அண்மையில் இலங்கை யாழ் பல்கலைக்கழகம் ஆடைக்கட்டுப்பாடு விதித்திருந்தது. இது குறித்து உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். எழுத்தாளர் ரவிக்குமார் தன்னுடைய முகநூலில் ‘இந்துமயமாகும் யாழ் பல்கலைக்கழகம்’ என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தார். அதற்கு எதிர்வினையாற்றிய சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை தமிழர் சுப்பையா ரத்தினம், ரவிக்குமாரை, ‘பற நாயே’ சாதிய வன்மத்துடன் பின்னூட்டமிட்டார். இது இந்திய-இலங்கை எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களிடையே கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா
உடைக் கட்டுப்ப்பாடு குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு பற்றி ரவிக்குமார் வெளியிட்ட பதிவிற்குள் தானாகப் போய் குதித்த Suppaiah Ratnam என்கிற துரை ரத்தினம் //ஈழத்தமிழர்களை அழித்த தமிழ்நாட்டு ரவிக்குமார் போன்ற நாய்களே பொத்தடா வாயை//, //என்னைப்பற்றி கதைக்க என்னடா அருகதை இருக்கு உனக்கு. பற நாயே// என்று வசைபாடியிருக்கிறார். ஆனால் இப்போது //தன்னை ரவிக்குமார் இலங்கை அரசின் கைக் கூலி என்று எழுதியதும் அடக்க முடியாத கோபத்தில் அப்படி எழுதி விட்டேன் // என்று இந்த துரை ரத்தினம் தன்னிடம் கூறியதாக Gowripal Sathiri Sri பதிவிட்டிருக்கிறார்.
துரைரத்தினம் சொல்வதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. அவர்களுக்குள் நடந்த உரையாடலின் அடுத்தடுத்த தொடர்களை கவனித்தால் ரவிக்குமார் அவ்வாறாக எதுவும் சொல்லியிருக்கவில்லை என்பது தெரிகிறது. முகாந்திரமின்றியே ரவிக்குமாரை “பற நாயே” என்று திட்டியிருக்கிற துரை ரத்தினம் //சாதி பற்றிய உள் நோக்கம் எதுவும் இல்லை. .. // என்றும் சாத்திரியிடம் கூறினாராம் . ஆத்திரத்தில் நிதானமிழந்து ஒரு வசைச்சொல்லாக அது வெளிப்படவில்லை. ரவிக்குமார் யார் எவர் என்று அறிந்தேதான் அவரை இவ்வாறு திட்டி அவமதித்திருக்கிறார். இப்போது //அதனை சாதிய அடிப்படையில் அவர் பார்த்தால் நிச்சயமாக மனம் வருந்துகிறேன்// சாத்திரியிடம் தெரிவித்தாராம். இப்போதும்கூட ரவிக்குமாருக்காகத்தான் வருந்தவிருக்கிறாரேயன்றி தன் செயல் குறித்த எவ்வித அருவருப்பும் அவருக்கு தன்னியல்பாகத் தோன்றவில்லை. துரைரத்தினம் தன் இழிசெயலுக்காக வருந்துவது உண்மையெனில் அதை அவர் தனது பக்கத்தில் ஏன் எழுதாமலிருக்கிறார்? பொதுவெளியில் ஒருவரை சாதியின் பெயரால அவமதிக்கிறவர் தன் இழிசெயலுக்காக அந்தரங்கமாக வருந்துவார் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. இதில் சாத்திரியின் சம்ரசம் அல்லது சமா்தானம் ஒருபயனையும் விளைவிக்கப் போவதில்லை.
//நிறப்பிரிகை ரவிக்குமாரை ‘ஊடகவியலாளர்’ இரா. துரைரட்ணம் சாதி பெயரைக் குறிப்பிட்டு முகநூல் விவாதமொன்றில் திட்டியமை குறித்துக் கண்டனங்கள் எழுந்துள்ளன. அதற்காகத் துரைரட்ணம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. இக் கோரிக்கையுடன் நானும் என்னை இணைத்துக் கொள்கிறேன். அரசியல் விடுதலைக்கும் சமூக நீதிக்குமாகப் போராடும் ஈழத் தமிழர் சமூகம் இத்தகைய அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியது தார்மீகக் கடமையாகும்.
அவர் மன்னிப்புக் கேட்கத் தவறும் பட்சத்தில் அவருக்கு நாளை (27.02.2016) சுவிஸில் I.B.C. நிறுவனம் நடாத்தும் விழாவில் வழங்கப்படவிருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதினை I.B.C. மீளப்பெற வேண்டும். அவர் மன்னிப்புக் கேட்காத நிலையில் விருது வழங்கப்படுமாக இருந்தால் அது ஈழத் தமிழ் மக்கள் அனைவருக்கும் அவமானமானதொரு விடயமாக இருக்கும். இக் கோரிக்கையை கலைஞர்கள், எழுத்தாளர்கள் உட்பட தமிழ் மக்கள் கூட்டாக I.B.C. நிறுவனத்திடம் முன்வைக்க வேண்டும் என்பது எனது வேண்டுதல்!// – Sarvendra Tharmalingam
துரைரட்னத்தின் சாதிய வசவு குறித்து சில மேலதிக குறிப்புகள்… பத்திரிகையாளர் என்.சரவணன்
Be an activist, an intellectual, a writer, a politician or all in one like Ravi Kumar and it doesn’t matter, being a Dalit is enough to get an obscene casteist abuse thrown at. If the so called knowledgeable people can do this, what can be expected from others. Strongest condemnations to Ramasamy Thurairatnam.
இன்றைய அரசியல் சூழலில் தன்னைப் போன்றவர்களின் அவசியம் பற்றி ஊடகவியலாளர் துரைரட்ணத்திற்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் எனக்குத் தெரியும்.
இவர் இப்படி ஆத்திரப்பட்டு, தன்னிலை இழந்திருக்கக் கூடாது. சாதிப் பெயரில் ஒருவரை இழிவுபடுத்துவதை எக் காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஊடகவியலாளர் துரைரட்ணம் பேசுகின்ற உண்மைகளும், வைக்கின்ற வாதங்களும் எமக்கு மிக மிக தேவையானவை. உண்மையில் அவர் செய்து கொண்டது ஒருவிதமான ‘தற்கொலை’.
தமிழ் சமூகத்திற்கு பல சொற்கள் குறித்து தெளிவில்லை. மிக மோசமான, சக மனிதரை இழிவுபடுத்தும் சொற்களை சாதரணமாக பேசிக் கொண்டு செல்கின்ற ஒரு முட்டாள் சமூகம் இது.
பெண்களை இழிவுபடுத்துகிறது என்று தெரியாமலே பெண்ணுறுப்பை வசைச் சொல்லாக வைத்திருப்பார்கள். சக மனிதர்களை இழிவுபடுத்துகிறோம் என்று தெரியாமல், சாதிச் சொற்களை வசைச் சொற்களாகப் பயன்படுத்துவார்கள்.
‘பற வேசை’ என்கின்ற சொல்லை ஒரு போதும் பயன்படுத்தியிராத தமிழர்கள் வெகு வெகு குறைவாகத்தான் இருப்பார்கள்.
சில காலத்திற்கு முன்னர் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் பொதுவில் வைத்து இராயதுரை அவர்களை ‘சக்கிலியன்’ என்று ஏசினார்.
‘சக்கிலியன்’ என்பதும் ஒரு சாதிச் சொல் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.
‘சண்டாளன்’ என்கின்ற ஒரு வசைச் சொல் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் அதை எவ்வித தயக்கமும் இன்றிப் பயன்படுத்துவார்கள். ‘கூகிளில்’ இந்தச் சொல்லைக் கொடுத்து தேடினால், பல ஊடகங்களும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம்.
திராவிட இயக்கத்தில் இருந்து வந்த கலைஞர் கருணாநிதி கதை, வசனம் எழுதிய படங்களிலும் ‘சாண்டாளா’ என்று எதிராளி தூற்றப்படுவதைக் காணலாம்.
‘சண்டாளர்’ என்பதும் ஒரு சாதியை குறிக்கின்ற சொல்தான். ‘நளவர்கள் அல்லது நாடார்கள் என்கின்ற சாதிக் குழுமத்தை குறிப்பதற்கு பயன்படுத்திய சொல் இது.
ஒரு பிராமணப் பெண்ணுக்கும், சூத்திர ஆணுக்கும் களவில் பிறந்த சாதியினரை சண்டாளர்கள் என்று மனுதர்மம் சொல்கிறது.
இப்படி சக மனிதர்களை இழிவு செய்கின்ற சொற்களை தமிழர்கள் சாதரணமாக பயன்படுத்தி வருகிறார்கள். சாதிச் சொல் என்பது மறைந்து அது வசைச்சொல் என்பதாக நின்று விட்டது. ஆயினும் இதை வைத்து அந்தச் சொற்களை பயன்படுத்துவதற்கு நாம் சமாதானம் சொல்லி விட முடியாது.
துரைரட்ணம் அவர்களின் செய்கை மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.
சாதியம் குறித்த ஓரளவு விழிப்புணர்வை ஊட்டுவதற்கு இந்தச் சம்பவம் பயன்பட்டது என்பது மட்டுமே இதில் உள்ள ஒரு சிறு ஆறுதல்.
துரைரத்தினம் எமது சமூகத்திலிருந்து ஒதுக்கப்படவேண்டியவர்”: இரவி அருணாசலம், துணை ஆசிரியர் , ஒரு பேப்பர்
ரவிக்குமார் மீது துரைரத்தினம் வீசி எறிந்த வசைச் சொற்கள் ஈழத்துத் தமிழ் ஊடகன் என்று எம்மைச் சொல்ல வெட்கப்பட வைக்கிறது. துரைரத்தினம் ரவிக்குமாரிடம் நிபந்தனை அற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். அது கூடப் போதாது என்றுதான் சொல்வேன். ஆனால் இதையாவது உடனடியாகச் செய்ய வேண்டும். அதைச் செய்யாத பட்சத்தில் அவர் எம் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட வேண்டியவர்.என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.