நாட்டின் பிரபலமான, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (J.N.U) கடந்த செவ்வாய்க்கிழமை, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி நிறுவனர்களில் ஒருவரான மக்பூல் பட், நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கில் இடப்பட்ட அப்சல் குரு ஆகியோரின் மறைவுக்கு துயரம் அனுசரிக்கும் நிகழ்ச்சி, பல்கலை வளாகத்தில் நடைபெற்றது.
ஜேஎன்யூ நிர்வாகத்தின் எதிர்ப்பை மீறி மாணவர்களில் ஒரு பிரிவினர் நடத்திய இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி, மற்றும் பாரதீய ஜனதா எம்.பி மகேஷ் கிரி அளித்த புகாரின் பேரில் மாணவர்களுக்கு எதிராக தேசத்துரோகச் செயல் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை வேண்டுமென்று ஏ.பி.வி.பி அமைப்பினர் , டெல்லி இந்தியா கேட்டில் போராட்டமும் நடத்தினர்.
இந்நிலையில் ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கன்னய்ய குமார் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார். யூனிபார்ம் அணியாத 2 பேர் வந்து , கன்னய்ய குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கு எதிராக பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்மிருதி இராணி, ராஜ்நாத் சிங் ஆகியோர் எச்சரிக்கை விடுதததும் குறிப்பிடத்தக்கது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அணி உறுப்பினராகவும் கன்னய்ய குமார் இருந்து வரும் நிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் தேர்தலில் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பு வெற்றி பெற்றதை ஏற்று கொள்ள முடியாமல்தான், இது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஏ.பி.வி.பி அமைப்பு இறங்குவதாக கன்னைய குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து கவலை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி “எமர்ஜென்சி காலத்தில்தான் இது போன்ற செயல்கள் நடைபெற்றதாக” கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா விடுத்துள்ள அறிக்கையில், “நடவடிக்கை என்ற பெயரில் அனைத்து இடதுசாரி மாணவர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக குறிவைக்கப்படுவதாக” குற்றம்சாட்டியுள்ளார்.
ஐதிராபத் பல்கலையில் இரண்டு மாதங்களுக்கு முன் நடைபெற்ற , தூக்கு தண்டனைக்கு எதிரான நிகழ்வில் அப்சல் குரு பற்றி பேசியதற்காக ரோஹித் வெமுலா, பல்கலையில் இருந்து வெளியேற்றப்பட்டு, பின் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதே போல், தமிழ்நாட்டில், தேசிய கொடியை எரித்த திலீபன் என்ற இளைஞனின் கையை, காவல்துறையினரே ஓடித்ததாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, காவல்துறையின் ஆதரவுடன், ஹிந்தி பேசிய சிலரே தன் கையை ஓடித்ததாக, தன்னை சந்திக்க வந்தவர்களிடம் திலீபன் குற்றம்சாட்டியதாகவும் குறிப்பிடப்படுகிறது
தேசிய கொடிகளை உள்ளாடைகளாக அணிந்துகொள்ளும் நாடுகளுக்கு மத்தியில், உலகின் பெரும் ஜனநாயக நாடு என்று குறிப்பிடப்படும் இந்தியாவில், சுதந்திரமான தங்களது கருத்துக்களுக்காக எதிர்கால தலைமுறையினர் கைது செய்யப்படுவதும், தற்கொலைக்கு தூண்டப்படுவதும், எஎன்று நிலவும் சூழலை பார்க்கையில் சீத்தாராம் யச்சூரியின் கவலை நிஜம்தானோ என்று அச்சம் கொள்ள வைக்கிறது.