உமர் காலித்தின் தந்தை டாக்டர் இலியாஸ் அவர்களைச் சந்தித்தது இந்தப் பயணத்தில் ஒரு முக்கிய அனுபவம்…
உமர் காலித் ஏதோ காஷ்மீரில் பிறந்த ஒரு காஷ்மீரி போல இங்குள்ள ஸீ டிவி போன்ற வலதுசாரி ஊடகங்கள் சித்திரித்துக் கொண்டிருக்கும் சூழலில் இலியாஸ் டெல்லியைச் சேர்ந்தவர், ‘ஜமாத் ஏ இஸ்லாமியின்’ ‘வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியா’ வின் தலைவர் என்பதெல்லாம் எல்லோரையும் போல எனக்கும் தெரியாது. அவர் கூப்பிடு தூரத்தில் நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு மிக அருகில் இருக்கிறார் என அறிந்தபோது அவரைச் சந்திக்காமல் டெல்லியை விட்டுப் புறப்படுவது எப்படிச் சரியாக இருக்கும்?
அடித்தள முஸ்லிம்கள் பெரிய அளவில் வசிக்கும் ஜாமியா நகரில் தான் நெருக்கடி மிக்க, எளிய முஸ்லிம்கள் நிறைந்து வழியும் ஒரு பகுதியில் அவரது வீடும் அவர் கட்சியின் அலுவலகமும் இருக்கின்றுன.
அவரைச் சந்தி்ப்பதில் பெரிதும் உதவியவர் அக்கட்சியில் உள்ளவரும் சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞருமான சுப்பிரமணியம் அவர்கள். படத்தில் எனது இடப்புறம் இறுதியாக அமர்ந்திருப்பவர்.
டாக்டர் இலியாசிடம் என்ன பேசுவது?
உமரின் அற்புதமான பேச்சு அனைத்து ஊடகங்களிலும் வந்து, அவரையும் அவரது குடும்பத்தையும் கொச்சைப்படுத்திய ஸீடிவி, கோஸ்வாமி போன்றவர்கள் இன்று அம்பலப்பட்டுப் போயுள்ளன.
உமரின் தந்தை இஸ்லாமிய நெறிகளுடன் வாழ்பவர். உமர் இறை மறுப்பை ஏற்றுக் கொண்ட ஒரு மார்க்சீயராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர், அவரது சகோதரி அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றில் பயில்பவர்… என அத்தனை செய்திகளும் மட்டுமல்ல..
உமர் ஒரு சிறந்த மாணவர், அற்புதமான சிந்தனையாளர் என அவரது ஆசிரியர்களால் இன்று ஊடகங்களில் புகழப்படுபவதும் எலோருக்கும் தெரியும். மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி.. இதைவிட வேறென்ன இருக்க இயலும்?
நாங்கள் ஒன்றும் பேசவில்லை..
“நாங்கள் உங்களோடு சார்.. இதை இந்த நேரத்தில் சொல்லிவிட்டுப் போவதைத் தவிர வேறெந்த நோக்கமும் இந்த வருகையில் இல்லை” என்றேன்.
எல்லாத் திசைகளிலும் இருந்து வரும் இந்த அன்பின். தோழமையால் நெகிழ்ந்து இருந்தவராக டாக்டர் இலியாஸ் காணப்பட்டார். அவரிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு 20 நிமிடங்களில் நாங்கள் புறப்பட்டோம்….
இப்படி இன்றைய அரசு ஒரு தாக்குதலை JNU மாணவர்கள் மீது நடத்தி இருப்பது ஒரு முன்கூட்டிய திட்டமிட்ட தாக்குதல்…. இல்லாவிட்டால் எத்தனையோ கூட்டங்கள் JNU வுக்குள் நடக்கும்போது இந்த நிகழ்ச்சிக்குமட்டும் எப்படி இத்தனை ஊடகங்கள் பிப்ரவரி 9 அன்று JNU வளாகத்திற்குள் குவிந்திருந்தன என்றார் இலியாஸ்.
அவரது 7ம் வகுப்புப் படிக்கும் மகள் இந்த ஆண்டு தேர்வுக்குப் போக இயலாததை வழக்குரைஞர் சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.
இலியாசிடம் இருந்து அதற்கும் ஒரு புன்னகைதான் வெளிப்பட்டது. தனது மகளிடம் தினந்தோறும் தொலைபேசும் அவளது வகுப்புத் தோழியை இப்போது பேசக்கூடாது என அவளது பெற்றோர்கள் சொல்லி விட்டனராம். சிரித்துக் கொண்டுதான் இதைச் சொன்னார் டாக்டர் இலியாஸ்.
அந்தச் சிரிப்பில் உறைந்திருந்த துயரத்தை எங்களால் உணர முடிந்தது.
அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கும் அவரது இன்னொரு மகள் வேறொரு பல்கலைக் கழகத்தில் தன் சகோதரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றச் சென்ற போது அங்கிருந்த மாணவர்கள் கையில் சுமந்திருந்த ஆதரவு அட்டைகளோடு தன் மகளை வரவேற்றதை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.
‘இத்தனை சகிப்பின்மைக்கும் பாசிசத் தாக்குதலுக்கும் மத்தியில் இன்று பல்வேறு கருத்து வேறுபாடுகளையும் தாண்டி, மோடி கும்பலின் பாசிசத் தாக்குதலுக்கு எதிராக இன்று எழுந்துள்ள ஒருமித்த ஆதரவு நமக்கு வெற்றி’ என்றேன். அதை அவரும் ஏற்றுக் கோண்டார்.
இத்தனைக்கும் இடையில் அவர் எங்களுக்கு ஒரு தட்டு நிறைய ஆப்பிள் துண்டுகளையும் சுவையான தேநீரையும் தரத் தவறவில்லை. வெளியே வந்த போது அங்கே காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த காவலர்கள் மூவரும் ஒரு புன்னகையோடு எங்களை உற்றுப் பார்த்தனர்.
அவர்களில் ஒருவர் கையில் மெஷின் கன் ஒன்றும் இருந்தது.
அந்த மெஷின் கன் யாரைக் குறி பார்க்க மிஸ்டர் மோடி ?
அ. மார்க்ஸ், எழுத்தாளர்; சமூகக் களப்பணியாளர்.