ஹைதரபாத் பல்கலைக் கழகத்தில் பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபிக்கு எதிராக மாணவர்களை திரட்டினார்கள் என்பதற்காக பல்கலை விடுதியில் இருந்து துரத்தப்பட்டு, உதவித் தொகை நிறுத்தப்பட்டு பழிவாங்கப்பட்ட ஐந்து தலித் மாணவர்களில் ரோஹித் வெமுலாவும் ஒருவர். போராட்டங்களை நடத்திப்பார்த்து துவண்ட அல்லது துவண்ட மனநிலைக்குத் தள்ளப்பட்ட வெமுலா சென்ற மாதம் தற்கொலை செய்துகொண்டார்.
பல்கலை வளாகத்தின் சாதி ஒடுக்குமுறை வெளிச்சத்துக்கு வந்த நிலையில், மாணவர்களிடையே தன்னிச்சையான போராட்டத்தைக் கிளப்பியது. இந்நிகழ்வின் தொடர்ச்சியாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவ அமைப்பின் தலைவர் கன்னய்யா குமார், தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்டதும், மேலும் ஐந்து மாணவர்கள் மீது தேசவிரோத வழக்கு பதியப்பட்டதும் நடந்தது. காவி அமைப்பினரின் பொய்ப்பிரச்சாரங்கள், ஊடகங்களின் அறமற்ற செயல்பாடுகள், மாணவர்களின் போராட்டம் என பிரச்சினை விரிவடைந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியிருக்கிறது. ரோஹித்தின் மரணமும் ஜேஎன்யூ மாணவர்கள் மீதான தேச விரோத வழக்கும் இரு அவைகளிலும் கடும் விவாதத்தை கிளப்பியிருக்கின்றன. மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரின் தலையீடு காரணம் என்ற ஆதாரம் உள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் எதிர்க்கட்சியினர் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை பதவி விலகச் சொன்னார்கள்.
காவி தலைவர்கள் வழக்கமாகக் கையாளும் பாணியில், “பெற்றெடுத்த ஒரு தாயே தன்னுடைய மகனை கொல்லத் துணியமாட்டாள்” என்று உணர்ச்சித் ததும்ப சொன்னார். இவர் பேசிய நேரத்தில் ரோஹித்துக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட பேரணியில் ரோஹித்தை பெற்றெடுத்த உண்மையான தாய், ராதிகா வெமுலா டெல்லி காவல்துறையால் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். அவருடைய இளைய மகனும் உடன் பேரணியில் பங்கேற்றவர்களும் இழுத்துச் செல்லப்பட்டனர். இதை பதிவு செய்யாத, வெகுஜென ஊடகங்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ரோஹித் வெமுலாவின் நினைவேந்தல் நடந்ததாக எழுதின.
தகவல் இங்கிருந்து பெறப்பட்டது.