சமீபத்தில் வகாபியம் குறித்த கட்டுரையை ஆதரித்து தனது இணையதளத்தில் பதிவு வெளியிட்டிருந்த ஜெயமோகன்,
“கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம்? கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்? குடும்பநண்பர்களே காஃபிர்களை அழைக்கலாகாது என்று கட்டுப்பாடு உள்ளது, மன்னித்துவிடுங்கள் என்று நம்மிடம் கோரும் நிலை உருவாகியிருக்கிறது” என எழுதியிருந்தார்.
ஜெயமோகனின் முழு பதிவும் இங்கே..
ஜெயமோகனின் கருத்து வினையாற்றும் வகையில் துபாயில் வசிக்கும் புஹாரி ராஜா தன்னுடைய அழைப்பிதழை ஜெயமோகனுக்கு அனுப்பியுள்ளார். இதுகுறித்து தன்னுடைய முகநூலில் பகிர்ந்திருக்கிறார்.
புஹாரி ராஜா
எனது திருமண அழைப்பை எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு கீழ்கண்ட கடிதத்தை இணைத்து அவருடைய நாகர்கோவில் இல்லத்துக்கும் மின்னஞ்சலிலும் அனுப்பியுள்ளேன்.
விருதுகளை துச்சமென நினைக்கும் ”அறம்” சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியரும் ”நான் கடவுள்”திரைப்படத்தின் வசனகர்த்தாவுமாகிய அன்பு எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்களின் அறம் புத்தகம் பற்றியும் அதில் யானை டாக்டர் கதை பற்றியும் நண்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். நான் கடவுளும் கடலும் அங்காடி தெருவும் உங்களுடைய பங்களிப்பின் காரணமாகவும் எதிர்பார்த்தவன். உங்களை இஸ்லாமியர்கள் அவர்கள் இல்ல விழாவிற்கு அழைத்தாளர்களா ?அல்லது ஏன் அழைக்கவில்லை என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை.
வரும் பிப்ரவரி 21-ஆம் நாள் எனது திருமணம் மதுரையில் நடைபெற இருக்கிறது. நேரில் வந்து பத்திரிகை வைக்க இயலாத காரணத்தினால் தபால் மூலம் எனது திருமண அழைப்பிதழை அனுப்பியுள்ளேன். மாற்று மத நண்பர்களின் வருகையால் மட்டுமே முழுமையடையும் எங்கள் இஸ்லாமிய திருமணத்துக்கு தாங்களும் தங்கள் குடும்பத்தோடு வந்து கலந்துகொள்ள விரும்புகிறேன்.
இப்படிக்கு
தங்களது நல்வரவை பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தமிழ் முஸ்லீம் நண்பன்
புஹாரி ராஜா”
புஹாரி ராஜாவின் அழைப்பிதழ் அனுப்பிய செயல்பாட்டிற்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.