தமிழக காவல் துறையில் உதவி காவல் ஆய்வாளராக தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை திங்கள்கிழமை அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில், சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை ப்ரித்திகா யாஷினி, உதவி காவல் ஆய்வாளருக்கான பணி நியமன ஆணையைப் பெற்றார்.
இதன்மூலம் நாட்டிலேயே முதல் திருநங்கை உதவி காவல் ஆய்வாளர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.
ப்ரித்திகா அவ்வளவு எளிதில் எஸ்.ஐ. போட்டியில் கலந்து கொள்ளவில்லை. அதில் பங்கு கொள்ளவே பெரிய போட்டியைச் சந்தித்து இருக்கிறார்.
அதை பற்றிய ஒரு பின்கதை சுருக்கம்.
பிப்ரவரி மாதத்தில் எஸ்.ஐ. வேலைக்காக விண்ணப்பித்த ப்ரித்திகாவுக்கு தேர்வு நடக்கும் ஒரு வாரம் வரை நுழைவுச் சீட்டு வரவில்லை. நீதிமன்றத்தை நாடுகிறார் ப்ரித்திகா. தீர்ப்பு வருகிறது. தேர்வுக்கு முந்திய நாள் இரவு ‘நுழைவுச் சீட்டு’ வருகிறது.
ஜூலை 18 அன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. ப்ரித்திகா தேர்ச்சி பெற்று விட்டார். ஆனால், அதிலும் ஒரு குழப்பம். முடிவில் அவருடைய ‘கட் ஆஃப்’ குறிப்பிடவில்லை. அவருடைய பாலினமும் குறிப்பிடவில்லை. மறுபடியும் நீதிமன்றம்.
ஆகஸ்ட் 3,4,5 ஆகிய தேதிகளில் உடற்தகுதி தேர்வு நடக்கிறது. உடற்தகுதி தேர்வுக்கு 3ஆம் தேதிதான் அனுமதி அளிக்கிறது நீதிமன்றம். 4ம் தேதி காலை 6 மணிக்கு தேர்வுக்கு சென்றுவிட்டார் பிரித்திகா. ”கோடிங் சீட் வரல”,”உங்கள எந்த வரிசையில் உட்கார வைக்கிறது?” என்று சொல்லி 12 மணிக்குதான் அவருக்கான தேர்வுகள் நடக்கின்றன. நீளம், தாண்டுதல், குண்டு எறிதல் என எல்லாவற்றிலும் டாப்.
அப்புறம்? 100 மீட்டர் ஓட்டம். ஒரு நொடி தாமதமாக ஓடிவிட்டார். 17.5 நொடியில் ஓட வேண்டியதை 18.5 நொடிகள் ஒடிவிட்டார். இப்போது புரிகிறதா ஒரு நொடியின் மதிப்பு? அதையும் எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்கிறார். “அந்த ஒரு நிமிடத்தை எப்படி கணக்கிட்டார்கள்? அதை அவர்கள் நீதிமன்றத்துக்கு காண்பிக்கட்டும். அப்படியே நான் ஒரு நொடி தாமதமாக ஓடியிருந்தாலும் என்னை அவர்கள் சிறப்பு பிரிவாக கருதி வேலைக்கு நியமிக்க வேண்டும்.”, என்று முன்வைக்கிறார். நியாயம்தானே?.
அந்த நியாயமும, ப்ரித்திகாவின் உறுதியும்தான் அவரை மிக சிறப்பான நிலைக்கு உயர வைத்திருக்கிறது என்றால் அதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது ?
மேலும் அதிக உயரங்களை தொடவும், ஒடுக்கப்பட பிரிவிற்காக பாடுபடும் சிறந்த காவல்துறை அதிகாரியாக உயரவும் தி டைம்ஸ் தமிழ் சார்பில் வாழ்த்துக்கள் ப்ரித்திகா!