சாவர்க்கரின் 50-வது நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுவதை ஒட்டி மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அவரை “தலைச்சிறந்த புரட்சியாளர்; இந்திய தேசியத்தின் ஒளிவிளக்கு” என புகழ்ந்திருக்கிறார்.
சாவர்க்கர் உண்மையில் புரட்சியாளரா? அவருடைய புரட்சி எப்படிப்பட்டது? அவர் எப்படி இந்திய தேசியத்தின் ஒளிவிளக்கு ஆனார்? சாவர்க்கர் பற்றிய சிறு துளியை மார்க்சிஸ்ட் க. கனகராஜ் விவரிக்கிறார்…
“சுதந்திரப் போராட்டத்தின் போது ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவராக இருந்த கோல்வால்கர் (குருஜிதான்) ஒரு நாள், ஒரு பொழுது, ஒரு நிமிடம் கூட தப்பித் தவறிக் கூட கனவிலும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதும் கிடையாது; ஈடுபட்டவர்களை வாழ்த்திப் பேசியதும் கிடையாது, இன்னும் சொல்லப்போனால் ஒரு பேச்சுக்காகக் கூட ஆங்கிலேயர்களை விமர்சித்ததும் கூட கிடையாது. தங்களில் யாராவது ஒருவரை சுதந்திரப் போராட்ட வீரராகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக வாஜ்பாய் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதாகச் சொல்லி, அதை பத்திரிகைகள் விசாரிக்கும்போது அது உண்மையல்ல, மாறாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை சொல்லிவிட்டு அவர் வெளியே வந்துவிட்டார் என்கிற விஷயம் வெளியே வந்து, அவர்கள் அவமானப்பட்டு நின்றார்கள்.
சாவர்க்கர் பெரிய சாகசம் செய்து விட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் ‘வீர’ சாவர்க்கர் என்றழைக்கப்பட்டதாகவும் அவ்வப்போது அவர்கள் சொல்வதுண்டு. அவர் இங்கிலாந்தில் இருக்கும்போது ஆங்கில அரசாங்கத்திற்கு எதிராக பேசினார், எழுதினார் என்பதெல்லாம் உண்மை. ஆனால் அவர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு மன்னிப்புக் கடிதங்களை மட்டுமே எழுதிக் கொண்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால், கருணை மனு எப்படியெல்லாம் எழுத முடியும் என்பதற்கு இன்றுவரையிலும் ‘சிறந்த உதாரணமாய்’ திகழ்வது ‘வீர’சாவர்க்கர் ஆங்கில அரசாங்கத்திற்கு எழுதிய கடிதங்கள்தான்.
அவர்களைப் பற்றி மற்றவர்கள் என்ன எழுதினார்கள் என்பதை விட அவர்களுடைய ஆவணங்களில் அவர்கள் சுதந்திரப் போராட்டம் குறித்து என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஷம்சுல் இஸ்லாம், வரிக்கு வரி ஆய்வு செய்து எழுதியிருக்கிறார். இதோ அந்த விபரங்கள்:அவர்களது ஆவணங்களில் உள்ளபடி அவர்களின் எழுத்துக்களில்….
- ஆங்கிலேயர்களை விமர்சித்து எழுதியது – ஜீரோ
- ஆங்கிலேய ஆட்சியாளர்களைப் போற்றிப் புகழ்ந்து எழுதியது – 16 முறை
- ஆங்கிலேய எதிர்ப்புச் சின்னமான வந்தே மாதரம் பாடியது – ஜீரோ
- விடுதலைப் போராட்டத்தை அவதூறு செய்து எழுதியது – 16 முறை
- விடுதலைப் போராட்டத்தைப் பாராட்டி எழுதியது – ஜீரோ
- ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுச் செல்ல வேண்டுமென எழுதியது – ஜீரோ
- ஜாலியன் வாலாபாக், ககோரி குண்டு வழக்கு, கதார் இயக்கம் போன்ற சுதந்திரப் போராட்ட முக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்பு – ஜீரோ
- ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தங்களின் உயிரை அர்ப்பணித்தவர்களைப் பாராட்டி எழுதியது – ஜீரோ
- தியாகிகளின் தியாகத்தை கேவலப்படுத்தி எழுதியது – 10 முறை
- சுதேசியைப் பாராட்டிய குறிப்புகள் – ஜீரோ-இப்படி அடுக்கிக் கொண்டே போக முடியும்.
அவர்கள் விடுதலைப் போராட்டத்தை, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆதரித்தவர்கள் கிடையாது. அதைச் சிறுமைப்படுத்தியவர்கள். அதைச் சீர்குலைக்க முனைந்தவர்கள். இப்போது அதிகார பீடம் அவர்களுக்கு வாய்த்திருப்பதால் தேச பக்தி பற்றிப் பேசுகிறார்கள். தேச விடுதலை இயக்கத்தில் இருந்தவர்களை அப்போது அவமானப்படுத்தினார்கள். இப்போது தேச விரோதிகள் என்கிறார்கள்”.