டெல்லி போலீசால் கைது செய்யப்பட்ட் ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித், அனிர் பன் பட்டாசார்யா ஆகியோரின் போலீஸ் விசாரணை எப்படி இருந்திருக்கும் என்று ஒரு கற்பனை உரையாடல்.

போலீஸ்: ஜேன்யூவில் நீங்கள் ஏன் ஒரு தேசவிரோத ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தீர்கள்?
அனீர்பன்: பெனடிக்ட் ஆண்டர்சனின் பார்வையில் தேசம் என்பது கற்பனை செய்யப்பட்ட சமூகம். தங்களை அந்த சமூகத்தின் அங்கமாக நம்பும் மக்கள் சமூகரீதியாகக் கட்டுவதே தேசம்.
போலீஸ்: என்னது? நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை. யார் உங்களுக்கு நிதியுதவி செய்தது?
அனீர்பன்: நாங்கள் சிலர் சேர்ந்து சில ஆயிரங்களை வசூலித்து நிதி சேர்த்தோம். எல்லோரு சிறு தொகைகளை நன்கொடையாகக் கொடுத்தனர்.
போலீஸ்: என்ன, யூஜிசி கொடுக்கும் பணத்தை இந்த நிகழ்ச்சிக்காக செலவிட்டீர்களா? வரிசெலுத்துவோரின் பணத்தைக்கொண்டு ஒரு தேசவிரோத நிகழ்ச்சியை நடத்தினீர்களா?
உமர்: வரிசெலுத்துவோரின் பணம் என்பது தவறான சொற்பிரயோகம். எல்லா சொத்துக்களும் சமூகத்திரளிற்குச் சொந்தமானது. அந்த திரளின் நலனிற்கு மட்டுமே சொத்தைப் பயன்படுத்தவேண்டும். திறன்படைத்த ஒவ்வொரு மனிதனும் சமுகத்திரளுக்கு வேண்டி உழைக்க வேண்டும். இதற்கு சமூகத் திரள் தனிமனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யும். மார்க்ஸ் என்ன சொல்கிறார் என்றால்…..
போலீஸ்: நீங்கள் நிதியை தவறாக பயன்படுத்தினீர்களா?
அனிர்பன்: நாங்கள் நிதியை முதலாளித்துவ அல்லது குட்டி முதலாளித்துவ நலன்களுக்காகச் செலவிடவில்லை. கல்வி, தகவல் பரவல் போன்ற உயரிய நோக்கங்களுக்காகத்தான் செலவிட்டோம் அல்தூஸர் என்ன சொல்வாரென்றால்..
போலீஸ் (தலையைச் சொறிந்துகொண்டே): நாம் அதைப்பற்றி பிறகு பேசலாம். முதலில் அஃப்சல் குருவை ஒரு தியாகியாகக் கருதுகிறீர்களா என்று சொல்லுங்கள்.
அனிர்பன்: நான் அதற்கு முதலில் பதில் சொல்லிவிடுகிறேன். இல்லையென்றால் நீங்கள் உமரை இஸ்லாமியாத் தீவிரவாதியென்று குற்றம்சாட்டி விடுவீர்கள். ஷஹீத் என்ற சொல்லின் வேர் ‘சாட்சியாக நிற்பது’ என்கிற கருத்தாக்கத்தில் உள்ளது. ஒருவன் கொலைசெய்யப்படாத பட்சத்தில், ஆகம்பென் கூறுவது போல் கண்ணியமான வாழ்விற்கும் வெறுமையான வாழ்விற்கும் இடையே ஒன்றைத் தேர்வுசெய்யும் நிலையிலிருக்கும்போது அவன் சாவைத்தான் பகுத்தறிவுபூர்வமாகத் தேர்வு செய்வான். தியாகிகள் இறந்த சூழலில் நீதி என்பது சாத்தியமற்றது என்பதற்கு சாட்சியாகவே அவர்களின் மரணம் இருக்கிறது. வேறு எந்தக் காரணத்திற்காகவும் பகத்சிங்கை தியாகி என்று கூறமுடியாது.
போலீஸ்: என்ன பேச்சு இது? ‘இந்தியாவை அழித்து விடுவோம்’ என்ற கோஷத்தை எழுப்பியது யார்?
உமர்: அனேகமாக ஜாமிய மிலியா பல்கலைக் கழகத்திலிருந்து யாராவது இருக்கும். அங்குதானே நஜீப் ஜங் (தற்போதைய டெல்லி ஆளுநர்) துணைவேந்தராக இருந்தார்
(அனிர்பன் குரலை அடக்கிச் சிரிக்கிறான்)
போலீஸ்: இதில் சிரிக்க என்ன இருக்கிறது. மக்கள் கோபத்தில் சீறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய உணர்வுகளை நீங்கள் புண்படுத்தி விட்டீர்கள்
அனிர்பன்: நாங்கள் மீடியாவின் உணர்வுகளைத்தான் புண்படுத்தியிருக்கிறோம். எங்களால் அவர்கள் புண்படும்போதுதான் அவர்களுடைய டிஆர்பி மதிப்பெண் உயரும். இது சோம்ஸ்கி சொன்னதுபோல், முதலாளித்துவ நலன்களைப் பாதுகாப்பதற்காக மேல்தட்டு வர்க்கத்தினர் மக்களின் ஒப்புதலை உருவாக்கும் செயல்.
போலீஸ்: ‘தபால் ஆபீஸ் இல்லாத நாடு’ என்ற வாசகம் தாங்கிய சுவரொட்டியை ஏன் தயாரித்தீர்கள்? காஷ்மீரில் பல தபால் அலுவலகங்கள் இருக்கின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தபால் சேவை பரவலாக இருக்கிறது என்று நாங்கள் தகவலறியும் சட்டத்தினைக் கொண்டு தெரிந்துகொண்டோம்.
(உமர் அனிர்பனின் முதுகில் தட்டுகிறான்)
போலீஸ்: இது பிக்னிக் இல்லை. மரியாதையாக நடந்துகொள். நீங்கள் இந்தியாவிலிருந்து காஷ்மீர் விடுதலை பெறவேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கிறீர்களா?
உமர்: சுதந்திரத்தின் எல்லா வடிவங்களையும் நாங்கள் ஆதரிக்கிறோம். பிறர் எங்களை ஆக்கிரமிப்பதாக உணரும்போது இந்தியா சுதந்திரமாக இருக்க முடியாது. பாபசாகேப் இதைத்தான்…..
போலீஸ்: இது என்ன இரட்டைப் பேச்சு.
(உமர்ரும் அனிர்பனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர்)
போலீஸ்: அப்படியென்றால் நீங்கள் ஜார்ஜ் ஆர்வெல்லைப் படித்திருக்கிறீர்கள் போலிருக்கிறது.
போலீஸ்: ஆம். ஆல் இஸ் வெல். நன்றி
உமர்: (சிரித்துக்கொண்டே அனிர்பனிடம்): அறியாமையே வலிமை
அனிர்பன்: (சிரித்துக்கொண்டே, உமரிடம்): விடுதலைதான் அடிமைத்தனம்.
இருவரும் ஒரே குரலில்: போர்தான் அமைதி
விசாரணையின் முடிவில் போலீஸ் அளித்த அறிக்கை:
——————————————————————————
இந்திய அரசாங்கத்தை தூக்கியெறிய மட்டுமின்றி அரசு எந்திரத்தையே தகர்ப்பதற்கு ஒரு ஆழமான சர்வதேச சதி நடப்பதுபோல் இருக்கிறது. இந்த இரு மாணவர்களுக்கும்ம ஆதரவாக இந்தியா முழுவதும் தத்துவ ஆசான்கள் சிலர் இருப்பதுபோல் தெரிகிறது. அவர்களின் பெயர்கள்: பகத்சிங் (பஞ்சாப் போலீஸ் துறையிடம் இவரைப் பற்றி மேலும் விவரங்கள் கேட்டிருக்கிறோம்; பாபசாஹேப் எனும் ஒருவர் (டேட்டா பேஸில் – data base – இவரைப் பற்றிய விவரங்கள் இருக்கின்றனவா என்று பார்க்கவேண்டும்). இவர்களை அன்னிய நாடுகளிலிருந்து ஆட்டுவிப்பவர்களின் பெயர்களும் கிடைத்துள்ளன. அவர்களுள் சிலர்: ஆண்டர்சன். மார்க்ஸ், சூம்ஸ் கயான், ஏகம் பென், அல் தூசர். இந்த தன்னிச்சையான செல்களுக்கு முக்கிய இணைப்பாக இருப்பது டெல்லியின் கவர்னர் நஜீப் ஜங் என்றும் தெரியவந்துள்ளது.