மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரிக்கு மதவெறியர்கள் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.ரோஹித் வெமுலா தற்கொலை, ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் மீதான அடக்குமுறை குறித்து மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். அவருடைய உரை, மதவெறியர்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவதாக அமைந்தது. அதற்குப் பதிலளித்து ஸ்மிருதி இரானி பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டார். அவை அனைத்தும் ஆதாரமற்ற பொய் என்பது அம்பலமாகிவிட்டது. இந்த நிலையில், சீத்தாராம் யெச்சூரியின் ஆற்றல் மிக்க உரையால் ஆத்திரமடைந்துள்ள இந்துத்துவா மதவெறியர்கள் அவருக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளதாக தீக்கதிர் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, சீத்தாராம் யெச்சூரி கூறுகையில், மாநிலங்களவையில் பேசும்போது துர்க்கையை பற்றி தவறாக நான் பேசியதாக கூறி எனக்குகொலைமிரட்டல் விடுத்து வருகின்றனர். என்னுடைய உரை யுடியூப்-ல் வெளியிடப்பட்டுள்ளது. அதை யார் வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளலாம். என்னுடைய உரையில் துர்க்கையை பற்றி எதுவும் கூறவில்லை. ஆனால், தவறான செய்தியை பரப்பி கொலைமிரட்டல் விடுக்கின்றனர். தொலைபேசியில் என்னிடம் அவர்கள் பேசியது அனைத்தும் முட்டாள்தனமானவை; என்னுடைய நாடாளுமன்ற உரையில் துர்க்கை குறித்து தவறாக எதுவும் கூறவில்லை. எனக்கு எதிராகதிட்டமிட்ட அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்’ என்றார். இதுகுறித்து யெச்சூரி போலீசில் புகார் அளித்துள்ளார். தமக்கு மிரட்டல் வந்த தொலைபேசி எண்களை தில்லி மாவட்ட காவல்துறையிடம் அவர் அளித்துள்ளார். இதுகுறித்து டிஜிபி ஜதீன் நார்வால் கூறுகையில், இதுகுறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். மிரட்டல் வந்த எண்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். சைபர் கிரைம் போலீசாரின் உதவியும் நாடப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஜேஎன்யு மாணவ தலைவர் கன்னய்ய குமாரை தேசவிரோத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதை யெச்சூரி வன்மையாகக் கண்டித்தார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 15ம்தேதியன்று அவருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது. ஆபாச எஸ்எம்எஸ்களும் அனுப்பப்பட்டன. ஆயிரத்திற்கும் மேற்பட்டதொலைபேசி அழைப்புகளும், 500க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ்களும் அனுப்பப்பட்டிருந்தன. இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டும் உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் மீண்டும் யெச்சூரிக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.