இந்தியாவின் சிறந்த தேசபக்தர்!

மூத்த பெண் பத்திரிக்கையாளரான சீமா முஸ்தஃபா, அர்னாப் கோஸ்வாமிக்கு எழுதிய பகிரங்க கடிதம், தமிழில்; ஆர். விஜயசங்கர் 

நான் ஒரு தயக்கத்துடன்தான்தான் இதை எழுதுகிறேன் அர்னாப். ஏனென்றால், ஒரு தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர் பத்திரிக்கையாளரென்றும் அவருக்குரிய இடத்தைக் கொடுக்கவேண்டும் என்று நீண்டகாலம் நான் நம்பியிருந்தேன். ஆனால் கடந்த சில வருடங்களில் தொலைக்காட்சி ஊடகம் பெற்றிருக்கும் வலிமை எந்த அளவுக்கு உங்கள் மீது தாக்கம் செலுத்தியிருக்கின்றதென்றால், ஒவ்வொரு முறை திரையில் நீங்கல தோன்றும்போதும் உங்களை ஒரு பத்திரிக்கையாளாராக அல்லாமல் தேசத்தைக் காக்கவந்த தேவதூதனைப் போல்தான் முன்னிறுத்திக் கொள்கிறீர்கள். உங்கள் அதீத சிந்தனையில் அன்று எந்தக் குடிமக்கள் வருகிறார்களோ அவர்களைப் பற்றிய மதிப்பீட்டில் இறங்கி, அவர்களுள் ஒருவரை தேசியவாதியாகவும், மற்றொருவரை தேசவிரோதியாகவும் அறிவிக்கிறீர்கள்.

இதுதான் ஒரு பத்திரிக்கையாளரின் வேலையா அர்னாப்? எனக்குத் தெரிந்த இதழியலில் அப்படி இல்லை? என்னை நம்புங்கள். நான் இதழியல் துறையின் அடிமட்டத்திலிருந்து மேல் வந்தவள். பீட் (beat) என்று பத்திரிக்கையாளருக்கு ஒதுக்கப்படும் துறைகள் எல்லாவற்றிலும் பணியாற்றியிருக்கிறேன். மிகவும் புத்திசாலித்தனமான பத்திரிக்கை ஆசிரியர்களுடனும் வேலை செய்திருக்கிறேன். எனக்கு என் கருத்தை எழுதும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் ஒரு குடிமகனின் தேசிய உணர்வைக் கேள்வி கேட்கும் உரிமை நிச்சயமாக இல்லை.
ஆனால் ஒவ்வொரு நாளும் இதைத்தான் செய்கிறீர்கள் அர்னாப். நீங்கள் போலீஸ் தரப்பு குற்றச்சாட்டுகளை நம்பி, அவற்றுக்கு நியாயம் கற்பித்து, நீதிமன்றம் தீர்ப்பை வழங்கும் முன்னரே குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பிடித்து உலுக்கி ஒரு வினோதமான வகையைச் சேர்ந்ந தேசியத்தை உங்களுடைய விற்பனைக்குரிய சிறப்புத் தகுதியாக உருவாக்கி வைத்தூள்ளீர்கள். குற்றவாளி என்று நிரூபணம் வரும் வரையில் ஒருவர் குற்றமற்றவர்தான் என்று நம் சட்டம் சொல்வது உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். பத்திரிக்கையாளராகிய நாம் ஒரு வழக்கின் விவரங்களை எழுதலாம். புலனாய்வினைப் பற்றிய கேள்விகளை எழுப்பலாம். ஆனால் ஒருவரின் தரப்பு வாதத்தை நீதிமன்றம் கேட்குமுன் அவரைச் சுட்டிகாட்டி குற்றவாளி என்று நாம் கூறும்போது எல்லா நெறிகளின் எல்லைகளயும் நாம் மீறிவிடுகிறோம். நீங்கள் அதைத்தான் செய்கிறீர்கள் அர்னாப். ஏனென்றால் நீங்கள் இன்று வலிமையான மனிதர். ஒரு சிலரே உங்களை எதிர்த்து நிற்கும் துணிவுடன் இருக்கிறார்கள்.

ஏதோ நீங்கள் ஒரு ஜெட் போர்விமானத்தின் விமானி அறையில் அமர்ந்துகொண்டு பாகிஸ்தானியர் மீது குண்டுமாரி பொழிவதுபோல் அந்நாட்டிற்கு எதிரான போரை நடத்தும்போது உங்களின் தேசிய உணர்வு ஒரு புதிய உச்சத்தைத் தொடுகிறது. உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் விமானி அறையில் இல்லை. ஒரு தொலைக்காட்சி நிலையத்தின் படப்பிடிப்புத்தளத்தில்தான் கோட்டு, சூட்டு, டையுடன் அமர்ந்திருக்கிறீர்கள். போர் என்பது அசிங்கமானது. கொடூரமானது. அமைதி என்கிற நோக்கம்தான் நம்மை கட்டுப்படுத்துகிறது. போர்ப்படைகளுடன் இணைந்து செல்லும் பத்திரிக்கையாளர்கள் தவிர பிறருக்கு இதுதான் எழுதப்படாத உலகளாவிய விதி. போர்க்களத்திலிருந்து நாம் எழுதவேண்டிய துரதிருஷ்டமான நிலையில் இருக்குபோது நாம் கள விவரங்களைத்தான் எழுதவேண்டும். பாலிவுட் சினிமாவினைப் பற்றிய செய்திபோல் உணர்ச்சிமிகு எழுத்தாக இருக்கக்கூடாது. அனால் நாமே போரை நடத்தும்போது வன்முறையை நியாயப்படுத்துகிறோம் – அதற்கான தூண்டுதல் எதுவாயிருந்தாலும். இதைச் செய்யும்போது நாம் எழுதப்படாத அந்த விதியை நிச்சயம் மீறுகிறோம். நாம் பயிற்சிக்காலத்தில் இருக்கும் காலத்தில் களத்திற்குச் செல்லும்போது உங்களையும் என்னையும் விடப் பெரிய பத்திரிக்கை ஆசிரியர்கள் நமக்கு ஒரு எச்சரிக்கை கொடுப்பார்கள். மதக்கலவரம் நடக்கப்போகிறது என்று யூகித்து எழுதக்கூடாது, அப்படி எழுதினால் அது கலவரம் நடத்த இருப்பவர்களுக்குத் தூண்டுகோலாக இருந்து பெருந்துயரத்தில் முடிந்துவிடும் என்பதுதான் அந்த எச்சரிக்கை. ஒரு பத்திரிக்கையாளனுக்கு ஆன்மா இருந்தே ஆக வேண்டும். அர்னாப், ஆன்மா என்று இங்கு சொல்வதற்கு அடக்கமும், கருணையும் என்பதே பொருள். அப்படிப்பட்ட பத்திரிக்கையாளர்களின் பார்வையில் வன்முறை என்பது துயரமானது. உயிர்களை பலிவாங்குவது. வீடுகளைத் தகர்ப்பது. மனிதர்களை முடமாக்குவது. கொல்வது.

அது உங்களுக்குத் தெரியாது. இல்லை தெரியுமா? பார்வையாளர்களின் கண்கோளங்கள் என் திசைநோக்கி இருக்கும் வரை அல்லது என் முதலாளிகள் என்னை வேலையில் வைத்திருக்கும் வரை எனக்கு இதைப்பற்றியெல்லாம் கவலை கிடையாது என்று சொல்லவருகிறீர்களா?
எனக்கு உங்கள் ஷோவைப் பார்க்கப் பிடிக்காது. _ அதை செய்தி சார்ந்த நிகழ்ச்சி என்று நான் சொல்லாமல் இருப்பதற்கு என்னை மன்னிக்கவும். அதை ஒரு ரியாலிட்டி ஷோ போலத்தான் நடத்துகிறீர்கள் __ ஆனால் சிலர் அதைப் பார்க்கும்படி என்னிடம் சொன்னார்கள். பார்த்த எனக்கு பெரும் அதிர்ச்சி. அந்த நேரத்தில் நான் முற்றிலும் உறைந்துபோனேன். ஒரு இளைஞனை நீங்கள் கலவரப்படுத்திக் கொண்டிருந்தீர்கள். அவன் மீது கோபத்தை உமிழ்ந்துகொண்டிருந்தீர்கள். அவனைப் பேசவிடாமல் ஒரு பயங்கரவாதி, தேசவிரோதி என்று குற்றம்சாட்டிக்கொண்டிருந்தீர்கள். அப்போது போலீஸ் கூறும் குற்றச்சாட்டுகள் என்னவானது என்பீர்கள். உங்கள் ஆதாரங்கள் எங்கே அர்னாப்? அந்த வீடியோவா? உண்மையாகவா? ஒரு மனிதனுக்கு தன்னைக் காத்துக்கொள்ள வாய்ப்புக்கொடுக்காமல், அவனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கே நடத்தாமல் அவனை உலுக்கி எடுத்துவிட்டால் போதுமா?

சீமா முஸ்தஃபா
சீமா முஸ்தஃபா

இந்தியா ஒரு ஜனநாயக நாடுதானே? மக்கள் மன்றம், அரசியல் நிர்வாகம், நீதித்துறை என்கிற அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்று தூண்களுக்காகத்தான் நம் முன்னோர்கள் போராடினர். இதில் ஒரு குடிமகனை நீதித்துறை மட்டுமே குற்றவாளியென்றோ அல்லது குற்றமற்றவர் என்றோ முடிவுசெய்ய முடியும். அதுவரை உங்களைப்போன்ற சக்திவாய்ந்த பத்திரிக்கையாளர்கள் பொறுமை காக்கத்தான் வேண்டும். அவர்களே நீதிபதிகளாகவும், தூக்குக்கயிறை இழுப்பவர்களாகவும் மாறாமல், ஒரு வழக்கின் விவரங்களை மட்டுமே பேசவேண்டும். அல்லது, ஒழுக்கநெறிகளையும் சட்டத்தையும் சதியால் தகர்த்துவிட்டு, உங்கள் கதைகளுக்கு ஒவ்வாதவற்றை அனைத்தின் மீதும் ஏறி மிதிப்பதும் வலிமைக்குப் பொருளா?

முதலில் நீங்கள் அரசாங்கமும், போலீசும் பரப்பிய செய்திகளின் அடிப்படையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவரான கன்ஹையாவைத் துரத்திச் சென்றீர்கள். நீங்கள்தான் இந்தப் பிரச்சினைக்கு முதன்முதலாக எதிர்வினை ஆற்றியதாகக் கூறுகிறீர்கள். அப்படியென்றால் உங்களை விட மீக வீரியமாகவும் (மிகவும் பகுத்தறிவுப்பூர்வமாகவும்) இந்திய அரசியலமைப்புச்சட்டத்திற்கு ஆதரவாக கன்ஹையா ஆற்றிய உரையை ஏன் உங்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பவில்லை? அப்படிச் செய்திருந்தால் நிலைமை கொஞ்சம் சீக்கிரமாகவே மட்டுபட்டிருக்கும். அவர் தேசவிரோதியா இல்லையா என்று ஏற்படுத்தப்பட்ட குழப்பச் சூழலை அந்தக் காட்சி உடைத்திருக்கும். அவர்க்கு நற்சான்றிதழ் வழங்குவதோ, அவர் மீது குற்றம் சாட்டுவதோ நம் வேலையில்லை. ஆனால் உண்மைகள் என்று நீங்கள் காட்டியவையுடன் (பெரும்பாலும் அவை போலீசும், பிற அமைப்புகளும் சப்ளை செய்தவை) கன்ஹையாவின் பேச்சினைக் காட்டும் வீடியோவையும் காட்டியிருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்.
அதற்குப்பிறகு உமர் காலித் என்கிற மாணவனைத் துரத்தினீர்கள். பல்கலைக்கழக வளாகத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள் சரியானவை என்பது யாருடைய வாதமுமல்ல. அதே நேரத்தில் அது இந்தியச் சட்டங்களின் படி தேசத்துரோகக் குற்றம் என்றும் சொல்லமுடியாது. நாம் பத்திரிக்கையாளர்கள் மட்டும்தானே அர்னாப். நாம் விவரங்களை வைத்து மட்டும்தானே பேசமுடியும். இந்திய சட்ட வல்லுனர்களான சோலி சோராப்ஜியும், ஃபாலி நாரிமனும் தேசத்துரோகக் குற்றம் பற்றிப் பேசியிருக்கிறார்கள். பத்திரிக்கையாளர்களாகிய நீங்களும் நானும் அவர்கள் எழுதியிருப்பதைப் படிக்கவேண்டும். நம் நாட்டின் சட்டங்களை மீண்டும் படித்து ஜேன்யூவில் என்ன குற்றம்தான் நடந்தது என்பதை புரிந்துகொள்ள முயலவேண்டும். யார் அதைச் செய்தார்கள் என்று அறிந்துகொள்ள வேண்டும். அல்லது பல்கலைகழகங்கள் மாணவர்கள் விவாதம் செய்வதையும், எதிர்கருத்துகளை வெளியிடுவதையும் ஊக்கப்படுத்தக்கூடாது என்பதுதான் நம் நிலைபாடா? அவர்கள் தேசியம் குறித்த கோணல் பார்வையாலும், வெறுப்பினை உமிழும் மொழியினாலும் முன்னிறுத்தப்படும் பழைமைவாதத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக மட்டும்தான் இருக்க வேண்டுமா? நாம் எல்லோரும் ஒரு காலத்தில் மாணவர்களாகத்தான் இருந்தோம், ஆனால் இன்று கிடைத்திருக்கும் அதிகாரம் அந்த உண்மையை நாம் மறக்கச்செய்கிறது.

மாணவர்களையும், பத்திரிக்கையாளர்களையும் பாட்டியால நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களைப் போன்றவர்கள் தாய்நாட்டின் மீது காட்டும் ஒருவிதமான நேசம் ஏன் விஷத்தை உமிழ்வதாகவும், வன்முறை நிறைந்ததாகவும் இருக்கிறது என்ற கேள்வியை எப்போதாவது எழுப்பியிர்க்கிறீர்களா? பாகிஸ்தானை விட ஜனநாயத்தன்மை கொண்டதாகவும், துடிப்பானதாகவும் இருக்கும் இந்தியாவில் விவாதம் செய்வதும், எதிர்கருத்தைக் கொண்டிருப்பதும் – அதுவும் இளம் மாணவர்கள் – எப்படி நாட்டிற்கு அபாயம் விளைவிக்கும். நீங்கள் தினமும் தேசத்திற்காகப் பேசுகிறீர்கள் என்பதை நான் அறிவேன் (தேசத்திற்காகப் பேசுவது என்பதே ஒரு பிரம்மைதான் என்பதையும் நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும்) அப்படிப் பேசும் நீங்கள் இந்திய தேசியம் என்பதுதான் என்ன என்றும் கேட்க வேண்டும். இந்திய அரசியலைமப்புச் சட்டம் அதனை வரையறை செய்யவில்லை. ஆனால் அது வழங்கியிருக்கும் உரிமைகள், கோட்பாடுகளினால் வலுப்படுத்தப் பட்டிருக்கும் உள்ளுணர்விலும், பார்வையிலும் தேசியத்தை வைத்திருக்கிறது. ஆனால் அர்னாபிய நீங்களும், உங்களை வழிநடத்துபவர்களும் தேசியத்தை ஓர் ஒற்றைக்கலாலாகவும், இரும்புச்சட்டகத்துக்குள்ளும் குறுக்கி வைக்கப் பார்க்கிறீர்கள். அதனை பல கருத்துக்களும் உரிமைகளும், சமத்துவமும், நீதியும், அமைதியும் சங்கமித்து சுதந்திரமாகத் ததும்பும் கடலாகப் பார்ப்பதில்லை. நம் அரசியலமைப்புச் சட்டத்தைச் செதுக்கியவர்கள் அது அப்படித்தான் இருக்க வேண்டுமென்று விரும்பினார்கள். இந்த தேசத்தைக் காப்பவராகிய நீங்கள் இது என் கற்பனை என்று குற்றம்சாட்டுமுன் உங்களுக்கு ஒரு யோசனை சொல்கிறேன். தயவுசெய்து அரசியலமைப்புச்சட்டத்தை உருவாக்குவதற்கான சபையில் நடந்த விவாதங்களையும், அம்பேத்கர், நேரு, காந்தி போன்றோரின் எழுத்துக்களையும் படியுங்கள். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பிரமிக்க வைக்கும் விஷயங்கள் அவை. அவற்றைப் படித்து விட்டபின், நீங்கள் பத்திரிக்கையாளராகிய எங்களைப்போலவே, ஒரு குடிமகனின் தேசிய உணர்வைக் கேள்விக்குள்ளாக்காமல் போகலாம். ஒரு மனிதனுக்கு ஆண், பெண் என்கிற உணர்வு எவ்வளவு இயற்கையானதோ அந்த அளவுக்கு இயற்கையானதுதான் இந்தியர்களின் தேசிய உணர்வும். ஒவ்வொரு ஆணையும் பார்த்து நாம் நீ ஒர் ஆணா என்று கேட்க வேண்டுமா?

யார் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? தேசியவாதிகள், தேசத்துரோகிகள் என்கிற அடிப்படையில் மக்களைப் பிரித்து, இருதுருவங்களாக்க நினைப்பவர்களுக்குத்தான் நீங்கள் உதவிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் புதன்கிழைமையன்று தொலைக்காட்சியில் தோன்றினீர்கள் _ ஆம் சிறிது நேரம் பார்க்கலாம் என்று தொலைக்காட்சிப் பெட்டியை ஆன் செய்தேன் அன்று. ஊடகங்கள் போலித்தனமானவை என்று கத்திக்கொண்டிருந்தீர்கள். நான் உறைந்துபோய்விட்டேன். என்ன ஒரு நடிப்பாற்றல்! பிறகுதான் எனக்குப் புரிந்தது, நீங்கள் உங்கள் நிலைப்பாடை கொஞ்சம் மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது. இரண்டாவது நாளாக பத்திரிக்கையாளர்களைத் தாக்கி, கன்ஹையாவை அடித்து, ஒரு பயங்கரமான சூழலை நீதிமன்றத்தில் உருவாக்கிக் கொண்டிருந்த வழக்கறிஞர்களை (அவர்களை குண்டர்கள் என்று அழைத்தீர்கள்) கடைசியாக கேள்வி கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டீர்கள். நீதிமன்றத்திற்குள்ளும், வெளியிலும் இருப்பவர்களை கலவரப்படுத்த அனுமதித்தபின் எப்படி ஒரு நியாயமான தீர்ப்பை எதிர்பார்க்க முடியும்? இதையெல்லாம் ஓரத்தில் நின்று போலிஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. நீங்கள் யாருக்காகப் பேசுவதாகக் கூறிக்கொண்டிருக்கிறீர்களோ அந்த தேசம் முழுவதுமே இந்த வன்முறையைக் கண்டு கொதித்துப்போயிருந்த இருந்த சூழலில் நீங்களும் அதனை ஒரு பிரச்சினையாக எடுத்துப் பேச வேண்டியிருந்தது. அப்போதும் கூட உங்களின் வகையான தேசியம் துருத்திக் கொண்டிருந்தது.

ஜேன்யூ பிரச்சினையை இடதுசாரி, வலதுசாரி, இடதுசாரி தாராளவாதம் (நீங்கள் கேவலப்படுத்தி சொன்ன வார்த்தை) என்கிற முப்பட்டைக் கண்ணாடியின் வழியே பார்க்கின்றனர் சிலர் என்றீர்கள். போலிசாரையும், வழக்கறிஞர்களையும் விமர்சனம் செய்தீர்கள். ஆனால் உங்கள் தொலைக்காட்சித் திரையில் உங்களின் வகையிலான வினோதமான தேசியத்தைக் குறிக்கும் ஹாஷ்டாக் வாசகங்கள் மின்னிக்கொண்டிருந்தன: ‪

#‎ஒரே‬ இந்தியா, ஒரே குரல்

#’தேசவிரோதப் பிரச்சாரத்தை நிறுத்து என்கிற வாசகங்கள்.

வேற்றுமைகள் நிறைந்த, பன்முகத்தன்மை வாய்ந்த அழகிய இந்த நாட்டை எப்படி ஒரே குரலுக்குள் அடைத்துவிட முடியும்? உண்மையிலேயே நீங்கள் சீரியசாகத்தான் பேசுகிறீர்களா? நீங்கள் என்றாவது உங்கள் ஸ்டுடியோவிலிருந்து வெளியெ வந்து நாட்டின் குறுக்கும் நெடுக்கும் சென்று வேறுபட்ட கருத்துக்களையும். டீக்கடைகளில் நடக்கும் விவாதங்களையும், துடிப்பான, உணர்ச்சிமிகு, சந்தடியான வாதங்களையும் கேட்டிருக்கிறீர்களா? இன்று எதிர்க்கட்சிகள் பாசிஸம் என்று கூறும் கருத்தாக்கத்திற்கும், பிரச்சாரத்திற்கும் ஊட்டமளிக்கும் வேலையைத்தானே உங்களுடைய ஹாஷ்டாக் வாசகங்கள் செய்கின்றன? அரசாங்கத்திற்கு ஆதரவு, அது சொல்வது மட்டுமே ஏற்கத்தக்கது என்ற புள்ளியைச் சுற்றிக் கட்டப்படும் ஒரே கருத்து, ஒரே சிந்தனை என்கிற கோஷம்தான் பாசிஸம். எந்த நாடாயினும் இத்தகைய சிந்தனை ஆபத்தானது என்பதை இன்றைய நிகழ்வுகளும், வரலாறும் நிரூபித்திருக்கின்றன. இதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?

நீங்களும், உங்களுடைய ஹாஷ்டாகுகளும், வன்முறையில் இறங்கிய பிஜேபி எம்எல்ஏ ஓ.பி. ஷர்மாவும், வழக்கறிஞர்களும் தேசவிரோதப் பிரச்சாரம் என்று தொடர்ந்து கூறி வருவதும் பெரும் அபாயம்தான். இப்படிப் பேசித்தான் வழக்கறிஞர்கள் வன்முறையில் இறங்கினார்கள். தேசத்தையும் அரசாங்கத்தையும் ஒன்றாகப் பார்க்கும் பழைய தவறைத்தானே செய்கிறீர்கள்? அரசியல் சார்ந்த அரசாங்கங்கள் சிறியவை. விமர்சனத்தையும், எதிர்க்கருத்தையும் தாங்கும் சக்தியற்றவை. ஆனால் இந்தியா என்கிற நாடு மிகப்பெரியது. பரந்த மனதுடையது. விவாதங்களையும், வேற்றுமைகளையும் நேசிப்பது. அது விமர்சனங்களையும் எதிர்க்கருத்துக்களையும் தாங்கும் சக்தி கொண்டது. இந்திரா காந்தி அவசர நிலையை அமுல்படுத்தினார். அப்போது காங்கிரஸ் தலைவராயிருந்த பரூவா இந்தியாவே இந்திரா; இந்திராவே இந்தியா என்றார். அது அப்படித்தானா? இந்தியா என்பது ஒரு அரசியல்வாதியான இந்திராவுக்கு மேலானது. அரசாங்கங்கள் பாதுகாப்பற்று உணரும்போதுதான் இப்படிப்பட்ட வாய்ப்பாடுகளை முன்னிறுத்துகின்றன. அப்படி நடக்கும்போது உங்கள் ஸ்டுடியோவில் எச்சரிக்கை மணி ஒலிக்க வேண்டும் ஒப்புதல் மணி அல்ல.

நண்பரே, ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு பெரிய பத்திரிக்கையாளாராக இருந்தாலும், உங்களுடைய சானல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், உங்களிடம் எத்தனை கேமராக்கள் இருந்தாலும், நீங்கள் ஒருபோதும் தேசத்தின் சார்பாகப் பேசமுடியாது. எப்படி இந்தியா உங்களுக்காகப் பேச முயற்சிகூட செய்ய முடியாதோ, அது போல!. ஆனால் நீங்கள் இந்தியாவின் பன்முகத்தன்மையிலும், அரசியலமைப்புச் சட்டத்திலும், அதன் ஏழைகளின் நலனிலும், விளிம்புநிலை மக்களின் நலனிலும், சுதந்திரங்கள் மீதும், உரிமைகள் மீதும் இந்நாட்டிற்கு இருக்கும் ஆழமான அன்பிலும் காலூன்றி நேர்மையான, வீரமிக்க இதழியலை நடத்தும்போது இந்தியாவை வலுப்படுத்த முடியும்.

ஆர். விஜயசங்கர், ஃபிரண்ட்லைன் இதழின் ஆசிரியர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.