JNU மாணவர் சங்கத்தின் தலைவர் கண்ணையா குமாரைத் தேசவிரோத வழக்கின்கீழ் கைது செய்யப்பட்டதையொட்டி இந்திய ஊடகங்களில் மையமாக JNU வந்துள்ளது.
காவிகளின் பாசிச ஊடகங்கள், JNUவின் பண்பாட்டினைத் திரித்துகூறி வருகின்றன. விவாதங்களுக்கும் மாற்று கருத்துவேறுபாட்டிற்கும் இடமளிக்கும் JNU வளாகத்தினை இந்துத்துவ கூடாரமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
JNUவினைச் சுற்றி தடுப்புகளை உருவாக்கியுள்ள தில்லிக் காவல்துறை, முழுவளாகத்தினையும் தனது கட்டுபாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளது. பல்வேறு மாணவ சங்கங்களில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களின் மீது FIR போடப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர். மேலும் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்களின் பெயர்கள் காவல்துறையின் பதிவேட்டில் காணப்படுகின்றதென்று பரவலாகப் பேசப்படுகிறது. வளாகத்திற்குள் யார் வந்தாலும் சோதனைக்குட்படுத்தப்பட்டு தான் வரமுடியும்.
இரவுநேரங்களில் விடுதியின் அறைகளுக்குள் காவல்துறை நுழைந்து சோதனையிட்டு வருகிறது. இது பல்கலைக்கழகத்திற்குள் அசாதாரண சூழல்நிலையும் மாணவரிடையே அச்ச உணர்வினை உண்டாக்கியுள்ளது.
உலகில் நடக்கும் அனைத்துப் பிரச்சினைகளை விவாதிக்கும் மாணவ சங்கங்கள், தற்போது தங்களது பல்கலைக்கழகத்தில் நிகழும் பிரச்சினைகளுக்கு நோட்டீஸ் கூட விநியோகம் செய்யமுடியாமல் கையறுநிலையில் உள்ளன. அதன் தலைவர்கள் பலர் தலைமறைவாகியுள்ளனர்.
போரட்டத்தினை JNU ஆசிரியர் சங்கம் கையில் எடுத்துள்ளது. இதற்கு மாணவர்கள் முன்னின்று செயல்பட்டு வருகின்றனர். காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தில் JNUவின் ஆசிரியர்களும் மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்
தொடர்ச்சியாக பல்கலைகழக VC அலுவலகத்தின் முன்பு பொதுக்கூட்டமும் வளாகத்தினுள் மனித சங்கிலி போரட்டமும் நடத்தி வருகின்றனர்.
இடதுசாரி கொள்கையில் இருக்கும் இவ்வளாகம், இந்துத்துவ பாசிசக் கும்பலுக்கு பெரும் பிரச்சினையாக இருந்துவருகிறது. இந்தியாவில் நடக்கும் அனைத்துச் சமூகநீதி பிரச்சினைகளுக்குக் குரல்கொடுப்பதும் போரட்டங்கள் நிகழ்த்துவதும் என்பதான இதன்மரபானது இவ்வாட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. UGCயின் நிதிதொகை நிறுத்தம், WTO சார்ந்த பிரச்சினைகள், ரோகித் வெமுலாவின் பிரச்சினை என அனைத்தினையும் முன்னின்று நடத்தியதில் JNUவின் பங்கு முக்கியமானது. கடந்த வாரம் வரையில் ரோகித் வெமுலாவின் நீதிக்கான போராட்டத்தில் முன்னனியில் நின்றுசெயல்பட்டது JNU. இதனைப் பல்வேறு கட்டங்களில் கொண்டு செல்லும் திட்டத்தில் செயல்பட்டு வந்தது. இதைத் திசைதிருப்பும் உத்தியாக JNUவை பிரச்சினையாகப் பாசிச அரசாங்கம் மாற்றியுள்ளது.
JNUவில் உள்ளவர்கள் தேச விரோதிகள், நாட்டினை துண்டாட நினைப்பவர்கள் என பாசிச ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன. அதற்கு இம்மாதம் 9-ஆம் தேதி நிகழ்ந்த நிகழ்வினை ஊதிப்பெரிதாக்கித் திரும்பத் திரும்ப காண்பிக்கின்றன. அன்று நிகழ்ந்தது என்ன?
9-ஆம் தேதி அப்சல் குருவின் (அவருக்கு நிகழ்ந்த அநீதியான தீர்ப்பு அனைவரும் அறிந்ததே) நினைவு நாளன்று The Country Without Post Office என்ற பெயரில் மாலைநேர கலைநிகழ்ச்சிகள் சில மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்வில் கஷ்மீரின் மீது இந்திய ராணுவம் நிகழ்த்தி வரும் வன்முறையினைக் காட்டும் விதமான புகைப்பட காண்காட்சி, கவிதை பாடுதல், பாடல் பாடுதல் என்ற நிகழ்வுகள் நிகழ்த்த திட்டமிடப்பட்டிருந்தது.
முறையாக அனுமதிபெற்ற இந்நிகழ்ச்சிக்கு AVBPயின் தலையிட்டினால் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் 20 நிமிடங்களுக்கு முன்பு அனுமதி மறுக்கப்பட்டது. அவ்விடத்தில் நிகழ்ச்சியினைத் நடைபெறாமல் இருக்க வளாக பாதுகாவலர்கள் (Security Guards) குவிக்கப்பட்டனர். இதனை மீறி நிகழ்ச்சி நடத்த பல்வேறு மாணவர்கள், மாணவ சங்க பிரதிநிதிகள் கூடினர். கலந்துகொண்ட மாணவர்கள் புகைப்படங்களைக் கைகளில் பிடித்தவாறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சித் தொடர்ந்து நடைபெற்றது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத AVBP மாணவர்கள் இதற்கெதிராக கோஷமிட்டனர். AVBPயின் கோஷங்களுக்கு எதிராக இதில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுடன் கஷ்மீரினைச் சேர்ந்த மாணவர்களும் கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து பேரணி நடைபெற்றது.
இப்பேரணியைத் தடுக்க AVBP முயற்சித்தது. இப்பேரணியில் அப்சல் குருவின் தூக்குக்கு எதிராகவும் கஷ்மீர் மக்களின் உரிமைகளுக்கு ஆதராவாகவும் இந்தியாவிற்கு எதிராகவும் கோஷங்கள் இடம் பெற்றதாகக் கூறப்படுகிறது. அதனால் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களின் மீது தேசவிரோத குற்றசாட்டின் கீழ் FIR போடப்பட்டது. அதில் 11ஆம் தேதி JNU மாணவ சங்க தலைவர் கன்னைய்யா குமாரைத் தில்லிக் காவல்துறை கைதுசெய்தது. பல்வேறு மாணவ சங்கத் தலைவர்கள் தலைமறைவாகினர்.
எந்தவித விசாரணை கமிஷனை அமைக்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் 8 மாணவர்களைக் காலவரையற்ற இடைநீக்கத்தினைச் செய்துள்ளது. மேலும் உள் விசாரணை எதுவும் நிகழ்த்தாமல் நேரடியாகக் காவல்துறையிடம் வாளகத்தினை ஒப்படைத்துவிட்டது பல்கலைக்கழக நிர்வாகம்.
மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கபட்ட கண்ணையா நேற்று(15.02.16) நீதிமன்றத்தில் ஒப்படைக்கபடுவார் என்று பாட்டியாலா நீதிமன்றதிற்கு JNU மாணவர்கள், ஆசிரியர்கள் சென்றனர். அப்போது ஆசிரியர்கள், மாணவர்கள், பெண்கள் உட்பட அனைவரின் மீதும் காட்டுமிரண்டித்தனமான தாக்குதலைக் காவி கும்பல் நிகழ்த்தியுள்ளது. மாலையில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட கண்ணையா குமாருக்கு மேலும் இரண்டு நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் ஒப்பதல் அளித்துள்ளது.
கன்னய்யா குமாரினை விடுதலைச் செய்ய கோரியும் JNU ஆதரவாவும் 40 மத்திய பல்கலைக்கழக ஆசிரிய சங்கங்கள் தங்களது ஆதரவினைத் தெரிவித்துள்ளன. பல்வேறு பகுதிகளிலிருந்து அனைத்து ஜனநாயக சக்திகள் தங்களது ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர். FTII மாணவர்கள் தங்களது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். இடதுசாரிகள், காங்கிரசார், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளும் இப்போரட்டத்திற்கு ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பல்வேறு இடங்களில் காவிமயமாக்கும் அரசாங்கம், JNUவிலும் அதனை நிகழ்த்தி வருகிறது. கண்ணையா குமாரின் கைது என்பது தனிப்பட்ட முறையில் பார்க்காமல் அதற்குள் செயல்படும் அரசியலினைத் தெரிந்து கொள்வது முக்கியமானது. பல்கலைக்கழகம், கல்லூரி முதலியவற்றில் தேர்தல் நடத்துவதற்கு லிண்டோ கமிஷன் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளின் படி தேர்தல் நடக்க வேண்டுமென்று சட்டம் உள்ளது. லிண்டோ கமிஷனின் பரிந்துரைகள் என்பது மாணவர்கள் அரசியலில் ஈடுபடமால் இருக்கும்படி பார்த்துகொள்வதாகும்.
கடந்த பருவத்தில் பொதுக்குழுவில் லிண்டோவிற்கு எதிராக JNUவின் சட்டவரைவின்படி மீண்டும் தேர்தல் நடத்தவேண்டுமென்று கண்ணையா குமார் மற்றும் பலர் சேர்ந்து முடிவு செய்திருந்தனர். UGC நிதி நிறுத்தம், ரோகித் வெமுலா பிரச்சினை முதலிவற்றினைச் சார்ந்தும், JNUவில் போரட்டங்கள் நிகழாமல் இருக்க வேண்டுமென்று இத்தகைய பாசிசத்தன்மையினை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
வளர்க ஜனநாயகம்