ஜவஹர்லால் நேரு பல்கலையில், தேசத்திற்கு விரோதமாக மாணவர்கள் கோஷமிட்டதாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களால் எழுப்பப்படும் குற்றச்சாட்டின் தொடர்ச்சியாக, கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும் தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் தொடர் குரல் எழுப்பி வரும், டி.ராஜாவின் மகள் அபராஜிதா ராஜாவும் ஜவஹர்லால் பல்கலையில் தேசத்திற்கு எதிராக குரல் கொடுத்ததாக கூறப்பட்டது.
இது குறித்து கோவையில் பேட்டியளித்த பாரதீய ஜனதாவின் எச்.ராஜா “அபராஜிதாவை சுட்டுக்கொள்ள வேண்டுமென்று கூறினார்.
எச்.ராஜாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இது குறித்து பாரதீய ஜனதா பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடுவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது “எச்.ராஜாவின் கருத்துக்கும் பாரதீய ஜனதாவிற்கும் தொடர்பில்லை என்றும், இது போன்ற கருத்து சொல்ல யாருக்கும் அனுமதியில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கி பேசுவது ஏற்புடையதல்ல என்றும் வெங்கய்யா குறிப்பிட்டார்.
எச்.ராஜாவின் கருத்து தொடர்பாக அதிருப்தி வெளியிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.பி.யுமான சுப்பராயன், “பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்ற எச்.ராஜா, நாகரீகமாக பேசினால்தான் ஆச்சர்யப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.