கதிர்வேல்
ராணுவத்துக்கு ஆள் எடுக்க எழுத்து தேர்வு நடந்தது பிகாரில். ஆயிரம் வாலிபர்களுக்கு மேல் பேனா பென்சிலுடன் துள்ளி வந்தார்கள்.எல்லாரும் முதலில் சட்டையை கழற்றுங்கள் என்றார் அதிகாரி. அதிர்ச்சி அடைந்தாலும் அப்படியே செய்தனர் இளைஞர்கள்.
பேன்டையும் கழற்றுங்கள் என்றார் அதிகாரி. காரணம் புரியாமல், வேறு வழி தெரியாமல் கழற்றினார்கள். ஜட்டியுடன் மைதானத்தில் உட்கார வைத்து வினாத்தாளை கையில் கொடுத்து தேர்வு எழுத சொன்னார் அதிகாரி.
மீடியாவுக்கு தகவல் போய் ஓடி வந்தார்கள். “காப்பி அடிக்காமல் தடுக்க எல்லாரையும் தனித்தனியாக சோதனை போட நேரமாகும். அதனால் இந்த ஈசி ரூட்” என்றார் அதிகாரி.
காப்பி அடிப்பதில் பிகார் உலக பிரசித்தம். தேர்வு நடப்பது எட்டாவது மாடியாக இருந்தாலும் பெற்றோரும் ஆசிரியர்களும் ஸ்பைடர்மேன் பாணியில் சுவர் ஏறி குழந்தைகளுக்கு பிட் வினியோகிப்பார்கள். இனி பிகார் பள்ளி கல்லூரிகளும் ராணுவத்தை பின்பற்ற தொடங்கி விடுமோ என்ற கவலை பெற்றோரை தொற்றி வருகிறது.
கதிர்வேல், மூத்த பத்திரிகையாளர்.