தேமுதிகவின் திருப்புமுனை மாநாடு சனிக்கிழமை நடக்க இருக்கிறது. தேமுதிகவை திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி என பல முனைகளில் கூட்டணிக்கு அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். தேமுதிகவின் கூட்டணி யாருடன் அமையப்போகிறது என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். திங்கள்கிழமை நடைபெறவிருக்கும் திமுக வேட்பாளர் நேர்காணல் குறித்த அந்த அறிக்கையில் கூட்டணி பற்றியும் பேசுகிறார்…
“நமது கழகத்தோடு எந்தக் கட்சியும் இணைந்து கூட்டணி அமைத்து விடக் கூடாது; ஆளும் அ.தி.மு.க.வுக்கு எதிராகச் சுனாமியை விட வேகமாகச் சுழன்றடித்து நாளும் பன் மடங்கு பெருகி வரும் எதிர்ப்பு வாக்குகளைச் சிதறிடச் செய்ய வேண்டும்; கழகம் தனிமைப்படுத்தப் பட வேண்டும் என்ற பொல்லாத நோக்கில் அரசின் உளவுத் துறையோடு இணைந்து, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான கற்பனைக் கதைகளை வெளியிட்டு, பொதுமக்களைக் குழப்புவதிலே தொடர்ந்து ஈடுபாடு காட்டி வருகிறார்கள்.
அவர்களே கூட்டணிக்குக் கட்சிகளைச் சேர்க்கிறார்கள். எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை அவர்களே முடிவு செய்கிறார்கள்; இந்தக் கட்சி, இந்தக் கட்சியோடு சேருவதற்கு என்னென்ன நிபந்தனைகள் என்று அவர்களே முடிவு செய்து வெளியிடுகிறார்கள். இந்தக் கட்சி, இந்தக் கட்சியோடு சேருவது, நம்பிக்கை மற்றும் தத்துவ முரண்பாடாக அல்லவா இருக்கும் என்று துவேஷ எண்ணத்தை விதைக்கிறார்கள். ஆளுங் கட்சிக்கு வலியச் சென்று ஆள் சேர்க்கும் வேலையைச் செய்கிறார்கள்; நம்மோடு யாரும் சேர்ந்து விடக் கூடாது என்ற நோக்கில் வெட்டி விலக்கி விட எத்தனிக் கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, தண்ணீரை விட ரத்தம் கெட்டியானது (Blood is thicker than Water) என்பதை அவர்களுடைய ஒவ்வொரு காரியத்தின் மூலமும் உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள்” என்கிற திமுக தலைவரின் அறிக்கையில் தேமுதிகவின் முடிவை காண முடிகிறதா?