பாஜக இந்து வாக்குவங்கியை ஒருமுகப்படுத்துவதற்காகவே, ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தேசவிரோத முழக்கங்களை எழுப்பினார்கள் என்று பொய்யாக ஜோடனை செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். டெக்கான் ஹெரால்ட் நாளேட்டின் நிருபர்கள் சஞ்சய் பசக் மற்றும் நம்ராதா பிஜி அஹூஜா ஆகியோருக்கு யெச்சூரி அளித்த நேர்காணல். தீக்கதிருக்காக தமிழாக்கம் செய்தவர் ச. வீரமணி
கேள்வி: ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் எழுப்பப்பட்ட தேச விரோத முழக்கங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
சீத்தாராம் யெச்சூரி: இந்த சம்பவம் நடைபெற்ற நாளிலிருந்தே நாங்கள், நம்பத் தகுந்த சாட்சியங்களுடன், அவ்வாறு முழக்கமிட்டவர்களை அடையாளம் கண்டு, சட்டத்தின்கீழ் தேவையான நடவடிக்கையை எடுங்கள் என்று கூறிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியம் என்பது புனையப்பட்ட ஒன்று என்று தெரிய வந்திருக்கிறது.இந்த விளையாட்டு ஏன்? என்ன நடந்துகொண்டிருக்கிறது? தேசவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நம்பத் தகுந்த சாட்சியத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்றால் நடவடிக்கை எடுங்கள். மாறாக, அப்பல்கலைக் கழகத்திற்கு எதிராக வெறுப்பை உருவாக்கும் விதத்தில் நீங்கள் மதவெறியை விசிறிவிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இது ஜேஎன்யுவுடன் மட்டும் நிற்கப்போவதில்லை, இது ஒரு தொடக்கம்தான்.
கேள்வி: வெளி சக்திகள் சில அரசாங்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்களா?
சீத்தாராம் யெச்சூரி: ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கின் கட்டளைகளுக்கிணங்க இந்திய அரசமைப்புக் குடியரசுக்கு எதிராக கலக நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
கேள்வி: இதனைச் சற்றே விரிவாகக் கூற முடியுமா?
சீத்தாராம் யெச்சூரி: இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இன்ஸ்டிட்யூட், ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகம், … ஆகியவற்றின் சுயாட்சி அமைப்பை மட்டும் குறிவைத்துத் தாக்கவில்லை, அங்கேயெல்லாம் தங்கள் சாதி அரசியலையும் புகுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஹைதராபாத்தில் அவர்களின் குறி, தலித் மாணவர்கள். அவர்களில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய அளவிற்கு மிக மோசமான முடிவினை நோக்கித் தள்ளப்பட்டார். அதே விஷயம் இப்போது ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. தற்போதுள்ள கல்வி அமைப்புமுறையை மாற்றியமைப்பதற்கான சூழ்ச்சியே இது. தற்போதுள்ள மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியக் குடியரசை, அவர்கள் விரும்பும் ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் இந்து ராஷ்ட்ரமாக மாற்ற மேற்கொண்டுள்ள சித்தாந்த நடவடிக்கைகளே இவையாகும்.
கேள்வி : ஜேஎன்யு தேச விரோத நடவடிக்கைகளின் மையமாக மாறியிருக்கிறது என்று கூறப்படுகிறதே.
சீத்தாராம் யெச்சூரி: அரசாங்கம் அப்படித்தான் கூறிக்கொண்டிருக்கிறது. அதற்கான சாட்சியத்தைக் காட்டுங்கள் என்று அவர்களைப் பார்த்து நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவர்கள் இதுவரை தாக்கல் செய்த சாட்சியங்கள் அனைத்தும் பொய்யாகப் புனையப்பட்டவை. அது இப்போது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் உள்ள அனைத்து சக்திகளையும் தாக்குவதற்கு அது ஜேஎன்யுவை ஒரு சாக்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆயினும் இவர்களின் தாக்குதலை எதிர்த்து நிற்கக்கூடிய வல்லமை அதற்கு உண்டு.
கேள்வி : ஜேஎன்யு தேச விரோத நடவடிக்கைகளின் மையம் என்று கூறப்படுவதற்கு உங்கள் பதில் என்ன?
சீத்தாராம் யெச்சூரி: இன்றைய தினம் நாட்டிலுள்ள உயர் அதிகாரவர்க்கத்தினர், பிரதமரின் “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’’ என்கிற திட்டத்தின் உயர் அதிகாரிகள், ஜேஎன்யுவிலிருந்து வந்தவர்கள்தான். பாதுகாப்பு நிறுவனத்தின் மூளையாகச் செயல்படும் ராணுவம் மற்றும் போர்த்தந்திர ஆய்வு இன்ஸ்டிட்யூட் தலைவர் ஜேஎன்யுவிலிருந்து வந்தவர்தான். இந்திய அயலகப் பணி, இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்திய காவல் பணி, ஊடகங்கள், பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்போர், ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரிவோர், இவர்களில் பெரும்பாலானவர்கள் ஜேஎன்யுவிலிருந்து வந்தவர்களேயாகும். அதனால்தான் சர்தார் வல்லபாய் பட்டேல் இந்நிறுவனம் குறித்துக் கூறுகையில், நம் நாட்டை பாதுகாத்திடும் உருக்கு என்று அழைத்தார்.
கேள்வி: பாசிசத்தின் குணங்களில் தேசியவாதம் என்பதும் ஒன்று. இந்தத் திசைவழியில் இந்த அரசாங்கம் பயணிப்பதாகத் நீங்கள் கருதுகிறீர்களா?
சீத்தாராம் யெச்சூரி: அதைத்தான் நாங்கள் மிகச்சரியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஹிட்லர் எப்படி தேசியவாதத்தையும் இனவெறியையும் இணைத்துப் பயன்படுத்தியதைப்போல இவர்கள் மீண்டும் ஆட முன்வந்திருக்கிறார்கள்.
ஹிட்லர் கட்சியின் பெயரை நினைவுகூருங்கள். நேஷனலிஸ்ட் சோசலிஸ்ட் கட்சி. இன்றையதினம், ஐரோப்பாவில், தேசியவாதம் என்பது ஒரு நல்ல வார்த்தை அல்ல. இந்த வார்த்தை அங்கே பிற்போக்கு சக்திகளால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதுதான் இப்போது இந்தியாவிலும் நடந்துகொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வக்காலத்து வாங்குபவர்கள் எல்லாம் தேசியவாதிகள், அதற்கு எதிராக இருப்பவர்கள் எல்லாம் தேச விரோதிகள். இவ்வாறு இங்கே இரு பிரிவுகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கேள்வி: தேசியவாதம் குறித்து அரசாங்கம் பேசினால் அதில் என்ன தவறு?
சீத்தாராம் யெச்சூரி: ஹிட்லர் மற்றும் முசோலினியைப்போல அரசாங்கம் இப்போது தேசியவாதம் என்னும் துருப்புச்சீட்டை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கம் இரு குறிக்கோள்களைப் பெற்றிருக்கிறது. ஒன்று, நம் கல்வி அமைப்பையே மாற்றி அமைப்பது. இந்திய வரலாற்றை, இந்திய புராணக் கதைகளுடன் கலப்பது. இந்தியத் தத்துவஞானத்தை, மதசாஸ்திரமாக மாற்றுவது. அனைத்து முனைகளிலும் அரசாங்கம் தோல்வி கண்டிருக்கிறது அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிட இந்த இரண்டாவது குறிக்கோள் இவர்களுக்குத் தேவை. இந்த அரசாங்கம் , பொருளாதாரமாக இருந்தாலும் சரி, அயல்துறைக் கொள்கையாக இருந்தாலும் சரி, அண்டை நாடுகளுடன் நம் உறவுகளை நல்லவிதமாக உருவாக்கிக் கொள்வதிலும் சரி — எல்லா முனைகளிலும் மிகவும் மோசமான விதத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது.
கேள்வி: மத்தியப் பல்கலைக் கழகங்களில் மூவர்ணக் கொடியை ஏற்றுவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?
சீத்தாராம் யெச்சூரி : மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி, மத்தியப் பல்கலைக் கழகங்களில் 207 அடி அளவிற்கு பெரிய மூவர்ணக் கொடியை ஏற்றுவோம் என்று கூறியிருக்கிறார். செய்யுங்கள், ஆனால், நீங்கள் ஏற்றும் மூவர்ணக் கொடி எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதைவிடப் பெரிய அளவில் நம் இதயத்தில் அதற்கு இடமிருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கேள்வி: இடதுசாரிக் கட்சிகள் வீதிகளுக்கு வருவதில்லை, மாறாக அறிக்கைகள் மட்டும்தான் அளிப்பார்கள் என்ற விமர்சனம் இருக்கிறதே.
சீத்தாராம் யெச்சூரி : ஜேஎன்யுவில் கிளர்ச்சி தொடங்கிய முதல்நாளன்றே நாங்கள் அங்கே சென்றோம். இந்த ஒட்டுமொத்த இயக்கத்தையும் நாங்கள் தொடங்கினோம். பிப்ரவரி 18, வியாழன் அன்று, ஜேஎன்யுவில் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதற்கு எதிராக நடைபெற்ற மாணவர்கள் பேரணி ஆட்சியாளர்களின் அரியணையை ஆட்டம்காண வைத்தது. எவரும் இந்த அளவிற்கு மாணவர்களின் ஆவேச எழுச்சியை இதற்குமுன் பார்த்ததில்லை. பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வீதிகளில் கைகளில் ரோஜாக்களை ஏந்திக்கொண்டு அணிவகுத்து வந்தார்கள். இப்போது அது இடதுசாரி இயக்கம் அல்லது வேறெந்தக் கட்சியின் இயக்கம் என்று எவரும் கூறவேண்டிய தேவை இல்லை. அது ஓர் இயக்கமாக மாறி இருக்கிறது.
கேள்வி: உங்களுக்கு ஆதரவாக யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள்?
சீத்தாராம் யெச்சூரி : ஜேஎன்யு பிரச்சனையை எழுப்பி நாங்கள் குடியரசுத் தலைவரை சந்தித்தோம். ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி… அவர்கள் அனைவருமே எங்களுடன் இருக்கிறார்கள். ராகுல் காந்தி ஜேஎன்யுவிற்கு என்னுடன் வந்தார்.
கேள்வி : மேற்கு வங்கம், அசாம், பின்னர் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களை மனதில் வைத்து, பாஜக இந்தமாதிரியான தந்திரத்தைப் பின்பற்றுவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
சீத்தாராம் யெச்சூரி : நிச்சயமாக. வாக்குகளைப் பெறுவதற்கு, பாஜக மேற்கொள்ளும் ஒரே அரசியல் ஆயுதம், இனவெறியையும் மதவெறியையும் விசிறிவிடுவதுதான். மதவெறி நஞ்சை விதைக்காமல், மதவெறித் தீயை விசிறிவிடாமல், பாஜகவால் மக்களிடம் எதனையும் பெற முடியாது. அதனால்தான் அது இப்போது மிகவும் மட்டரகமான அரசியலை விளையாடிக் கொண்டிருக்கிறது. அசாம், மேற்குவங்கம், கேரளாவில் தாங்கள் பின்பற்றும் இந்த மதவெறி மற்றும் இனவெறி நடவடிக்கைகளின் மூலம் அங்கு கணிசமாக வாழும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இந்துக்களின் வாக்குகளை வெல்ல முடியும் என்று அது நம்புகிறது. இந்து வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்த அது விரும்புகிறது. அவர்களின் முயற்சி பிரிவினையை ஏற்படுத்துதல், உருவாக்குதல் மற்றும் பிளவை ஏற்படுத்துதல் என்பதாகும்.
கேள்வி: அதிதீவிர தேசியவாதம் மற்றும் ஊழல் ஆகியவற்றிற்கிடையே ஒன்றை ஒருவர் தேர்ந்தெடுக்க வேண்டுமானால், அவர் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
சீத்தாராம் யெச்சூரி: இவர்கள் மதவெறியர்கள் மற்றும் இனவெறியர்கள் மட்டும்தான், ஊழல்பேர்வழிகள் அல்ல என்று யார் சொன்னது? ஆட்சிக்கு வந்த முதல் ஆறு மாதங்களுக்குள்ளாகவே, தேஜகூ அரசாங்கம் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது. ஐபிஎல் ஊழல், வியாபம் ஊழல், சத்தீஸ்கர் ரேசன் அரிசி ஊழல், மகாராஷ்டிராவில் ஊழல் — இவை அனைத்துமே காவி கிண்ணத்திலிருந்து கொட்டிய ஊழல்கள்தான். நாடாளுமன்றத்தில் பிரதமரைப் பார்த்து, நீங்கள் டாக்டர் மன்மோகன்சிங்கையும் விஞ்சிவிட்டீர்கள் என்று நான் கூறினேன். ஐமுகூட்டணி ஆட்சியில் அதன் ஏழாவது ஆண்டு காலத்தின்போதுதான் அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் அது ஆளாகியது. ஆனால் தேஜகூ அரசு ஏழே மாதத்தில் ஊழல்களுக்கு ஆளாகியுள்ளது. எனவே இது ஊழல் (எதிர்) தேசிய இனவெறி, மதவெறி என்பதல்ல, மாறாக தேசிய இனவெறி, மதவெறி ஆகியவற்றுடன் ஊழலுடனும், மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளுடனும் கைகோர்த்துக்கொண்டு ஒரே உருவமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நன்றி: தீக்கதிர் (28-2-2016)