“நான் என்னைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டேன், இனி மற்றவர்கள் அதைத் தொடரட்டும்”: உம்பர்தோ இக்கோ மறைவுக்கு எழுத்தாளர் பிரேமின் அஞ்சலி

பிரேம்
ப்ரேம்
ப்ரேம்

எனக்கு மிகப்பிடித்தமான எழுத்தாளர்களின் வரிசையில் ழோர் பெரக், உம்பர்தோ இக்கோ, மிலோராத் பாவிக் என்ற மூன்று பெயர்கள் எப்பொழுதும் இருக்கும். இதில் இக்கோவின் பெயர் அதிக கனமானது. கோட்பாடு, அறிதல் முறை இரண்டிலும் நான் அதிகம் இவரிடம் கற்றிருக்கிறேன்.

அதனைவிட புனைகதையின் பலதளங்களைக் கண்டறிய அவரது கதைகள் எப்போதும் ஊக்கமளிப்பவை. தொடர்ந்து வாசிக்கச் சொல்லும் எழுத்துகள் அவருடையவை.. அவரது இறுதிக் கதையெழுத்தாக அமைந்துவிட்ட Numero Zero (Richard Dixon மொழிபெயர்ப்பில்) நாவலின் இறுதிப் பகுதியில் காணும் ஒரு வரி “நான் என்னைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டேன், இனி மற்றவர்கள் அதைத் தொடரட்டும்.” ஆம் அது தொடரும்.

எனது “கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள்” கதையில் உம்பர்தோ இக்கோ ஒரு பாத்திரமாக தோன்றுவார். தோன்றினாலும் அதில் மறையமாட்டார். இன்று(20-02-2016) மறைந்து விட்டதாகச் செய்தி.

நேற்று இரவு அவரது The Open Work நூலின் பக்கங்களை நள்ளிரவுக்குப்பின் படித்துக்கொண்டிருந்தேன். Analysis of Poetic Language கட்டுரையிலிருந்து குறிப்புகள் தேவைப்பட்டது. காலையில் மாலதி மைத்ரி செய்தி படித்துச் சொன்னார் ஈக்கோ மறைவாம். இனி அடுத்த நூல் என அவரிடமிருந்து எதுவும் இருக்காது இல்லையா. நெடிய வாழ்வுதான், நீக்க முடியாத தாக்கம்,எழுத்துவழிதான் எல்லாம் தொடரும்,இனி.

1996-97 காலப்பகுதியில் ‘கதைசொல்லி’ இதழில் உம்பர்தோ இக்கோ எழுத்துகள் பற்றி நான் எழுதிய கட்டுரையின் சிறு பகுதி இது.

ரோஜாவின் பெயர் – நாவலின் அமைப்பும் எழுத்துச் சுழலும்

இந்நாவல் ஒரு நூலைப் பற்றிய நூலாக எழுதப்பட்டிருக்கிறது. ஒரு கற்பனையான எழுத்தாளன் 1968-இல் Abbe Vallet என்பவரால் மொழிபெயர்த்தும் தொகுத்தும் எழுதப்பட்ட ஒரு நூல் பிரதியைக் கண்டெடுக்கிறான். 1942-இல் வெளியிடப்பட்ட அந்த நூலோ பதினான்காம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் Adso de Melk என்ற பெனடிக்டன் பிரிவைச் சேர்ந்த துறவியால் 1327-இல் இத்தாலியைச் சேர்ந்த ஒரு துறவோர் மடத்தில் நடந்த சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை நினைவு கூர்ந்து தொகுத்து எழுதப்பட்ட குறிப்புகளை மூலமாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. Adso எழுதியது லத்தீன் மொழியில், Vallet எழுதியது பிரெஞ்சு மொழியில் – இப்போதைய எழுத்தாளன் எழுதியது நாம் வாசிக்கும் மொழியில்.

அட்சோ தனது குருவான சகோதரர் வில்லியம்சுடன் இத்தாலியின் ஒரு பகுதியில் அமைந்திருந்த துறவோர் மடம் ஒன்றில் நடக்கும் கொலைகளைத் துப்பறிவதற்காகத் தங்கி இருந்த ஏழு நாட்களில் நடந்தவைகளை நினைவிலிருந்து தனது இறுதிக் காலத்தில் பதிவு செய்வதாக நூலின் பகுதிகள் அமைகின்றன. முதல்நாள், இரண்டாம் நாள் எனத் தொடரும் ஒவ்வொரு பேரத்தியாயமும் விடிகாலை, காலை, பகல் என இரவு வரையான சிறு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுத் தனித்தனியே தலைப்பு வாக்கியங்கள் இடப்பட்டிருக்கின்றன. (தேவன் தாம் செய்த தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்த பின்பு ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். தேவன் ஏழாம் நாளை ஆசிர்வதித்து அதைச் பரிசுத்தமாக்கினார். ஆதியாகமம் இரண்டாம் அதிகாரம், மூன்றாவது வசனம்).

ஆகக் கற்பனையான மூன்றாவது நூலாசிரியன் எழுதியதை Eco என்ற நான்காவது நூலாசிரியன் எழுதிய பிறகு உள்ள பிரதியே நாம் தற்போது வாசிப்பது. பிரதியைப் பற்றிய பிரதியாக, மடிந்து, மடிந்து அமைந்திருக்கும் இப்பிரதி கடைசியாக நம்மைப் பொறுத்தவரை ஒரே பிரதியாகத்தான் வாசிக்கக் கிடைக்கிறது. எழுத்து எத்தனை முறை எழுதப்பட்டாலும் எழுத்தைத்தான் எழுதிச் செல்கிறதே தவிர உலகை அல்ல. எழுத்தின் வெளிக்குள் எவ்வளவு திணித்தாலும் எழுத்துக்குப் புறம்பான எதையும் நுழைத்து விட முடிவதில்லை (ஆழ முகக்கினும் நாழி முகவாது நாநாழி) என எழுத்தாய் விரியும் பிரதி தன் அமைப்பால் ஒரு மெட்டாபிக்ஷன் தன்மை கொண்டுள்ளது.

நூலைத் தேடிச் செல்லும் பயணத்தில் தமது உயிரை இழக்கும் துறவிகள் பற்றியும் நூலைப் பதுக்கி வைத்து உலகின் அறிவிற்கான பரிணாமத்தைத் தடைசெய்ய முயலும் துறிவிகள் பற்றியும், நூல்களால் நிரம்பியுள்ள புதிர்வட்டப் பாதை மண்டபத்திற்குள் பதுக்கப்பட்ட நூல்களைத் திறந்தால் அவற்றிற்குள்ளும் விரிந்து விரிந்து செல்லும் அறிவின் – கற்பனையின் – மனித எண்ணங்களின் – புதிர்வட்டப்பாதைகளே காணப்படுவதையும் எழுதிச் செல்லும் மூலநூலை எழுதியதாகச் சொல்லப்படும் அட்சோவுக்கும் அழிந்து போன மகாமடம் ஒன்றின் இடிபாடுகளுக்கு நடுவே மிஞ்சுவதும் சிதைந்து போன மக்கிப் போன சில நூல் பிரதிகளே.

“At the end of my patient reconstruction, I had before me a kind of lesser library, a symbol of the greater, vanished one: A library made up of fragment, quotations, unfinished sentences, amputed stumps of books.” (The Name of the Rose,1984: 609)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.