ஜே.என்.யூ மாணவர்கள் தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய, ஹார்வார்டில் பாடங்கள் எடுத்தவரும், முப்பது வருடங்களாக பேராசிரியராக பணிபுரிந்தவருமான , திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி சுகதோ போசின் உரை, பெரும் பாராட்டை பெற்றுள்ளது. டிவிட்டரில் #praisesugato என்ற ஹேஷ் டேக் பிரபலமடைந்துள்ளது. அந்த அற்புதமான உரையின் தமிழாக்கம் கீழே.
*30 வருடங்களுக்கு மேலாக ஆசிரியராக இருந்தவன் என்கிற முறையில், மாண்புமிகு சக உறுப்பினர்கள், என்னுடைய உரையை கேட்பார்கள் என்று நினைக்கிறேன். நம்முடைய எண்ணங்களையும், செயல்களையும் விவாதிக்கவும் ஆலோசிக்கவும் இதை விட சிறந்த மன்றம் எது ?
*மிகச்சிறந்த அறிஞரான ரோஹித் வெமுலாவின் தற்கொலை என்பது நம்முடைய கூட்டு மனசாட்சியை மட்டுமல்லாது மத்திய அரசையும் கூட உலுக்கிவிட்டது. ஆனால், இதயமே இல்லாத அரசாங்கதைதான் நாம் பெற்றிருக்கிறோம் என்பது நம்முடைய துரதிர்ஷடம். சமூகத்தின் ஒடுக்கப்பட்ட விளிம்புகளிலிருந்து, வரும் அழுகுரல்களை கேட்க மறுக்கும் அரசாங்கத்தை பெற்றிருக்கிறோம்.
*அனைவருக்கும் சமூக நீதியை வழங்க உறுதி செய்வதற்கு பதிலாக, பல்கலையில் நிலவும் அமைதியின்மையை உபயோகப்படுத்தி, ஒற்றை தேசியவாதத்தை நிலை நிறுத்தவே இந்த அரசு முயற்சிக்கிறது. அது மட்டுமல்லாமல், அரசுக்கு எதிராக விமர்சனம் முன்வைப்பவர்களை எல்லாம், தேசவிரோதிகள் என்று தன்னுடைய தூரிகைகள் மூலம் தார் பூசி விடுகிறது.
*மேடம் ஸ்பீக்கர்….நான் கம்யூனிஸ்ட் இல்லை. இன்னும் சொல்லப்போனால், மேற்குவங்கத்தில் என்னுடைய தொகுதியில், என்னை எதிர்த்து போட்டியிட்ட மூத்த கம்யூனிஸ்ட் தலைவரை தோற்கடித்தே, எம்பி.ஆகி இருக்கிறேன். ஆனாலும், கம்யூனிஸ்ட்களின் பேச்சுரிமைக்காகவும் நான் குரல் கொடுப்பேன். மார்க்ஸ்-ஸினாலும், அம்பேத்கரினாலும் ஈர்க்கப்பட்டுள்ள அந்த இளம் மாணவர்களின் பேச்சுரிமைக்காகவே இன்று நான் பேசுகிறேன்.
*வெமுலாவின் தற்கொலையை தொடர்ந்து, ஜவஹர்லால் நேரு பல்கலையில், மிகுந்த சங்கடத்தை அளிக்கும் வகையிலான கோஷங்களும், ஆழ்ந்த கவலைகளை ஏற்படுத்தும் வகையிலான போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவை கண்டனத்துக்குறியயவைதான்.
*ஆனாலும், அந்த பல்கலையே ஒரு தேசவிரோத கூடாரம் என்பது போல சித்தரிக்க முயல்வதை கடுமையாக எதிர்க்கிறேன். அது மட்டுமல்லாமல், பல்கலை சுதந்திரத்தில் தலையிடும் காவல்துறை நடவடிக்கைக்கும் கண்டனம் தெரிவிக்க விரும்புகிறேன்.
*சுதந்திரத்தை எதிர்ப்பவர்கள் உண்மையாக தேசியவாதியாக இருக்க முடியாதுதான். ஆனால், சாதி ஒடுக்குமுறையிலிருந்து, வர்க்க வேறுபாடுகளிலிருந்து, பால் வித்தியாசங்களிலிருந்து விடுதலை கேட்பது ஒன்றும் கிரிமினல் குற்றமில்லை.
*நமது மாணவர்களுக்கு, அவர்கள் யோசிப்பதற்காகான, பேசுவதற்கான, கருத்துவாதியாக இருப்பதற்கான அனைத்து சுதந்திரத்தையும் அளிக்க வேண்டும். அப்படியே அவர்கள் தவறு செய்வதற்கும், தவறுகளில் இருந்து கற்பதற்குமான சுதந்திரத்தையும் கொடுக்க வேண்டும்.
*ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் கன்னையா குமாரின் உரையை யூ டியூபில் கேட்டேன். அவற்றில் சிலவற்றை ஒத்து போகிறேன். சிலவற்றில் வேறுபாடு கொள்கிறேன். சுதந்திர போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.க்கு பங்கில்லை என்று கன்னையா சொல்வதை ஒத்து கொள்கிறேன். அதே நேரத்தில், சுதந்திர போராட்ட காலத்தில், கம்யூனிஸ்ட்களும் சில துரோகங்கள் புரிந்தார்கள் என்று சொல்ல விரும்புகிறேன்.
*மேடம்ஸ்பீக்கர்…. மாகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற மிகப்பெரும் தலைவர்களிடம் இருந்து நாம் தேசபற்றை, தேசியவாதத்தை கற்றுகொண்டிருக்கிறோம். மேற்குவங்கத்தில் இருந்து வந்த எங்களை போன்றவர்கள் தாகூர், சித்தரஞ்சன் தாஸ், அரபிந்தோ கோஷ் போன்றவர்களிடம் இருந்து கற்றுகொண்டோம்.
*எந்த தரப்பின் தேசப்பற்றை, தேசியவாதத்தை பாரதீய ஜனதா பின்பற்றுகிறது என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.
*மன்னராட்சி இல்லை தற்போது. இப்போது நாம் ஜனநாயகவாதிகள். ஆனால், எதிர்தரப்பில் அமர்ந்திருக்கும் பாரதீய ஜனதா பேசும் தேசியவாதம் என்பது, மையப்படுத்தப்பட்ட சர்வாதிகாரம் மட்டுமே.
*தேசிய பாடலை இயற்றிய தாகூருக்கு, தேசப்பற்றை பற்றி, தேசியவாதம் பற்றி, கூர்மையான விமர்சனம் இருந்தது. தேசியவாதம் என்பது வரமும், சாபமும் கூட என்ற பார்வை தாகூருக்கு இருந்தது.
*ஜப்பானிலும், அமெரிக்காவிலும் உரையாற்றிய தாகூர், அதில் தேசப்பற்று குறித்து மிக வலுவான விமர்சனங்களை வைத்தது உண்டு. அவரின் அந்த கருத்துக்களை “தேசியவாதம்” என்ற பெயரில் மெக்மிலன், ஒரு சிறிய தொகுப்பாக வெளியிட்டிருக்கிறது.
*என்னுடைய தற்போதைய கவலை என்னவென்றால், தேசியவாதம் குறித்து இத்தனை குறுகலான கருத்தை வைத்திருக்கும் எதிர்தரப்பினர், என்றாவது ஒரு நாள், தாகூரின் இந்த புத்தகத்தை படித்தால், நம்முடைய தேசியப்பாடலை இயற்றிய தாகூரை கூட தேச விரோதி என்று சொல்லிவிடுவார்களோ என்பதுதான்.
*மேடம் ஸ்பீக்கர்….நான் தேசியவாதிதான். தன்னலமற்ற சேவையை வளர்த்தெடுக்கும், அவர்களின் படைப்புணர்வை தூண்டும் வகையிலான நாட்டுப்பற்றில்தான் நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.
*ஆனால், ஆளும்கட்சி நண்பர்கள் எடுத்துரைக்கும் குறுகிய, சுயநலம் மிகுந்த , திமிர் நிறைந்த தேசியவாதத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.
*புதிய ஜெர்மன் தேசியவாதம் என்பது குறுகலான, சுயநலம் மிகுந்த, அதிகாரத் திமிர் நிறைந்ததாக இருக்கிறது” என்று ஐரோப்பாவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பட்ட தருணத்தில் நேதாஜி கூறியதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
*தேவையற்ற சட்டங்களை நீக்க இருப்பதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அவருடைய பட்ஜெட் தொடக்க உரையில் கூறினார். அதை நான் வரவேற்கிறேன். நீக்கப்படும் சட்டங்களில், தேச விரோத சட்டமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.
*தேச விரோத சட்டம் என்பதே, நம்முடைய சுதந்திர போராட்ட வீரர்களை ஒடுக்குவதற்காக, காலனி ஆதிக்கத்தின் போது இயற்றப்பட்ட சட்டம் மட்டுமே.
*எதிர்கருத்து கொண்ட நம்முடைய குழந்தைகளிடம், நம்முடைய மாணவர்களிடம், இளைஞர்களிடம், விவாதிக்க வேண்டுமே தவிர, அவர்களை தேசதுரோகி என்று முத்திரை குத்தி சிதைக்கக் கூடாது. அதுவும் சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை ஆதரமாக வைத்து, தேசவிரோதியாக சித்தரிப்பது மிகத்தவறு.
*பல்கலைகளுக்கு சுதந்திரம் வழங்குங்கள். மாணவர்களுக்கு. வளமான இந்தியாவை உருவாக்க இருக்கும் மாணவர்களுக்கு சுதந்திரம் வழங்குங்கள்.