைது செய், சிதம்பரத்தைக் கைது செய்’’ என்று முழக்கமிட்டவண்ணம் அவைத் தலைவர்களின் இருக்கையை நோக்கி சென்றனர். அந்த செய்தித்தாளில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரமும், அவர் மகன் கார்த்தியும் ஏர்செல்-மேக்சிஸ் ஊழல் பேரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதுபோன்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதனை அடிப்படையாக வைத்துக்கொண்டே அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அப்போது மாநிலங்களவையை நடத்தி வந்த துணைத்தலைவர் பி.ஜே. குரியன், அதிமுகவினரின் செயல்பாடுகள் “ஜனநாயகத்தைக் கொலை செய்வது போல்’’ இருப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும் பி.ஜே. குரியன், அதிமுகவின் அவைத் தலைவரான நவநீதகிருஷ்ணனை நோக்கி, இது குறித்து நீங்கள் அரசாங்கத்திடம் முறையிடுங்கள். இந்த அவை என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார். அவர் அதற்குப் பதில் சொல்வதற்குள் அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் அவரைப் பதில் சொல்ல விடாதவாறு முழக்கமிட்டு அவையில் ரகளை செய்தார்.
ஸ்மிருதி சூபின் இரானியின் பொய்களை எதிர்த்து, மாநிலங்களவை, மக்களவையில் பிற எதிர்கட்சிகள் நடத்த இருந்த போராட்டாம், உரிமை மீறல் பிரச்சனை எல்லாவற்றையும், சிதம்பரம் சொத்து குவிப்பு என்ற கதையை எடுத்து ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டிருக்கிறது அதிமுக.
அதிமுகவின் ஏ டீம், பி டீம், சி டீம் என்றெல்லாம் கிண்டல்களைப் பார்க்க முடிகிறது. ஆனால் கடந்த இரு நாட்களாக பாராளுமன்ற விவாதங்களை பார்த்தோமேயானால், மோடியின் Z+ டீம்தான் அதிமுக என்று தோன்றுகிறது.