சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், ‘ஆன்மிகம் என்பது ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதா?’ என்று கேரள அரசு மற்றும் சபரிமலை தேவஸ்வம் வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து, இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பும் 5 பெண் வழக்கறிஞர்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பினாகி சந்திரகோஷ், ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது.இவ்வழக்கு விசாரணையின் ஆரம்பத்திலிருந்தே ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை ஏன் அனுமதிக்கக் கூடாது? என்ற கேள்வியை நீதிபதிகள் எழுப்பி வருகின்றனர்.
வெள்ளியன்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீண்டும் அதே கேள்வியை நீதிபதிகள் எழுப்பினர்.வேதங்கள், வேதசாரமாகிய உபநிடதங்கள், மற்றும் புனித நூல்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பாகுபாடு கற்பிக்காத நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் மட்டும் குறிப்பிட்ட வயதுக்கு இடையிலான பெண்களை அனுமதிக்கக் கூடாது என்ற பாகுபாடு எங்கிருந்து வருகிறது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.ஆன்மிகம் முழுவதும் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதா? மதம் என்ற துறைக்குள் பெண்கள் ஆன்மிக நிலையை அடைய லாயக்கற்றவர்கள் என்று கூறுகிறீர்களா; உங்கள் தாயை கோயிலுக்குள் நுழைய தடை விதிப்பீர்களா? என்று நீதிபதி தீபக் மிஸ்ரா அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பினார்.மேலும், வழிபாட்டு பண்பாட்டுக்கும் மதத்திற்கும் வேறுபாடு கூறிய நீதிபதி தீபக் மிஸ்ரா, வழிபாட்டு பண்பாட்டில் ஒரு மையமான குழு இருக்கும். அது பிறரை வெளியாட்கள் என்று தடை உத்தரவுகளைப் பிறப்பிக்கும். ஆனால் மதம் என்பது முழுமைத்துவத்தை வலியுறுத்துவது, அதுதான் சனாதன தர்மம்.
பால், சாதி, இன வேறுபாடின்றி அனைவரையும் உள்ளடக்கியதே சனாதன தர்மம் என்றும் குறிப்பிட்டார்.முன்னதாக இதையே இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தனது வாதத்தின் போது முன்வைத்தார். அப்போது அவர், பெண் பிரம்மச்சாரிகளும் இந்த உலகத்தில் உள்ளதைக் சுட்டிக்காட்டியதுடன், அனைத்து ஆசைகளையும் துறந்து வாழ்வது ஆண்களுக்கு மட்டுமே உரியது அல்ல; நமது அரசியல் சாசன சட்டப்பிரிவு 25ல் என்ன கூறுகிறது என்றால், அனைத்து மனித இனத்துக்கும் பொதுவான மத ஸ்தலங்களை திறந்து விடுங்கள் என்கிறது; ஆனால், கோயிலுக்குள் நுழையக் கூடாது என்பவர்கள் நாங்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்களல்லர் என்று கூற வருகிறார்களா? என்று கேள்வி எழுப்பினார்.ஆனால், இந்த கேள்விகளுக்கு கேரள அரசு மற்றும் சபரிமலை தேவஸ்வம் வாரியத்தால் பதில் என்று எதையும் கூற முடியவில்லை.கேரள அரசுக்காக மூத்த வழக்கறிஞர் வி.கிரி வாதிடுகையில், சபரிமலைக்கு ஒரு வீட்டில் ஒரு ஆண் மாலையிட்டுக் கொள்கிறார் என்றால், பெண்கள், குழந்தைகள் உட்பட அவரை அவரது குடும்பமே ஆதரிக்கிறது, என்றும் நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தத் தடையை பக்தர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
கடவுள் ஒரு துறவி என்றும் அவரை வழிபடச்செல்லும் பக்தர்கள் ‘சுவாமி’ என்று அழைக்கப்படுவதாகவும் மற்றொரு மூத்த வழக்கறிஞரான கே.கே.வேணுகோபால் கூறினார்.அப்போது, குறுக்கிட்ட நீதிபதி மிஸ்ரா, அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்படும் அடிப்படை உரிமையான சமத்துவம் என்பதை மீறி இந்த தடை மரபு நீடித்து நிலைக்கப் போகிறதா? வேதங்களிலும், உபநிடதங்களிலும் பெண்/ஆண் பாகுபாடு இல்லையெனும் போது, வரலாற்றில் எந்த காலக்கட்டத்தில் இந்தப் பாகுபாடு தொடங்கியது என்று கூறுங்கள்? என்று மீண்டும் கேள்வி எழுப்பினர்.இறுதியாக, சபரிமலையில் பெண்கள் எப்போது இருந்து அனுமதிக்கப்படுவதில்லை என்பதற்கான விளக்க ஆதாரங்களை 6 வார காலத்துக்குள் தாக்கல் செய்யவும் கேரளா அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஆன்மிகம் ஆகிய இருகோணங்களில் அணுகப் போவதாகவும் தெரிவித்தனர்.
இந்த வழக்கிற்கு சட்ட, அரசியல் சாசன மற்றும் ஆன்மிக தளங்களில் ஆழமான ஆய்வு தேவைப்படுகிறது என்பதால் மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன் மற்றும் வி.கே. ராமமூர்த்தி ஆகியோரை நீதிமன்ற நடுநிலை அறிவுரையாளர்களாக நியமிப்பதாகவும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் குறிப்பிட்டனர்.