அப்சல் குரு தொடர்பாக நிகழ்ச்சி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் எட்டு பேரில் கன்னய்யா குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற ஐவர் தலைமறைவாக உள்ளனர். அதில் உமர் காலித், அதிகம் பேசப்படும் நபராக இருக்கிறார். காரணம் அவர் இஸ்லாமியர் என்பதுதான். அவரை தீவிரவாத ஆதரவாளர் என்ற பொய்ப் பிரச்சாரம் ஒரு சில ஊடகங்களிலும் சமூக ஊடகங்களில் தீவிரமாக பரப்பப்பட்டது. அவர் பகுத்தறிவு பேசும் இடதுசாரி என்று தெரியவந்த பிறகு சற்றே பிரச்சாரங்கள் ஓய்ந்தன. ஆனாலும் சில அடிப்படைவாதிகள் அவர் குடும்பத்துக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்கள். அவர்கள் குறித்து தவறான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். உமர் காலித்தின் தந்தை சிமியில் பணியாற்றியவர் என்பது அதில் ஒன்று. உமரின் தந்தை அதற்கு, தான் நீண்ட வருடங்களுக்கு முன்பே அதாவது உமர் பிறப்பதற்கு முன்பே அந்த அமைப்பில் இருந்து விலகிவிட்டதாக விளக்கம் அளித்திருக்கிறார்.
தங்களுடைய தரப்பு விளக்கங்களை தொடர்ந்து அளித்துக்கொண்டிருக்கின்றனர் உமர் காலித் குடும்பத்தினர். அவருடைய சகோதரி மரியம் பாத்திமா, அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார் . டெல்லியிலுள்ள அவரது குடும்பத்தினருடன் நாள்தோறும் தொடர்பு கொண்டு வரும் உமர் காலித் திடீரென காணாமல் போனது குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளதை இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தி ஹிந்து ஆங்கிலப் பத்திரிகைக்காக இமெயிலில் பேட்டி எடுத்திருக்கிறார் பீட்டர் கிரஃபித். தமிழில்: சேது
தீக்கதிர்(21-02-16) நாளிதழில் வெளியானது. முக்கியத்துவம் கருதி தி டைம்ஸ் தமிழ் மறுபிரசுரம் செய்கிறது.
கேள்வி : உங்களது குடும்பம் மிரட்டப்பட்டு வருகிறது. இந்த மிரட்டல்களின் தன்மையை கூறுவீர்களா? அவை எந்த வடிவத்தில் உள்ளன? வேறு வகையான அச்சுறுத்தல்களும் உள்ளனவா?
பதில் : கடந்த வாரம் டைம்ஸ் நவ் மற்றும்ஜீ தொலைக்காட்சி விவாதங்களில் எனது குடும்பத்தினர் கோபத்திற்குள்ளானது புரிந்து கொள்ளத்தக்கதே. அந்த விவாதத்தில் அவர்கள் தங்களது விளக்கத்தை கூறஅனுமதிக்கப்படவே இல்லை. அந்த விவாதத்தில் காலித் மீது வசை மாறி பொழியப்பட்டது. எனது குடும்பத்தினர் முகநூல்களில் கூறிய விளக்கங்கள் மற்றும் கருத்துகளுக்கு பாலியல் வன்முறை மேற்கொள்வோம் என்றும் ஆசிட் வீசுவோம் என் றும் மிரட்டப்பட்டனர். இதில் எனது 12 வயதுச் சகோதரியும் அடக்கம். இதுவரை என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவளால் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளக்கூட முடியவில்லை. பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வாழும் பகுதியில் உமர் காலித் கொல்லப்பட வேண்டும் என்று சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன என்பதையும் அறிய வருகிறோம். அவரை கொல்வதற்கான முயற்சிகள் குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.
கேள்வி : உமரின் அரசியல் சிந்தனைகள் குறித்து நீங்கள் அறிவீர்களா? அவர் நாத்திகத்தை பிரச்சாரம் செய்வதாக செய்திகள் வந்துள்ளன. இது உங்களது குடும்பத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதா?
பதில் : ஆம். தொடக்கத்திலிருந்தே எங்களது குடும்பம் அவரின் கம்யூனிசத்தையும் நாத்திகத்தையும் அறிந்திருந்தது. அதை வைத்து எங்களது குடும்பம் ஒரு பிளவுபட்ட மற்றும் சிதைந்த குடும்பம் என்று சித்தரிப்பதற்கு பயன்படுகிறது. எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இது குறித்து எங்களது பெற்றோர்கள், இறை நம்பிக்கை உள்ள மற்ற முஸ்லீம்கள் போன்று வருத்தப்படுவார்கள். ஆனால் உமர் எங்களது குடும்பத்தில் ஒருவர். எப்போதும் அவர் எங்களது குடும்பத்தை சேர்ந்தவர்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.எனது தந்தை நியூஸ்24 தொலைக் காட்சிக்கு அளித்த நேர்காணலில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், நாங்கள் அவரை எப்படி மதிக்கிறோம் என்பதற்கான ஆதாரமாகும். கடந்தஜனவரியில் ஒரு விழாவில் குடும்பத்துடன் கூடியிருந்தோம். எனவே அவர் குடும்பத்திலிருந்து பிரிந்து விட்டார் என்றுகூறுவது கேலிக்குரியதாகும். இது எங் களது பெற்றோர்களை வருத்தமடைய வைத்துள்ளது. ஏனெனில் எங்களது குடும்பத்தில் ஒவ்வொருவரும் சுதந்திரமான சிந்தனையுடைய தனிநபர்கள் என்ற முறையில் மதிக்கப்படுகிறோம். உமர் நாத்திகவாதி என்பது குடும்பத்திற்கு இன்னும் வலிமையூட்டக்கூடியதாகும்.
கேள்வி : அப்சல் குரு போன்ற அரசுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர் களை புகழும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்தியா உடைய வேண்டும் என்று வெளிப் படையாக விருப்பத்தை தெரிவித்தாகவும் செய்திகள் வந்துள்ளன. நீங்கள் இந்த நிகழ்வுகளையும் அறிக்கைகளையும் அறிவீர்களா? உங்களது கருத்து என்ன?
பதில் : கடந்த பிப். 9ம்தேதியன்று வளாகத்தில் நடந்தது, எப்போதும் போல மாணவர்களால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியாகும். அந்த சுவரொட்டிகளில் மாணவர்கள் கலாச்சார நிகழ்ச்சிக்கு கூடி போராட்டப் பாடல்களை பாடுவதாக கூறப்பட்டிருந்தது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் அல்லது வேறு எங்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் புதிதல்ல. இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் ஏபிவிபி அமைப்பின் உறுப்பினர்களால் போடப்பட்டது என்பது தெளிவாக அம்பலமாகிவிட்டது. அந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் இதை பொருட்படுத்தவில்லை. அப்சல் குரு நிகழ்ச்சியைப் பொருத்தவரை அவருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையைப் கேள்விக்குள்ளாக்கி விவாதிப்பதில் எந்த தவறும் இல்லை. சட்ட நிபுணர்கள் இந்தக் கேள்வியை பல லட்சம் முறையாவது விவாதித்திருப்பார்கள். அது தேச விரோத வழக்காகவில்லை.
கேள்வி : ஏன் உமர் மறைந்துள்ளார்?
பதில் : உமர் ஏன் மறைந்துள்ளார் என்பது எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் அர்ணாப் கோஸ்வாமி நடத்திய விவாதத்திற்கு பின்னர், உமருடன் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் உமரின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளோம்.
குறிப்பு: அறிமுக முதல் பத்தி தி டைம்ஸ் தமிழ் குழுவால் சேர்க்கப்பட்டது.