ராஜீவ் கொலை வழக்கு – எழுவரையும் விடுவிப்பது குறித்து மத்திய அரசின் கருத்தை தமிழக அரசு கேட்டிருப்பதாக செய்தி.
யாரும் உடனே மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய வேண்டாம். இவ்வழக்கில் தொடர்புடைய மூன்று தரப்பும் (தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம்) தமிழர்களுக்கு விரோதமானவை.
ஒருவேளை தேர்தல் ஆதாயத்துக்காக தமிழக அரசு அவர்களை விடுவிக்க விரும்பினால் அவர்களை பரோலில் விடுவிக்கும் வேலையைத்தான் அரசு முதலில் செய்ய வேண்டும். மத்திய அரசிடம் கருத்து கேட்பதில் உள்ள உள்நோக்கம் என்பது அவர்கள் விடுதலையும் அடைந்துவிடக்கூடாது ஆனால் விடுதலையை விரும்பும் நபர்களின் வாக்கையும் பெற்றுவிட வேண்டும் என்பதுதான்.
இந்த தமிழர் விரோத கூட்டணியை வழிக்கு கொண்டுவரும் வழி மக்களின் விழிப்புணர்வுதான். செங்கொடி தற்கொலை செய்துகொண்டபோது நடந்தவற்றை நினைவுபடுத்திப் பாருங்கள். ஒட்டுமொத்த மக்கள் உணர்வும் எழுவர் விடுதலையை நோக்கி இருக்கையில், மக்கள் விருப்பத்தை மதித்தே பழக்கமில்லாத நீதிமன்றம்கூட நம் உணர்வுகளுக்கு பயந்தது. பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குக்கு தடைவிதிக்கப்பட்ட போது சென்னை நீதிமன்ற வளாகம் கரவொலியால் நிறைந்தபோது அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தட்டும் என நீதிபதிகள் பெருந்தன்மை காட்டினார்கள்.
நீதிபதி நடந்து வரும்போதுகூட மற்றவர்கள் பேசக்கூடாது என்பதற்காக டவாலி உஸ் என ஒலி எழுப்புவார்கள். அவர்கள் பந்தாவைகூட அடக்கிவைக்க மக்கள் எழுச்சியால்தான் முடியும்.
அரசாங்கத்தின் தேர்தல்கால கருணையெல்லாம் அந்த ஏழுபேரையும் நம்பவைத்து கழுத்தறுக்கும் செயலாகவே அமையும். இதற்கெல்லாம் மகிழ்வதென்பது தமிழுணர்வை கற்பனையில் தற்காலிகமாக வடிய வைக்கும் சுயமைதுனத்துக்கு நிகரானது.
25 வருடம் பரோல் இல்லாமல் நரகவாழ்வு வாழ்பவருக்கு, தகப்பனின் சாவுக்குகூட வெறும் 12 மணிநேர பரோல் கொடுக்கும் அரசு நியாயத்தின் பக்கம் எப்போதும் நிற்காது. எழுவர் விடுதலை மக்கள் போராட்டங்களால் மட்டுமே சாத்தியம். அதற்கு வேறு குறுக்குவழிகள் இல்லை.
வில்லவன் இராமதாஸ், சமூக-அரசியல் விமர்சகர்.