திரைத்துறையில் எழுதுபவர்களை, திரைக்கதை எழுதுபவர்களாக இருந்தாலும் சரி, பாடல் எழுதுபவர்களாக இருந்தாலும் சரி, அவர்களை ஏதோ கடைநிலை மனிதர்களைப் போல நடத்துவது ஓய்ந்தால் தான், சினிமா என்பது வெற்றிகரமான துறையாக விளங்கும்.
சமீபமாக, எழுத்தாளர்களை மதிக்காத அல்லது புறக்கணித்த திரை இயக்குநர்கள் குறித்த நிறைய சம்பவங்கள் மீடியா வரை வந்தது நாம் அறிந்தது தான். அதுமட்டுமின்றி, நிறைய படைப்பாளிகள் தாங்கள் சந்தித்த சொந்தப்படிப்பினைகளையும் என்னிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.
எழுத்தாளர்கள் பயன்படுத்தப்பட்டுவிட்டு, கறிவேப்பிலைகளைப்போல் தூக்கியெறிப்படுவது கண்கூடாக நடந்து கொண்டிருக்கிறது.
எவ்வளவோ உழைப்பையும், கற்பனையையும், படைப்புவளத்தையும் எழுத்தாளர்களிடமிருந்து சுரண்டிவிட்டு அவர்களைப் புறக்கணிப்பது என்பது, தர்க்கப்பூர்வமாகவும், நியதிப்படியும் நீங்கள் உருவாக்க விரும்பும் படைப்பையும் வெற்றிபெறச் செய்யாது.
உண்மையில், சினிமாவிற்கு எழுதுபவர்கள் தான், அதன் உருவ வெளியை, கட்டுமானத்தை முதலில் உருவாக்கித் தருகிறார்கள். அதில் தான் மற்ற கதாபாத்திரங்களும், கலைஞர்களும் நுழைந்து தங்கள் தங்கள் இடத்தைத் தேர்ந்தெடுத்துப் பணிபுரிகிறார்கள்.
அடிப்படையான, எழுத்துக்கலைஞர்களை அங்கீகரிக்காத சினிமா என்பது எவ்வளவு மூலதனம் போட்டுச் செய்தாலும், எத்தகைய ஸ்டார் நடிகரைக் கொண்டிருந்தாலும், அந்தப் படைப்பு தோல்வியையே தழுவும் என்பது அனுபவப்பூர்வமானது.
உலகில் எல்லாமே, நியூட்டனின் மூன்றாம் விதிப்படி. என்றாலும், அணுகுமுறைகளை, சட்டப்பூர்வமானதாக்கவும், நடைமுறையில் அவற்றை மாற்றியமைக்கவும் சில எழுத்தாளர்கள் தொடங்கியிருக்கிறோம்.
உடனிருங்கள். இனியும், எழுத்தாளர்கள் இருளில் மறைந்திருக்கமாட்டார்கள். இயக்குநர்களே, வெற்றியும் புகழும் தான் உங்கள் இலட்சியமெனில், எழுத்தாளர்களின் நெஞ்சில் அறையாதீர்கள்.
குட்டி ரேவதி, எழுத்தாளர்; திரைப்படபாடலாசிரியர்.