மோடிக்கு ஏன் பாஸ் மார்க் போட்டேன்? கருணாநிதி காரணங்களை அடுக்குகிறார்

திமுக தலைவர் கருணாநிதி, மத்திய பட்ஜெட் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் ஏன் மோடிக்கு பாஸ் மார்க் போட்டேன் என்பதற்கு காரணங்களை அடுக்குகிறார். இதோ அவர் வெளியிட்ட முழு அறிக்கையும்!

“நடப்பு நிதி ஆண்டான 2015-2016 டிசம்பர் மாதம் வரை, மத்திய அரசின் அமைச்சகங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் எந்த அளவுக்கு திட்டச் செலவுகளை மேற்கொண்டிருக்கின்றன என்று பார்த்தால், பத்து அமைச்சகங்கள் பாதி அளவு நிதியைக் கூட செலவு செய்யவில்லை என்பதும்; ஏழு அமைச்சகங்கள் நிதியாண்டின் ஒன்பது மாதங்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாகச் செலவு செய்திருக்கின்றன என்பதும்; வெளியாகியுள்ள நிலையில், மத்திய அரசின் 2016-2017ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையினை இன்று 29-2-2016 நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் திரு. அருண் ஜெட்லி வழங்கியிருக்கிறார்.

இந்தியாவில் 58 சதவிகித கிராமப்புற குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரிக் கடன் 47,000 ரூபாய் என்ற அளவில் இருக்கும்போது, பெரும்பாலான விவசாயக் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 6,400 ரூபாய் மட்டுமே என்பதால் இந்திய விவசாயிகள் பட்ட கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கடன் எனும் கடலில் மூழ்கி தத்தளித்துக் கொண்டுள்ள நிலையிலும், வேளாண் துறை குறைந்தது 4 சதவிகித வளர்ச்சியையாவது காண வேண்டிய கட்டாய நிலையிலும், ஆறு ஆண்டுகளுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்க இலக்கு நிர்ணயித்து பிரதமர் மோடி அவர்கள் அறிவித்துள்ள போது நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சிறு தொழில் நிறுவனங்களுக்கான உற்பத்தி வரி விலக்கு வரம்பை ஒன்றரைக் கோடி ரூபாயிலிருந்து ஐந்து கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும், தவணை தவறிய வாராக் கடன் என்பதற்கான அவகாசத்தை மூன்று மாதங்களிலிருந்து ஆறு மாதங்களாக நீட்டிக்க வேண்டும், இயந்திரங்களுக்கான இறக்குமதி வரியை 20 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகக் குறைப்பதுடன் தொழில் கடன்களுக்கான வட்டி விகிதத்தையும் குறைக்க வேண்டும், மிக அதிகமாக இருக்கும் சிமெண்ட் உற்பத்தி வரியை குறைக்க வேண்டும், ஏற்றுமதியாளர்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்கி புதிய கடன் கொள்கையை வகுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ள பின்னணியில் மத்திய நிதி நிலை அறிக்கை வெளிவந்துள்ளது.

மொத்தத்தில் வேளாண் துறையின் தேவைகளுக்கும் தொழில் துறையின் எதிர்பார்ப்புகளுக்கும் ஏழையெளிய நடுத்தர பிரிவினரின் நம்பிக்கைகளுக்கும், இடையே, திரு. ஜெட்லி அவர்களின் நிதி நிலை அறிக்கை வெளியாகி இருக்கிறது.

அதில் சில குறிப்பிட்ட அம்சங்களைக் கூற வேண்டுமேயானால்,

பயிர் சேதங்களுக்கு கூடுதல் இழப்பீடு;

2017இல் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு 5,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு;

வேளாண்மை கடன்களுக்கு 9 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு;

விவசாயம் மற்றும் விவசாயத் திட்டங்களுக்கு 35,984 கோடி ரூபாய் ஒதுக்கீடு;

புதிய நீர்ப்பாசன திட்டங்களுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய்;

அதன் மூலம் புதிதாக 28 இலட்சம் எக்டேர் நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெறும்;

5 லட்சம் எக்டேர் நிலங்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க புதிய திட்டம்;

ஐந்தாண்டுகளில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு;

மார்ச் 31க்குள் விவசாயம் சார்ந்த 23 பெரிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்படும்;

நீர்வள மேம்பாட்டிற்காக 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு; நாடு முழுவதும் ஒருங்கிணைந்த விவசாயத் திட்டம் அம்பேத்கர் பிறந்த நாளில் தொடங்கப்படும்;

2.87 இலட்சம் கோடி ரூபாய் கிராமப் பஞ்சாயத்துகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கீடு;

வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு குறைந்த விலையில் எரிவாயு வழங்க 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு;

1-5-2018க்குள் அனைவருக்கும் மின்சாரம்;

தாழ்த்தப்பட்டோர் எளிதாக தொழில் தொடங்குவதற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு;

1500 பல்திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிலையங்கள்;

5 லட்சத்திற்குக் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வரிச் சலுகை;

வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு வரிச் சலுகையாக 24 ஆயிரம் ரூபாய் வரம்பு 60 ஆயிரமாக உயர்வு;

பிரதம மந்திரி மக்கள் சுகாதாரத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 3,000 மருந்துக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது;

ஊரகப் பகுதிகளுக்கான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது;

வறுமைக் கோட்டின் கீழுள்ள முதியவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது;

கிராமப்புறச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2.23 இலட்சம் கி.மீ. சாலைகள் இணைக்கப்படும்;

பால் மற்றும் பால் பொருள்கள் உற்பத்தியைப் பெருக்க நான்கு புதிய திட்டங்கள்;

அட்டவணைப் பிரிவினருக்கு ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு;

உயர் கல்விக்கான நிதி முகமை ஒன்று ஏற்படுத்தப்படும். உலகத் தரம் வாய்ந்த உயர் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும்;

சிறு குறு நிறுவனங்களுக்கு வரிச் சலுகை உச்ச வரம்பு 2 கோடி ரூபாயாக உயர்வு;

புதிய தொழில் தொடங்குவோருக்கு முதல் மூன்றாண்டுகளுக்கு வரி விலக்கு;

உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 7.6 சதவிகிதம்; பணவீக்கம் 5.4 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது ஆகியவற்றைக் கூறலாம்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான அரசு இன்று தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் புதிய வரிச் சலுகைகள் எதுவும் இடம் பெறவில்லை. வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரி செலுத்தும் நடுத்தர வருவாய் பிரிவினர் மற்றும் ஊதியம் பெறுவோருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

2016-2017ஆம் ஆண்டுக்கான இந்த நிதி நிலை அறிக்கை “நான் எழுதும் பரிட்சை” என்று பிரதமர் மோடி அவர்கள் கூறியிருக்கிறார். திரு. ஜெட்லியின் நிதி நிலை அறிக்கை மூலமாக இந்தப் பரிட்சையில் திரு மோடி அவர்கள் ற்றுக்கு று மதிப்பெண்கள் பெற்று முழுமையான வெற்றி பெற்றிருக்கிறாரா என்பதை நிதி நிலை அறிக்கை நடைமுறைக்கு வந்து அது ஏற்படுத்தும் மாற்றங்களையும், விளைவுகளையும் பொறுத்தே கூற முடியும். எனினும் பிரதமர் மோடி அவர்கள் பரிட்சையில் பாஸ் செய்திருக்கிறார் என்றே இப்போதுள்ள நிலையில் சொல்லத் தோன்றுகிறது”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.