சாதி ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்திட மத்திய-மாநில அரசுகள் சிறப்பு சட்டம் இயற்றக் கோரி தருமபுரி மாவட்ட அனைத்து பெண்கள் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார் பில் சிறப்பு மாநாடு சனிக்கிழமை நடை பெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்க மாநில துணைத் தலைவர் என்.அமிர்தம் தலை மை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ். கிரைஸா மேரி வரவேற்றார். அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி துவக்கி வைத்துப் பேசினார். இம்மாநாட்டில் உரையாற்றிய மாதச் சங்கப் புரவலர் பிருந்தா காரத்,“காதல் திரும ணம் செய்யும் பெண்களை சாதி ஆணவத்துடன் கொலை செய்கின்றனர். ஆனால், இந்த வன்முறை குறித்து அரசு வழக்குப் பதிவு செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது” என்றார்.
சாதி ஆணவக் கொலைகள் இந்தியாவில் தான் அதிகம் நடக்கிறது. சாதி, மதத்தின் பெயரால் சமூகத்தில் காதல் என்ற வார்த்தை குற்றமாக பார்க்கப்படுகிறது. இணையரை தேர்ந்தெடுக்கும் உரிமை ஆண், பெண் இருவருக்கும் உள்ளது. எந்த சாதியில் இருந்தும் எந்த மதத்திலிருந்தும் இணையரை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு. உயர் சாதிப் பெண்ணை காதல் திருமணம் செய்யும் போது ஆண் குடும்பத்தின் மீதும் அவரது சமூகத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கின்றனர். அரசியல் சட்டத்திற்கு விரோதமாக கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள்.
சில அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக் காகவும் பயன்படுத்தி கொள்கிறார்கள். தருமபுரியில் திவ்யா -இளவரசன் விவகாரத்தில் என்ன நடந்தது என உங்களுக்கு தெரியும்.
சாதி ஆதிக்க சக்திகளால் இளவரசன் குடும்பம் தாக்குதலுக்குள்ளானது. அவர்கள் செய்த குற்றம் என்ன என கேள்வி எழுப்பிய பிருந்தா காரத், காதல் திருணம் செய்வோருக்கு எதிராக பாமக போன்ற கட்சிகள் சாதி வெறியை தூண்டி விடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுகிறது. திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலைக்கு தூண்டியவர்கள் சாதி ஆதிக்க சக்தியினர் தான். இதற்கு காரணமானவர்களை ஆளும் அதிமுக அரசு தண்டிக்கவில்லை. சட்டப்படி எந்த நடவடிக்கையும் இல்லை. திமுகவும் வாய்திறக்கவில்லை. இரண்டு கட்சிகளும் சாதி ஆதிக்க வன்முறையாளர்களுக்கு ஆதரவாக உள்ளன. தந்தை பெரியார் வழி வந்தவர்கள் என்றும் பெரியாரின் படத்தை பயன்படுத்தும் இவர்கள் இளவரசன் பிரச்சனையில் பெரியாரின் மாண்புகளை குழி தோண்டி புதைத்துவிட்டனர் எனவும் குற்றம் சாட் டினார்.
மாதர் சங்க அகில இந்திய துணைத் தலை வர் உ. வாசுகி பேசுகையில்,பெண் படிப்பதால் பிரச்சனை என்று சிலர் நினைக்கின்றனர். ஈரோட்டில் நடைபெற்ற கொங்கு சங்க மாநாட்டில் பெண் பிள்ளைகளை கம்ப் யூட்டர் படிக்க வைக்காதீர்கள். கம்ப்யூட்டர் படித்த பெண்களை கல்யாணம் செய்யாதீங்க என்று பேசுகின்றனர்.
சாதி கவுரவம், குடும்ப கவுரவம் என்ற பெயரில் மீண்டும் பழைய நிலைமைக்கு தள்ளுகின்றனர் என்று குற்றம் சாட்டினார். ஆர்.எஸ்.எஸ். இந்து ஒற்றுமை குறித்து பேசுகிறது. திவ்யா ஒரு இந்து பெண், இளவர சன் ஒரு இந்து ஆண் இவர்களது வாழ்க்கை சீர்குலைக்கப்பட்டதே, அப்போது ஆர்.எஸ்.எஸ். எங்கே போனது எனவும் வாசுகி கேள்விஎழுப்பினார். தொனி கூட்டமைப்பு தலைவர் எம். சங்கர்கெல்ப் தொண்டு நிறுவனத் தலைவர் கே. கருணாமூர்த்தி, மனித உரிமைகள் அமைப்புமண்டல ஒருங்கினைப்பாளர் கே.பி. செந்தில் ராஜா ஆகியோர் கருத்துரையாற்றினர். மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ். வாலண் டினா, அரூர் சட்டன்ற உறுப்பினர் பி.டில்லி பாபு டி.எஸ்.எஸ்.எஸ். பெண்கள் கூட்டமைப்பு இயக்குனர் எல். சக்கரையாஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
எபிரோன் தொண்டு நிறுவன தலைவர்கள் ஷைன் தாமஸ், ஆர். ராமசாமி, எஸ்.சரளா, டி. கோவிந்தசாமி, மாதர் சங்க தலைவர்கள் எஸ்.அன்பு, கே. சுசிலா, ஆர்.மல்லிகா கே. பூபதி, சி.வாசுகி, ஏ.ஜெயா பி.கிருஷ்ணவேணி, பி.ராஜமணி உள்ளிட்டபலர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.