குஜராத்தில் போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் எப்படி பயங்கரவாதி ஆக்கப்பட்டார்?

நரேந்திரமோடி முதல்வராக இருந்தபோது, குஜராத்தில் போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டவர் இஷ்ரத் ஜஹான். இந்நிலையில் இவரை, லஷ்கர்-இ- தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி என்று நிறுவும் வகையில், புதிய வாக்குமூலம் ஒன்று டேவிட் ஹெட்லியிடம் பெறப்பட்டு உள்ளது. மும்பை தாக்குதல் வழக்கு தொடர்பாக, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியான டேவிட் ஹெட்லி, கடந்த 3 நாட்களாக அமெரிக்கச் சிறையில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாக்குமூலம் அளித்து வருகிறார். மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஏ. சனாப் முன்னிலையில் இந்த வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.இதுவரையிலான வாக்குமூலத்தில், மும்பை குண்டுவெடிப்பில் தனக்கு உள்ள தொடர்பை ஒப்புக் கொண்ட அவர், தாக்குதலுக்கு முன்னர் உளவு பார்ப்பதற்காக ஏழு முறை பல்வேறு பெயர்களில் இந்தியா வந்து சென்றதாகவும், இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு லஷ்கர் -இ-தொய்பா அமைப்புதான் முழு காரணம்;

அனைத்து உத்தரவுகளுமே அதன் தலைவர் ஸகியுர் ரஹ்மான் லக்வியிடம் இருந்தது தான் வந்தன என்றும் தெரிவித்தார். மேலும், லஷ்கர் இ-தொய்பா அமைப்பு, பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐயின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் கூறினார்.இந்நிலையில், வியாழனன்றும் ஹெட்லியிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம், வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:தான் மும்பைக்கு செல்லும் முன்பு ஐஎஸ்ஐயைச் சேர்ந்த மேஜர் இக்பால் எனக்கு ரூ. 17 லட்சம் அளித்தார். அந்த பணம் உளவு பார்ப்பதற்காக அளிக்கப்பட்டது. 14.9.2006 அன்று நான் மும்பை தர்தியோ ஏசி மார்க்கெட் பகுதியில் உள்ள வங்கியில் கணக்கு துவங்கினேன். 11.10.2006 முதல் தவாஹூர் ராணா எனக்கு பல்வேறு கட்டங்களில் பணம் வழங்கினார்.ராணா பாகிஸ்தான் ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றினார். பின்னர் தான் அவர் ராணுவத்தில் இருந்து விலகினார். மும்பை தாக்குதல் குறித்து நான் அவருடன் தான் தொடர்பில் இருந்தேன்.தாக்குதலுக்கு முன்பே ராணா மும்பை வந்துள்ளார். மும்பையில் அவருக்கு ஆபத்து என்று கூறி அவரை திரும்பிச் செல்லுமாறு நான் தான் கூறினேன். ராணா அனுப்பிய பணம் இன்டஸ் இன்ட் வங்கியின் நரிமன் கிளை கணக்கிற்கு வந்தது. மேலும் சஜித் மிர் எனக்கு பாகிஸ்தான் பணம் ரூ. 40 ஆயிரம் அளித்தார்.மும்பை தர்தியோ ஏசி மார்க்கெட் பகுதியில் எனது அலுவலகம் இருந்தது. எனக்கு மேஜர் இக்பால் இந்திய ரூபாயின் கள்ளநோட்டுகளை அளித்தார். மேஜர் அப்துல் ரஹ்மான் பாஷாவும் எனக்கு ரூ.18 ஆயிரம் அளித்தார். 1.11.2006 அன்று மும்பை அலுவலகத்திற்கான ஒப்பந்தம் போரா என்பவருடன் கையெழுத்தானது. 16.7.2008 எனது அலுவலகத்திற்கான உரிமத்தை புதுப்பித்தேன். தர்தியோ அலுவலகத்தை மூடுவது ராணாவுக்கு பிடிக்கவில்லை. ஆனால் மும்பை அலுவலகத்தை மூட வேண்டும் என நானும், மேஜர் இக்பாலும் நினைத்தோம்.

மும்பை தாக்குதல் நடந்து 2 மாதங்களுக்கு பிறகு அலுவலகத்தை மூடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. தர்தியோ அலுவலகம் பொதுமக்கள் பயன்படுத்தும் குடியேற்றத்துறை அலுவலகமாக செயல்பட்டது. குடியேற்றத்துறையின் பெயரில் நாங்கள் எங்கள் வேலைகளை செய்தோம்.மும்பையில் உள்ள ரிலையன்ஸ் வெப்வேர்ல்டுக்கு நான் 2007ம் ஆண்டில் செப்டம்பர் 12, 18 ஆகிய தேதிகள் மற்றும் அக்டோபரில் 30ம் தேதி என மூன்று முறை சென்று இன்டர்நெட்டை பயன்படுத்தியுள்ளேன். அங்குள்ள பதிவேட்டில் நீங்கள் என் கையெழுத்தை பார்க்கலாம்.பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பழி வாங்க குஜராத்தில் உள்ள அக்ஷர்தம் கோவிலை தாக்க முஜம்மில் பட் திட்டமிட்டார். மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது.இவ்வாறு பல்வேறு விவரங்களை ஹெட்லி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.அத்துடன் 3-வது நாள் வாக்குமூலத்தில், இந்தியாவில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் பெண்கள் பிரிவு செயல்பட்டு வந்தது என்றும் அந்த பிரிவிற்கு அபு மசார் தலைமை தாங்கி வந்தார் என்றும் தெரிவித்த ஹெட்லி, மும்பை தாக்குதல் சம்பவத்தில் கூட, பெண் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால், அந்தப் பெண் யாரென்று தமக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். அப்போது, போலீஸ் தரப்பில் 3 பேரின் பெயர்களைக் கொடுத்து, அவர்களில் ஒருவரைக் குறிப்பிடுமாறு கேட்டதாகவும், அப்போது தோராயமாக இஷ்ரத் ஜஹான் பெயரை ஹெட்லி கூறியதாகவும் தெரிகிறது. இதையடுத்து, போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் லஷ்கர்-இ- தொய்பாவைச் சேர்ந்த பயங்கரவாதி என்றும் காட்டும் வேலையில் மும்பை போலீசார் இறங்கியுள்ளனர்.இது, மோடியையும், அமித்ஷாவையும் போலி என்கவுண்ட்டர் குற்றச்சாட்டில் இருந்து தப்பவிடும் முயற்சி என்று குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது.

தீக்கதிர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.