2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எல். ஸ்ரீதர், டேவிட் கருணாகர் ஆகிய இருவரும் சேஷாச்சலம் வனப் பகுதியில் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டனர். இதில் இவர்களுடன் சென்ற பி. ரமணா என்ற அதிகாரி உயிர் தப்பினார். இவர் ரேணிகுண்டா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் ஆந்திர காவல்துறை 453 பேர் மீது 26 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தது. அடுத்த சில நாட்களில் 351 பேர் இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 288 பேர் தமிழ்நாட்டின் வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்தியாவிலேயே ஒரு கொலை வழக்கில் இத்தனை பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட ஒரே வழக்கு இதுதான் என கூறப்படுகிறது.(பிபிசி தமிழ் செய்தி)
ஆந்திராவில் கொலை மற்றும் செம்மரக் கடத்தல் குற்றங்கள் சாட்டப்பட்டு வழக்குகளை எதிர்கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 288 தமிழர்கள் முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதேபோல், ஆந்திர சிறையில் இருக்கும் தமிழர்கள் விடுதலைக்கு தி.மு.க. தான் காரணம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
உண்மையில் இவர்கள் யாரும் காரணமல்ல, தன்னலமில்லா கிராந்தி சைதன்யா(Andhra Pradesh Civil Liberties Committee – APCLC) என்ற வழக்கறிஞரின் அயரா போராட்டமே தமிழர்களை மீட்டது என்கிறார் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்தியாளர்.
மகாலிங்கம் பொன்னுசாமி
இதுதான் உண்மை:
ஆந்திரா சிறையில் இருந்த 347 தமிழர்களின் விடுதலைக்கு பெரிதும் காரணமாக இருந்தது அரசும் அல்ல, திமுகவும் அல்ல. ஆந்திராவைச் சேர்ந்த கிராந்தி சைத்தன்யா என்ற தன்னலமற்ற மூத்த வழக்கறிஞரின் உழைப்புதான் காரணம். சல்லிப்பைசா கூட கூலியா வாங்கிக்காமல் ஏழை மக்களுக்கு நீதிமன்றத்தில ஆண்டுக்கணக்க வாதாடிய அவர் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன். அப்பாவித்தமிழர்கள் எந்த முகாந்திரமும் இன்றி ஆந்திரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து புதிய தலைமுறையில் செய்தி வெளியான பிறகுதான் தமிழக அரசு அவர்களை கண்டுகொள்ள ஆரம்பித்தது. விடுதலையானவர்களிடம் பேசினால் தமிழக அரசியல்வாதிகளின் கருத்தின் உண்மைதன்மை நன்கு விளங்கும். அனைவரது கூட்டு முயற்சியால்தான் விடுதலை சாத்தியமானது என்றாலும் கிராந்தி சைத்தன்யாவின் தன்னலமற்ற உழைப்பு அதிக மதிப்புக்குரியது.