கார்ட்டூன் சர்ச்சை: ’பாலாவை நோக்கி கல்லெறிபவர்களுக்கு மதி கண்ணிலேயே படாததின் ரகசியம் என்ன?’

2014-ஆம் ஆண்டு திமுகவிலிருந்து குஷ்பூ விலகியபோது, குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் கார்ட்டூனிஸ்ட் பாலா ஒரு கார்ட்டூன் வரைந்திருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் யாரும் அதை விமர்சிக்கவில்லை. இந்நிலையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அமைந்த பிறகு, அது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்திருக்கிறது. முகநூலில் வெளியான சில கருத்துகள் கீழே…

மதுவிலக்கிற்காக கலைஞர் செய்த அறிவிப்பிற்கு தினமணியில் மதிபோட்ட கார்ட்டூனாகட்டும்

இப்போது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியை ஒட்டி குஷ்புவை வைத்து பாலா என்பவர் போட்டிருக்கும் கார்ட்டூனாகட்டும் அவர்களது மனோ வக்கிரத்தின் சிறுமையையே காட்டுகின்றன. கலைஞரின் அரசியலை எதிர்கொள்ள முடியாதவர்கள் ஒரு ஆபாச செய்கையின் மூலம் அதை எதிர்க்கொண்டுவிடலாம் என்று நம்புகிறார்கள்.

மன நல காப்பகங்களில் சிகிட்சையளிக்கப்படவேண்டியர்கள் ஊடகங்களில் அமர்ந்துகொண்டு தங்கள் நோய்மையை சமூகத்திற்குள் கடத்த முயற்சிக்கிறார்கள்.

கார்டூனிஸ்ட் பாலாவை கண்டிக்கிறேன் என்ற பெயரில் ஆளாளுக்கு அந்த படத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்… பாலாவுக்கு கண்டனம் தெரிவியுங்கள் அந்தப் படத்தைப் புறக்கணியுங்கள்… : (((

கார்ட்டூனுக்கு எதிராக கருத்துவைக்கிற எல்லோரும் தாக்கு தாக்கு என்று தாக்கி இருக்கிறார்கள். அறம் ஆணிவேர் எல்லாம் திடுதிப்பென்று வெளிப்படுகிறது. இது ஒரு நூதனத் தாக்குதல்தான். கார்ட்டூன் இங்கு பிரச்சனை இல்லை அது வெளிக்கிளம்பி இருக்கும் சந்தர்ப்பம் தான் ரொம்ப அவசியமாகி இருக்கிறது நண்பர்களுக்கு. ஒன்று தங்களின் ‘தேவை’ மற்றது அரசியல் அனுதாபம். சரி போகட்டும்.

ஆள் கிடைத்தால் அடிக்கக் கிளம்பிவிடுகிற பழக்கம் புதிதா என்ன. வக்கிரம், மன ஆரோக்கியப் பிரச்சனை, வசை வார்த்தைகள் எல்லாம் கருத்துச் சுதந்திரத்தில் சேர்த்தி பெறாதுதானே?
ஆனமட்டும் நன்றாக வேசம் கட்டுகிறார்கள். என் பாடலில் ஜேசுதாஸ் சிரிக்கிறார்.

அந்தக் கார்ட்டூனில் எந்த ஆபாச அடையாளங்களும் இடம் பெறவில்லை. சரியாச் சொன்னா நேரடியா அர்த்தப் படுத்திக் கொள்கிறவரின் மனநிலையில் தான் வில்லங்கமே.
பொதுப்புத்தியில் என்ன ஏற்றப் பட்டிருக்கிறதோ அதையே சிந்திக்கிறோம். இதிலே படைப்பாளியை தரம்தாழ்ந்துட்டான்னு தாக்குறதெல்லாம் காமெடி ஷோ…

கார்ட்டூனிஸ்ட் பாலா எனக்கு பத்தாண்டு கால நண்பர். அவர் சமூக வலைத்தளங்களில் பிரபலமாவதற்கு முன்பே அவரோடு திமுகவுக்காக நேரிடையாக பலமுறை சண்டை போட்டிருக்கிறேன். அவருடைய கார்ட்டூன்கள் வக்கிரம் நிறைந்தவை என்று விமர்சித்து தனிப்பட்ட முறையில் அவரை சைக்கோ என்றும் திட்டியிருக்கிறேன்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

தினமணியில் மதி என்பவர் கார்ட்டூன் போடுகிறார். யாராவது பார்த்திருக்கிறீர்களா? சிறுபான்மையினரையும் ஒடுக்கப்பட்டோரையும் அவரளவுக்கு வக்கிரமாக சிறுமைப்படுத்தக்கூடிய மனிதர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் கூட இருக்க முடியாது.

எனினும், ஆயிரம் பாலாக்கள் சேர்ந்தாலும் சமமாக முடியாத மதிக்கு எதிரான ஒரு சிறு கண்டனக்குரலை கூட நம்மால் எங்கேயும் காணமுடியாது.

பாலாவை நோக்கி கல்லெறிபவர்களுக்கு மதி கண்ணிலேயே படாததின் ரகசியம் என்ன?

திமுககாரனுக்கு எதற்கெடுத்தாலும் பார்ப்பான், பார்ப்பனீயம்தான் என்று சலித்துக் கொள்ளும் பார்ப்பனீயமயமாகி விட்ட சக சூத்திரர்கள் இனியாவது இந்திய சமூக யதார்த்தம் என்னவென்று விளங்கி கொள்ளட்டும். தேசிய அரசியலில் ஆ.ராசாவுக்கு என்ன நடந்ததோ அதுதான் சூத்திரர்களான பாலாக்களுக்கு எல்லா தளங்களிலும் நடக்கும். பார்ப்பனீயத்துக்கு பல்லக்கு தூக்க தயாரில்லாத அத்தனை பேரும் கழுவில்தான் ஏற்றப்படுவீர்கள்.

பாலா,
இந்த கார்ட்டூனைப் பார்த்ததும் புல்லரித்துப் போய்விட்டது.

உண்மையிலேயே, சமூகத்தின் அடிப்படையானதொரு பிரச்சனையை, இதைத்தவிர வேறு எப்படியும் முன்வைக்க முடியாதா?

உங்கள் மனதின் ஆழத்தில் இருக்கும் அற்பமான கற்பனை ஊற்றை வெளிப்படுத்திக் கொள்ளத்தான், கலைஞரைக் காரணமாக்கி இருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

இந்த கார்ட்டூனில், எதைக் கலைஞரின் பிரச்சனையாக முன்வைக்கிறீர்களோ உண்மையில் அது உங்களின் பிரச்சனை என்பது வெளிப்படையாக அம்பலம் ஆவதேனும் தெரிகிறதா?

இதனால், நீங்கள் முன்வைக்கும் மற்ற நியாயமான அரசியல் சிந்தனை நடவடிக்கைகள் கூட அர்த்தம்பெறாமல் போகின்றன என்பதையும் அறிவீர்களா?

காட்சிப் பண்டங்களாய்ப் பெண்களைத் தொடர்ந்து முன்வைக்கும் ஒரு சமூகத்தில், இனப்போராட்டமும் அதற்கான நியாங்களும் மட்டும் எப்படி வெற்றிபெறும் என்று நினைக்கிறீர்கள்?

இதனால், சமூக மாண்பிற்காகக் களங்களில் போராடிக் கொண்டிருக்கும் மற்ற ஆண்களுக்கும் இழிவு சேர்க்கிறீர்கள் என்பதை எந்த வகையில் குறிப்பிடுவது?

உங்களின் தொடர்ந்த இதுபோன்ற கார்ட்டூன் முன்மொழிவுகள் உங்களுக்கு என்னவிதமான மகிழ்ச்சியைச் சாதித்துவிடப்போகின்றன?

அல்லது, இதன் வழியாக உங்களுக்குக் கிடைக்கும் புளகாங்கிதம், நம் இனத்தின் அறம் என்ற ஆணிவேரின் மீதே அமிலம் ஊற்றுவது என்பதேனும் தெரியுமா?

தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதை வேடிக்கை தான் பார்க்கமுடியும். விமர்சிக்கவோ, ஓடிப்போய் மண்ணைத் தன் தலையில் வாங்கிக்கொள்ளவோ, தடுக்கவோ முடியாது.

என்னே, உங்கள் இலட்சிய மூர்க்கம். இப்படியே தொடருங்கள், கலைச்சேவையை.

உங்களுக்கும் உங்களின் ஆரோக்கியமற்ற மனோநிலைக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இணைய வெளியில் வெளியான விமர்சனங்களுக்கு கார்ட்டூனிஸ்ட் பாலா இப்படி விளக்கம் சொல்லியிருக்கிறார்…

“2014ல் குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியான கார்ட்டூனுக்கு இப்போது போராளிகள் பொங்கல் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

திமுகவில் குஷ்புவுக்கு கருணாநிதியால் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும் பின்னர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு காங்கிரசில் இணைந்ததால் அதே முகியத்துவம் கூட்டணிக்கும் கொடுக்கக்கூடும் என்பதை கிண்டல் செய்தது மட்டுமே என் பார்வை. என் கார்ட்டூன் பலித்திருக்கிறது என்பதுதான் இன்றைய நிலவரம்.

மற்றபடி என் பார்வையில் எந்த தவறான கோணமும் கிடையாது. போராளிகள் தங்கள் கற்பனையை ஆபாசமாக விரித்தால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது.

2014-ஆம் ஆண்டு ரிப்போர்டரில் வெளியான கார்ட்டூன்
2014-ஆம் ஆண்டு ரிப்போர்டரில் வெளியான கார்ட்டூன்

குஷ்புவை செருப்பால் அடித்து விரட்டி பெண்ணியத்தை பாதுகாத்தவர்கள் எல்லாம் இப்போது பொங்குவதுதான் காமெடியாக இருக்கிறது.

போராளிகளுக்கு புராஜெக்ட் எதுவுமில்லையென்றால் இப்படித்தான்.. எதையாவது புராஜெக்ட் ஆக்க முயல்வார்கள்.. சாதிவெறிக்கு பலி கொடுக்கப்படும் பெண்களுக்காக இந்த புராஜெக்ட் போராளிகள் என்றாவது பொங்கியதை பார்த்திருக்கிறீர்களா.. பொங்க மாட்டார்கள்.. ஏனெனில் அதுதான் மீடியா மார்க்கெட்டிங் தந்திரம்”

இந்நிலையில் கார்ட்டூனுக்கு நடிகை குஷ்பூ தன்னுடைய ட்வீட்டரில் சொன்ன கருத்து…

இந்த கார்டூனால் பாதிக்கப்பட்டவர் குஷ்பூ. அவருக்கு கோபம் வருவது இயல்பானதுதான். ஆனால், கோபத்தின் உச்சியில் வழக்கமான ஆணாதிக்க கருத்தாக்கத்திலேயே ‘உங்க வீட்டு அக்கா, அம்மாவை வரைவியா? எனக் கேட்பது எந்த வகையில் சரியானது? மூன்றாம் தரமான கமெண்டுகளை ரீ ட்விட் செய்வது நல்ல உதாரணமா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.