ஜே.என்.யூ பல்கலையின் மாணவர் சங்கத் தலைவர், கன்னையா குமார் தேசத்திற்கு விரோதமாக கோஷமிட்டதாக குற்றம்சாட்டப்படும் விவகாரத்தில், அதற்கு ஆதாரமாக, அனைத்து ஊடகங்களாலும் ஒளிபரப்பப்பட்ட வீடியோ, போலியானது என்று இந்தியா டுடே தொலைக்காட்சி, தகுந்த ஆதரங்களுடன் வெளியிட்டது.
இந்நிலையில், ஜோடிக்கப்பட்ட அந்த வீடியோ குறித்த கட்டுரை ஒன்றில், “டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் அதை ஒளிபரப்பியதாக” தி வயர் இணையதளத்தின் நிறுவனரும், செய்தி ஆசிரியருமான சித்தார்த் வரதராஜன் கட்டுரை எழுதினார்.
ஆனால், அந்த கட்டுரை தவறு என்றும் அந்த வீடியோவை டைம்ஸ் நவ் ஒளிப்பரப்பவில்லை என்றும், டைம்ஸ் நவ் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி , தொலைபேசியில் கூறியதை அடுத்து, குறிப்பிட்ட கட்டுரையில் இருந்த விமர்சன வரிகளை நீக்கிவிட்டு, அர்னாபின் விளக்கத்தை மட்டும் வெளியிட்டார் சித்தார்த்.
இதனிடையே, டைம்ஸ் நவ் தொலைக்காட்சியை தவறாக சித்தரித்தற்க்காக, சித்தார்த் வரதாராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டைம்ஸ் நவ், கூறியது.
இதனிடையே , ஜோடிக்கப்பட்ட அந்த வீடியோவை, தொலைக்காட்சியில் ஒளிப்பரபியது மட்டுமல்லாமல், அதனடிப்படையிலயே அன்றைய நிகழ்ச்சி முழுவதையும் அர்னாப் நடத்தி இருப்பது தெரிய வந்ததை அடுத்து, அர்னாப் கோஸ்வாமியின் பித்தலாட்டத்தை தோலுரிக்கும் விதமாக சித்தார்த் வரதராஜன் மற்றொரு கட்டுரை எழுதினார்.
டைம்ஸ் நவ் ஒளிபரப்பிய ஜோடிக்கப்பட்ட வீடியோ பித்தலாட்டம்: சித்தார்த் வரதராஜன்
அது மட்டுமல்லாமல், போலியான வீடியோவை அடிப்படையாக கொண்டு தவறான செய்திகளை வழங்கியதற்காக, அர்னாப் கோஸ்வாமியும், டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் நாட்டு மக்களிடம் 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சித்தார்த் வரதராஜன், தி வயர் சார்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, 48 மணி நேரம் கழிந்தும் டைம்ஸ் நவ் தொலைகாட்சி சார்பில் பதில் எதுவும் வரவில்லை என்ற நிலையில், அந்நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தனக்கு தற்போது உரிமை இருப்பதாக சித்தார்த் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், டைம்ஸ் நவ் நிறுவனத்தை பற்றி தான் தவறாக செய்தி எழுதியதாக டைம்ஸ் நவ் தொலைகாட்சி தன்னை பற்றி மீண்டும் பரப்புரை செய்யுமானால், அந்நிறுவனம் அதற்கான எதிர்விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டி இருக்கும் என்றும் சித்தார்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.a