கும்பகோண மகாமகம் கோலாகலமாக நடந்துவரும் நிலையில் துப்புரவுப் பணியாளர்கள் கடும் பணிச்சுமையை சுமப்பதாக ஆதித்தமிழர் பேரவை கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து ஆதித்தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மற்றவர்கள் மாற்றமும் ஏற்றமும் பெற்றிட..
துப்புரவுத் தொழிலாளர்கள் நாற்றத்தைச் சுமந்து சாக வேண்டுமா?
தமிழக அரசே!
கும்பகோண மகாமக விழாவில் குவியும், குப்பைக் கழிவுகளுடன் கூடிய மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு துப்புரவுத் தொழிலாளர்களை வற்புறுத்தி ஊர் ஊராய் அழைத்துச் வந்து கொடுமைப் படுத்துவதை உடனே நிறுத்து!
உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை காலதாமதமின்றி முழமையாக நடைமுறைப் படுத்து! சட்டத்தை தீவிரமாக்கு,
உண்ண உணவும், தங்குவதற்கு இடவசதியும், பாதுகாப்பு உபகணமும் இன்றி துப்புரவுத் தொழிலாளர்களை விலங்குகளை விட கேவலமாகக நடத்தி அவர்களின் உயிர்களைக் காவு கொடுக்காதே!
குப்பைக் கழிவுகளை அகற்ற மேலை நாடுகளைப் போல் மனிதர்களை பயன்படுத்தாமல் எந்திரங்களை பயன்படுத்து!
பொதுமக்களே!
சக மனிதர்கள் குப்பைக் கழிவுகளை அகற்றுவதை சகித்துக் கொண்டு வேடிக்கைப் பார்க்காதே! இவர்களையும் சக மனிதர்களாகப் பார்த்திடு! இவர்களின் மறுவாழ்விற்கு குரல்கொடுத்திடு!
முற்போக்காளர்களே!
காவிரி, முல்லைப் பெரியாறு, தமிழ் ஈழம், மீத்தேன், அத்திக்கடவு, அணுஉலை இதுவெல்லாம் பொதுப் பிரச்சினை என்றால் “இது” பொதுப் பிரச்சினை இல்லையா?
இழிவென்று தெரிந்தும் இதை ஏன்? செய்யவேண்டும்?
சட்டத்தால் ஒழிக்கப்பட்ட இழிதொழிலை இவர்கள் செய்வது எதனால்?
தடுத்து நிறுத்தவேண்டிய தமிழக அரசு விரும்பி செய்தாலும் விடலாமா?
சட்டத்தால் ஒழிக்கப்பட்ட குழந்தைத்தொழில், கள்ளச்சாரயம், கஞ்சா விற்பனை போன்றவற்றை விரும்பி செய்தால் விடுமா?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 21-ஆம் தேதி ஆதித்தமிழர் பேரவை கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் செய்திக்குறிப்பு சொல்கிறது.