“பாகிஸ்தானின் ஏஜென்ட்”!

அ. குமரேசன்
அ. குமரேசன்
அ. குமரேசன்

ஐந்தாறு பேர் தங்களை ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்களாகக் கூறிக்கொண்டு தில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் முன் வந்தார்கள். திடீரென்று “வந்தே மாதரம்” என்று கோஷம் போட்டார்கள். பிறகு மார்க்சிஸ்ட் கட்சியை இழிவுபடுத்தி கோஷம் போட்டார்கள். நுழைவாயிலில் உள்ள பெயர்ப்பலகை மீது கறுப்பு மையால் “பாகிஸ்தான் ஏஜென்ட்” என்று எழுதினார்கள். கற்களை வீசி தாக்கினார்கள். ஓடிப்போனார்கள். ஒடியவர்களில் ஒருவர் மட்டும் சிக்கிக்கொள்ள, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். அவர்கள் ஆம் ஆத்மி கட்சியினர் அல்ல, ஆர்எஸ்எஸ், ஏபிவிபி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்திருக்கிறது. வேறு கட்சியைச் சேர்ந்தவர்களாகச் சொல்லிக்கொண்டது மட்டுமல்ல, இதற்கான ஒரு பின்னணியும் போலியாகவே இருந்திருக்கிறது.

திடீரென்று தில்லி காவல்துறையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கிலிருந்து நாட்டின் முக்கிய காவல்துறைகளுக்கு ஒரு எச்சரிக்கைத் தகவல் அனுப்பப்படுகிறது. தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் பேரவைத் தலைவராக மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரான கன்னையா குமார் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரும் வேறு சில மாணவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

பல்கலைக்கழக வளாகத்தில் சிலர் பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுப்பியதாகக் கிளப்பிவிடப்பட்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. முகம் காட்டாமல் முழக்கம் எழுப்பியவர்கள் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்களே என்று தெரியவந்திருக்கிறது. பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனக் குரல் வலுவாக ஒலிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, கன்னையா குமார் தவிர்த்து மற்றவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தில்லி காவல்துறை டுவிட்டர் கணக்கில் அனுப்பப்பட்ட எச்சரிக்கைத் தகவல் என்ன தெரியுமா? “பாக் ஸ்டேண்ட்ஸ் வித் ஜேஎன்யு” (ஜேஎன்யு-வுடன் பாக் நிற்கிறது) என்று, பாகிஸ்தானின் லஸ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஹஃபீஸ் சையத் என்பவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு செய்திருப்பதாகவும், ஆகவே அதிகபட்ச கண்காணிப்போடு இருக்க வேண்டும் என்றும் அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டிருந்தது. “பாகிஸ்தான் ஆதரவாளர்களான ஜேஎன்யு-வினருக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பரப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று ஹஃபீஸ் சையத் டுவிட்டியிருப்பதாகக் காவல்துறையின் எச்சரிக்கைத் தகவலுடன் மேற்கோள் காட்டப்பட்டிருக்கறது.

ஆனால், அந்த ஹஃபீஸ் சையத் என்பவர் பெயரால் உள்ள டுவிட்டர் கணக்கே போலியானது என்று தெரியவருகிறது! சமூக வலைத்தளங்கள் பற்றி அறிந்தவர்களும், அவற்றின் தொழில்நுட்பங்களைப் புரிந்துவைத்திருப்பவர்களும் உடனே தங்களது கணக்குகளில் “இது போலிக்கணக்கு, அதை உறுதிப்படுத்தாமல் எப்படி தில்லி காவல்துறை இப்படியொரு எச்சரிக்கையை அனுப்பியது” என்று சரமாரியாகக் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். டுவிட்டர் தளத்தின் முகவரி தேடல் வசதியைப் பயன்படுத்தி, ஹஃபீஸ் சையத் பெயரைத் தட்டச்சு செய்து தேடினால் அப்படியொரு கணக்கே திறக்கமாட்டேனென்கிறது! கணக்கில் இருந்தால் அல்லவா திறப்பில் வரும்! இது அம்பலமானதைத் தொடர்ந்து அதைத் தொடர்ந்து காவல்துறையின் அந்தப் பதிவு இப்போது நீக்கப்பட்டிருக்கிறது! அதற்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் அந்தப் பதிவின் அடிப்படையில் ஜேஎன்யு மாணவர்கள் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் என்று கருத்துக்கூறிவிட்டார்!

உண்மையிலேயே பயங்கரவாதிகளின் ஊடுறுவல் சதிகள் பற்றிய ரகசியத் தகவல்கள் கிடைக்கிறபோது அத்தகவல்கள் உடனுக்குடன் உளவுத்துறைகளுக்கிடையேயும் காவல் அமைப்புகளுக்கிடையேயும் பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை, இதில் சரியான ஒருங்கிணைப்பு இல்லை என்று ஒவ்வொரு தாக்குதலின்போதும் சுட்டிக்காட்டப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், ஜேஎன்யு மாணவர்கள் பற்றிய போலியான ஒரு தகவலை உடனே பரப்புவதில் தில்லி காவல்துறை இவ்வளவு வேகம் காட்டியது ஏன்? காவல்துறைக்குள் மதவாத அரசியல் கறை படிந்தவர்கள் ஊடுவியிருப்பதற்கு இது ஒரு சாட்சியம். அவர்களுக்குப் பதவி உயர்வுகள் வழங்கப்படலாம், அல்லது பிற்காலத்தில் தேர்தல்களில் வேட்பாளர்களாக நிறுத்தப்படலாம்!

போலியாகத் தயாரிக்கப்பட்ட கணக்கு புறப்பட்ட இடம், பாகிஸ்தான் மீதான பகைமை உணர்வை விசிறிவிட்டுக்கொண்டே இருப்பதில் அக்கறையுள்ள உள்ள, மனதில் மதவாத அரசியல் புகுந்த ஒருவரது கணினியாகத்தான் இருக்கும் என்று எளிதில் ஊகிக்கலாம். ஜேன்யு மாணவர்களைக் கைதுசெய்வதில் காட்டப்பட்ட அவசரம், இந்தப் போலிக்கணக்கை வடிவமைத்தவர் யார் என்பதைக் கண்டுபிடிப்பதில் காட்டப்படுமா? மக்களிடையே பகைமையையும் பதற்றத்தையும் தூண்டிவிடுவதும் தேசத்துரோக நடவடிக்கையே அல்லவா?

ஜேஎன்யு போராட்டத்திற்கு யார் ஆதரவு தெரிவித்தாலும் அவர்களும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்தான் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதே இந்தப் போலிக்கணக்கின் நோக்கம் என்பது தெளிவு. அந்த நோக்கத்தைத்தான், மார்க்சிஸ்ட் கட்சி பெயர்ப்பலகை மீது “பாகிஸ்தானின் ஏஜென்ட்” என்று எழுதித் தாக்கிவிட்டு ஓடிப்போகிற “தேசபக்தி” வெளிப்படுத்துகிறது!

பல்கலைக்கழக மாணவர்களோடு கலந்துநின்று பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியது, இல்லாத ஒரு டுவிட்டர் கணக்கில் விஷமத்தனமான ஒரு கருத்தைப் பதிவு செய்தது, மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பாக ஆம் ஆத்மி கட்சியின் பெயரைச் சொல்லிக்கொண்டு கூடியது… என்று எல்லாவற்றிலும் ஏன் ஒரு பொய்மை? பல்கலைக்கழக வளாகத்தைக் கைப்பற்றுவதற்காகவா? அப்படியொரு நோக்கம் இருப்பதில் தவறில்லை, ஆனால் அதை நிறைவேற்றும் வழி அனைவருக்குமான கல்வி உரிமைகளுக்கா வாதாடுவதும் மாணவர் பிரச்சனைகளுக்காகப் போராடுவதும் அல்லவா? அதைவிடுத்து இப்படியான குறுக்கு வழியில்தான் செல்வீர்கள் என்றால் அனைவருக்கமான கல்வி உரிமையை ஏற்க முடியவில்லை, மாணவர் பிரச்சனைகளுக்காகப் போராட மனமில்லை என்றுதானே அர்த்தம்?

அ.குமரேசன், தீக்கதிர் நாளிதழின் பொறுப்பாசிரியர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.