
எழுத்தாளர் ஞாநி, பத்ரி சேஷாத்ரி போன்றவர்கள் தாங்கள் மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள். மக்கள் நலக் கூட்டணி வென்றுவிடும் என்று இப்பொழுது வரைக்கும் நான் நம்பவில்லை என்றாலும் திமுக, அதிமுகவிற்கு மாற்று எதுவுமேயில்லை என்ற நிலை இல்லை. மூன்றாவதாக ஒரு ஆள் இருக்கிறார் என்பதே சந்தோஷம்தான். ஆனால் மூன்றாவதான ஒரு ஆளையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் தர்ம அடி அடிப்பதைத்தான் காணச் சகிக்கவில்லை.
மனுஷ்ய புத்திரன் மாதிரியானவர்கள் வைகோவையும் மக்கள் நலக் கூட்டணியையும் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு சேர்த்து அவர்களை ஆதரிப்பவர்களையும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். ‘நீங்கள் கொள்கை இல்லாதவர்கள்’ ‘மாறி மாறிப் பேசுகிறீர்கள்’ என்று யாரைப் பார்த்தும் சொல்லி விட முடியும்தான். ஆனால் நாம் ஆரம்பத்தில் இருந்தே ஒரே நிலைப்பாட்டுடன் தான் இருக்கிறோமா என்று யோசித்துக் கொள்வது நல்லது.
ஜல்லிக்கட்டு சமயத்தில் கவிஞரின் ஃபேஸ்புக் கருத்து ஒன்று கண்களில் பட்டது. ‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசிற்கு நன்றி’ என்று எழுதியிருந்தார். விளையாட்டாக எழுதியிருப்பார் என்று நினைத்தேன். பிறகுதான் புரிந்தது- முழுமையான சந்திரமுகியாக மாறிவிட்ட கட்சிக்காரர் ஒருவரின் புளகாங்கிதம் அது என்று. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபார்ந்த விளையாட்டு என்று தொண்டைத் தண்ணீர் தீரக் கத்துவது அதன் மீதான தடையை நீக்குவதற்காக ஆளாளுக்கு போராடுவதாகக் காட்டிக் கொள்வதும் வழமையாகிவிட்டது. வெள்ளிக்கிழமையன்று தடையை நீக்குவது மாதிரி நீக்கினார்கள். இடையில் சனி மற்றும் ஞாயிறன்று நீதிமன்றங்கள் விடுமுறை. திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டினார்கள்- எல்லாமே எதிர்பார்த்ததுதான். ஜல்லிக்கட்டுக்கான அனுமதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து சோலியை முடித்தது. அந்த ஒன்றரை நாட்களுக்குள் ‘நாங்கதான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வாங்கிக் கொடுதோம்’ என்று ஆளாளுக்குத் துள்ளினார்கள். அதில் கவிஞரும் ஒருவர். அப்பொழுதே விமர்சித்து எழுத வேண்டும் என நினைத்தேன். ஆனால் தேவையில்லாமல் எதற்கு அரசியல் வம்பு என்று அமைதியாக இருக்கத் தோன்றியது. ஒழுங்காக நம் பாதையில் சென்று கொண்டிருந்தால் போதும்தான்.
ஆனால் ஏன் இந்த அரசியல்வாதிகள் மட்டும் தங்களின் எதிர்முகாமை ஆதரிப்பவர்களைக் கூட அடித்து நொறுக்கிறார்கள்? யாராவது மக்கள் நலக் கூட்டணியை ஆதரித்தாலும் அவர்கள் மீது குற்றங்குறை சுமத்துகிறார்கள்? எனக்கு மக்கள் நலக் கூட்டணியை விமர்சிப்பது பற்றி வைகோவை நாசம் செய்வது பற்றியோ ஒன்றுமில்லை. தேர்தல் நெருங்குகிறது. ஆளாளுக்கு ஸ்கோர் செய்கிறார்கள். அதையேதான் கவிஞரும் செய்திருக்கிறார். ஆனால் ஆதரிக்கிறவர்களையெல்லாம் காலை வாருவது எந்தவிதத்தில் நியாயம்? கட்சிக்காரர்கள் தங்களின் எதிர்க்கட்சியை மட்டும் விமர்சித்தால் அர்த்தம் இருக்கிறது. எவன் ஆதரித்தாலும் அடிப்பேன் என்பது அபாயகரமானது இல்லையா?
ஒரு காலத்தில் மனுஷ்ய புத்திரன் எனக்கு ஆதர்சம். பேச்சுக்காகச் சொல்லவில்லை. அப்படித்தான் மனதுக்குள் இருந்தார். அவரது உயிர்மை தலையங்கங்களை வாசித்துக் கொண்டிருந்தவர்களுக்குத் தெரியும்- திமுகவையும் கிழித்திருப்பார். அதிமுகவையும் அடித்திருப்பார். வைகோவையும் விளாசியிருப்பார். விஜயகாந்தையும் குத்துவிட்டிருப்பார். எந்தவொரு அரசியல் நிலைப்பாடு குறித்தும் தெளிவான பார்வையுடன் விமர்சனம் செய்கிற திராணியுள்ள மனிதர் என்று உள்ளுக்குள் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தேன். அவருடன் நேர் பேச்சில் பங்கெடுத்திருக்கிறேன் என்கிற வகையில் அவருடைய திமுக சாய்வு ஓரளவு கணிக்கக் கூடியதுதான். நடுநிலை என்பது மாயை. அப்படியெல்லாம் இருக்கவே முடியாது. நம்மில் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு பக்கச் சாய்வு இருக்கும். அதனால் அவருடைய திமுக சாய்வைத் தவறானதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் கழகப் பேச்சாளராக மாறி கட்சிக்காரர்களை வரிக்கு வரி அண்ணன் என்று விளிப்பதையும் கறுப்பு சிவப்பில் அச்சடிக்கப்பட்ட தனது பெயரைப் பகிர்ந்து உச்சி குளிர்வதும் சிரிக்க வைக்கிறது. அவர் அண்ணன் என்று விளித்து கும்பிடு போடுகிறவர்களில் பலரும் இவருடைய எழுத்துக்கும் வாசிப்புக்கும் அருகில் நிற்கக் கூட யோக்கிதையற்றவர்கள் என்பதுதான் நிதர்சனம்.
ஜூன் 2011 ஆம் ஆண்டு உயிர்மை தலையங்கத்தில் பின்வருமாறு எழுதுகிறார்-
தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களின் ஆழமான சில தார் மீக உணர்வுகள் அவமதிக்கப்பட்டன. ஜெயலலிதா தனது வளர்ப்பு மகனுக்குச் செய்த ஆடம்பரத் திருமணத்தின் மூலம் ஏழ்மை மிகுந்த ஒரு சமூகத்தின் தார்மீக உணர்ச்சிகளை அவமதித்தார் என்றால் அதைவிடப் பல மடங்கு அவமதிப்பினை தி.மு.க. இந்த ஐந்தாண்டுகளில் செய்தது. தன்னுடைய பல்வேறு குடும்பங்கள், கிளைக் குடும்பங்களின் அதிகாரப் போராட்டத்திற்கான மையமாக ஒரு அரசை, ஒரு கட்சியை மாற்றுவதன் அபாயம் குறித்து கருணாநிதி புரிந்து கொள்ளவே இல்லை. இரண்டாவதாக, அரசியல் அதிகாரம் ஒரு கட்சிக்கு வழங்கப்பட்டதே தவிர, தனது குடும்பத்திற்கு வழங்கப்பட்டதல்ல என்பதை கருணா நிதியின் குடும்பத்தைச் சேர்ந்த யாருமே ஏற்கவில்லை. அவர்கள் கருணாநிதியின் பிள்ளைகளாகவோ உறவினர்களாகவோ இருப்பதாலேயே அதிகாரம் செலுத்துவது தங்கள் பிறப்புரிமை என்று கருதினார்கள். அந்த உரிமையை நிலை நாட்டுவதற்காக ஒருவரை ஒருவர் ரகசியமாக வேட்டையாடினார்கள், சதிகளில் ஈடுபட்டார்கள், தீ வைத்து எரித்தார்கள், வரலாறு காணாத ஊழலில் ஈடுபட்டார்கள். ஒரு ஜனநாயக அமைப்பின் மக்களது உணர்ச்சிகளை நாம் அவமதிக்கிறோம் என்று யோசிக்கக்கூடிய ஒருவர்கூட அங்கு இல்லை.
அடுத்த ஐந்தே ஆண்டுகளில் அந்தக் கட்சியின் அதிகாரப் பூர்வ பேச்சாளராக மாறியிருக்கும் அவர் அந்தக் கட்சி எல்லாவற்றையும் சரி செய்துவிட்டது என்று அவர் நம்புவதற்கான முகாந்திரங்களில் ஒன்றையாவது சுட்டிக்காட்டலாம். ஒரு மனிதர் அரசியல் கட்சிக்கு ஆதரவாளராக செயல்படக் கூடாது என்று சொல்லுகிற உரிமை யாருக்கும் கிடையாது. ஆனால் பொதுவெளியில் இயங்கிக் கொண்டிருக்கிற மனிதர் திடீரென தனது நிறத்தை மாற்றிக் கொள்ளும் போது தனது நிறம் மாறுதலுக்கான காரணங்களை குறைந்தபட்சமாகவேனும் பேசுவதுதான் நியாயமானதாக இருக்கும். வாசிப்பின் தொடக்க காலத்தில் இருந்த எனக்கு உயிர்மை தலையங்கங்கள் சிலிர்ப்பூட்டின என்பதை வெற்றுச் சொற்களாகச் சொல்லவில்லை. அவற்றை கடந்த சில நாட்களாகப் புரட்டிக் கொண்டிருக்கும் போது அந்தத் தருணங்களில் அவருடைய எழுத்துக்கள் உண்டாக்கிய அதிர்வுகள் நினைவுகளில் வந்து வந்து போகின்றன.
நாஞ்சில் சம்பத் தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது பற்றியோ, அனிதா ராதாகிருஷ்ணன் தனது வேஷ்டியின் கரையை மாற்றிக் கொள்வது பற்றியோ அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் சமூகத்தின் மனசாட்சி என்று கருதுகிற ஒரு எழுத்தாளன் தனக்கான வேட்டியின் கரையைத் தேர்ந்தெடுக்கும் போது தான் வெளிப்படையாக விமர்சித்த கருதுகோள்களிலாவது என்னவிதமான மாறுதல்கள் உண்டாகியிருக்கின்றன என்பதையாவது கோடு காட்ட வேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.
இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் அசிங்கமான முன்னுதாரணத்தை திருமங்கலம் ஃபார்முலா என்ற பெயரில் திமுக வெற்றிகரமாக உருவாக்கியது. அதற்கு முன்பிருந்தே கூட வாக்குக்கு பணம் வழங்குதல் நடைமுறையில் இருந்தன. ஆனால் அவ்வளவு அப்பட்டமாகவும் வெளிப்படையாகவும் திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில்தான் செய்தார்கள். அதே ஜூன் 2011 தலையங்கத்தில் மனுஷ்யபுத்திரனும் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். ‘ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை தி.மு.க. இவ்வளவு பரவலாகவும் பகிரங்கமாகவும் செயல்படுத்த முனைந்ததன் விளைவாக அது நேரான வழிமுறைகளில் சிறிதும் நம்பிக்கையற்ற ஒரு இயக்கம் என்கிற அவப்பெயரையே தேடித் தந்தது. இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என யாரும் யோசிக்க மாட்டார்கள் என்று கருணாநிதி அவ்வளவு திடமாக நம்பினார்’.
ஊழலுடன் சேர்ந்து திமுக அடி வாங்குவதற்கான இன்னொரு முக்கிய காரணம்- இலங்கைப் பிரச்னை. அதே ஆண்டு மார்ச் மாதத் தலையங்கத்தில் ‘இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அவர் (கருணாநிதி) எடுத்த நிலைப்பாடுகள் உலகத் தமிழர்களின் தலைவர் என்ற அடையாளத்தைப் படிப்படியாக சிதைத்ததை அவர் கண்முன் காண நேர்ந்தது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத் தந்த அவர் அந்த மொழியின் பெயரால் ஒரு மாநாட்டை முன்னூறு கோடி ரூபாய் செலவில் நடத்தி ஓராண்டு கூட நிறைவடையவில்லை; அதன்மேல் தூசி படிந்து யாருடைய நினைவிலும் அது இல்லாமல் போய்விட்டது. கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் இலவச தொலைக்காட்சி, மருத்துவக் காப்பீடு, நூறு நாள் வேலைத்திட்டம், ஒரு ரூபாய் அரிசி என மிகவும் வசீகரமான மக்கள் நலத் திட்டங்களால் தமது அரசாங்கம் படிப்படியாக அடைந்த புகழின் வெளிச்சத்தை ஊழலின் புழுதிப் புயல் இவ்வளவு சீக்கிரமாக வந்து மூடும் என்று அவர் கற்பனை செய்திருக்க மாட்டார். ஈழத் தமிழர் போராட்டத்தை நசுக்குவதற்கு காங்கிரஸ் மேற்கொண்ட சதிகளோடு, ஆட்சி அதிகாரம் கருதி அவர் செய்துகொண்ட சமரசங்களுக்காக வரலாற்றின் ஊழ்வினை அவரைப் பழிவாங்குகிறது’ என்று எழுதி திமுகவின் ஊழல் கறைகளையும் ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் அதன் நிலைப்பாடுகளையும் நேரடியாக விமர்சித்திருக்கும் கவிஞருக்கு இப்பொழுது அதே கட்சி பொன்னாடை போர்த்திக் கொண்டிருக்கிறது. அவர் பதிலுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருக்கிறார்.
மனுஷ்ய புத்திரனின் பழைய எழுத்துக்களைத் தேடினால் அவரது இத்தகைய விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் நிறைய எடுக்க முடியும். திமுகவை விமர்சிக்க வேண்டும் என்பதோ, மனுஷ்ய புத்திரன் மீது வெறுப்பை உமிழ்ந்து அவரை தர்ம சங்கடத்திற்குள்ளாக்க வேண்டும் என்கிற ஆசை எதுவுமில்லை. மனுஷ்ய புத்திரனும் ஆட்சியின் அதிகாரத்தில் தனக்கான இடத்தை அடையட்டும் என்றுதான் விரும்புகிறேன். ஆனால் அவரது எழுத்துக்களுக்கும் வாழ்க்கைக்குமான முரண்கள் எல்லாக்காலத்திலும் கேள்விகளாகத் தொக்கிக் கொண்டுதான் நிற்கும். நின்றுவிட்டுப் போகட்டும். இத்தகைய தார்மீகக் கேள்விகளுக்கு பதிலைத் தேடிக் கொண்டிருந்தவர்கள் எந்தக் காலத்திலும் அரசியலில் வென்றதில்லை. மனுஷ்ய புத்திரன் தெளிவான அரசியல்வாதி. இத்தகைய கேள்விகளையும் விமர்சனங்களை எப்படி புறந்தள்ள வேண்டும் என்பது அவருக்குத் தெளிவாகத் தெரியும்.
வாழ்க்கையின் தேவைகளும் அதிகாரத்தின் தூண்டிலும் மனிதர்களைப் பகடைக் காய்களாக்கி உருட்டுகின்றன. தனது நிலைப்பாடுகள் என்பதையெல்லாம் ஓரமாகத் தள்ளி வைத்துவிட்டு ஒளிக்கூச்செறியும் வெளிச்சத்துக்காக சிங்கமாகவும் புலியாகவும் உறுமுவதைப் போலக் காட்டிக் கொண்டு மேலிடத்தின் ஓரப் பார்வைக்காக ஒடுங்கி நிற்பதையெல்லாம் சாமானியர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால் தங்களுக்கு எதுவுமே தெரியாதது போல பாவனைக் காட்டிக் கொண்டே வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளுக்காக அவர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
வா. மணிகண்டன், எழுத்தாளர். ஆனந்த விகடனின் 2016 ஆம் ஆண்டுக்கான டாப் 10 நம்பிக்கை மனிதர்களில் இவரும் ஒருவர்.