நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தையை எதிர்க்கட்சிகள் முடுக்கிவிட்டிருக்கும் நிலையில் அதிமுக அமைதியாக இருந்து வருகிறது. கூட்டணி பற்றி பிறகு யோசிப்போம் என்று மட்டும் பொதுக்குழு கூட்டத்தில் பேசினார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இந்நிலையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஸ்ரீரங்கத்தில் வேட்பாளர் பட்டியலை வைத்து சிறப்பு பூஜையை செய்ததாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
கடந்த சில வாரங்களாகவே, சசிகலா தனது குடும்பத்தினருடன் கோவில் கோவிலாக சென்று கொண்டிருக்கிறார். அவர் பழனி முருகன் கோவில் சென்றது குறித்து நமது இணைய தளத்திலயே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில், தனது அண்ணன் சுந்தரவதனத்தின் மகளும், ஜெயா டிவி நிர்வாகியுமான பிரபா சிவகுமாரையும் அழைத்து கொண்டு சசிகலா ஸ்ரீரங்கம் சென்றிருக்கிறார்.
அங்கு சசிகலாவும், பிரபாவும் முதலில் ஸ்ரீரங்கனனை வழிபட்டதுடன், நீல நிற கூடை ஒன்றையும், அவர் முன்னால் வைத்து வழிபட்டுள்ளனர்.
இந்த நீல நிறப்பையில், அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள , அக்கட்சி வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் இருந்ததாகவும், அதனாலயே, சசிகலா ஸ்ரீரங்கம் சென்றதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.