ஜவர்ஹலால் நேரு பல்கலைகழக மாணவர் அமைப்பின் தலைவர் கன்னய்யா குமார் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராடி வருகின்றனர்.
மாணவர்களின் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆதரவு தெரிவித்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்த சிலர் கட்சி பலகை மீது ‘பாகிஸ்தானின் ஏஜெண்ட்’ என எழுதிவிட்டுச் சென்றனர்.
இந்நிலையில் சீதாராம் யெச்சூரிக்கு கொலை மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்பு வந்ததாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் உள்ள சிபிஎம் அலுவலகத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர் யெச்சூரி செய்வது மிகவும் தவறான செயல் என்றும், அவர் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மிரட்டியதாக கூறி புகார் அளித்திருக்கின்றனர்.
இரவு 10.30 மணி முதல் 1 மணி வரை, மூன்று தொலைபேசி அழைப்புகள் வந்தாக சிபிஎம் அலுவலக பணியாளர் தெரிவித்துள்ளார். மேலும் தொலைப்பேசியில் மிரட்டல் விடுத்தவர், தான் ‘ஆம் ஆத்மி பல்வீர் சேனா’ அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறியதாகவும் பணியாளர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி. ராஜாவுக்கும் கொலை மிரட்டல் வந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து உள்துறை அமைச்சரிடன் பேச இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.