கன்ஹையா நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டபோது விக்ரம் சவுஹான், யழ்பால் சிங், ஓம் சர்மா ஆகிய வழக்கறிஞர்கள் அவனையும், பத்திரிக்கையாளர்களையும், பேராசிரியர்களையும் தாக்கினர். இந்தியா டுடே தொலைக்காட்சி நிருபர்கள் அவர்கள் மூவரிடமும் ரகசிய கேமரா வைத்துப் பேசினர். அந்த உரையாடலின் சில பகுதிகள் இங்கே.
தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்

விக்ரம் சவுஹான் (வழக்கறிஞர்): அந்தப் பையனை மூன்று மணிநேரம் அடித்தோம்…. மூன்று மணி நேரம்.
இந்தியா டுடே: நீங்களா?
சவுஹான்: அவனை
இந்தியா டுடே: யாரை? பத்திரிக்கையாளர்களையா அல்லது கன்ஹையாவையா?
சவுஹான்: கன்ஹையா. அவனை நிர்பந்தப்படுத்தி ‘பாரத் மாத கி ஜெய்’ என்று சொல்லவைத்தோம்.
இந்தியா டுடே: அவன் சொன்னானா?
சவுஹான்: அவன் சொன்னான். இல்லையென்றால் அவனை அந்த இடத்தைவிட்டு போகவிட்டிருக்க மாட்டேன்.
இந்தியா டுடே: அவன் ‘பாரத் மாத கி ஜெய்’ என்று சொன்னானா?
சவுஹான்: ஆம் அவன் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று சொன்னான். அவனைச் சொல்லவைத்தோம். அவனை மூன்று மணிநேரம் விளாசினோம். அவன் கால்சட்டையில் சிறுநீர் கழித்துவிட்டான். அந்த அளவுக்கு அவனை அடித்தோம்.
இந்தியா டுடே: அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போதும் இதையே திரும்பச் செய்வீர்களா?
யஷ்பால் சிங் (வழக்கறிஞர்): அவனை விடமாட்டோம். அவனை அடிப்போம். நான் ஒரு பெட்ரோல் வெடிகுண்டைக் கொண்டுவருவேன். என் மீது எத்தகைய வழக்குகள் பதிவுசெய்தாலும் கவலை இல்லை. என் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டாலும் சரி, அவனை விடமாட்டேன்…. இல்லை ஒருவன மட்டுமல்ல. எல்லோரையும்தான். என்னை இன்னும் ஆஜர்படுத்தவில்லை. ஷர்மா பெயிலில் வெளியே வந்துவிட்டார். நான் சிறைக்குப் போவேன். படித்தீர்களென்றால் பல விஷயங்கள் இருக்கின்றன. நான் கைது செய்யப்பட்டல் ஜெயிலுக்குப் போவேன் என்று என் பேட்டியில் சொல்லியிருந்தேன். நான் அதே சிறைக்குச் சென்று, கன்ஹையா இருக்கும் அறையில் வைத்தே அவனை அடிப்பேன்.
இந்தியா டுடே: அறையில் வைத்தேவா?
யஷ்பால் சிங்: ஆம். அவன் இருக்கும் அறைக்குச் சென்று அவனை அடிப்பேன். அனேகமாக, நான் பெயில் மனு கொடுக்கமாட்டேன். இரண்டொரு நாட்களுக்கு நான் சிறைக்குச் செல்வேன்.
…
யஷ்பால் சிங்: நாங்கள் பத்திரிக்கையாளர்களையும் அடித்தோம். ஜேன்யூ பேராசிரியர்களை அடித்தோம். இந்த நாட்டில் நீங்கள் வாழ்பவரென்றால் இந்த நாட்டைப்பற்றித்தான் பேச வேண்டும். அது மட்டும்தான் எங்களுக்குத் தெரியும். கன்ஹையாவைப் பற்றிய ஒரு உண்மையைச் சொல்லவேண்டுமென்றால்… போலீஸ் எங்களை முழுமையாக ஆதரித்தனர்.
இந்தியா டுடே: போலீஸ் உங்களை ஆதரித்தனரா
யஷ்பால் சிங்: ஆம்
சவுஹான்: இந்தியா ஒன்று இருந்தால் ஆதரவும் எப்போதும் இருக்கும். சி.ஆர்.பி.எஃப். உட்பட போலீசார் அங்குதான் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள், ‘சார், நல்லது சார்,’ என்றனர். நான், ‘வாருங்கள்’ என்றேன். அவர்கள், ‘நாங்கள் சீருடையில் இருக்கிறோம்… ஆனால் நல்லது, நல்லது’ என்றனர்.
+++
சவுஹான்: பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அதிகம் இல்லை. நூறு முதல் 500 பேர் வரைதான் இருப்பார்கள். அதில் பாதிப்பேர் சலான்களை வைத்துதான் வேலை செய்கின்றனர். … நாங்கள் வெடிகுண்டை எறியலாமென்றிருந்தோம். வெளியிலிருந்தும் பல பையன்கள் வந்திருந்தனர். துவாரகா, ரோஹினி போன்ற இடங்களிலிருந்து வந்திருந்தனர். முகநூல் மூலமாக அவர்களை நான் அழைத்திருந்தேன்.
விஜயசங்கர் ராமச்சந்திரன் ஃபிரண்ட்லைன் பத்திரிகையின் ஆசிரியர்.