கி.வீரமணி,சுபவீயின் அருந்ததியருக்கான குரல் திராவிட இயக்கத்தை காப்பதற்கான கேடயம்!

ஸ்டாலின் ராஜாங்கம்
ஸ்டாலின் ராஜாங்கம்
ஸ்டாலின் ராஜாங்கம்

கி.வீரமணி,சுபவீ போன்றோர் விசிகவை ஆதரிப்பதற்கு உடனடி அரசியல் காரணங்கள் தான் உண்டே தவிர தலித் அரசியலின் வருகை காரணமாக ஏற்பட்ட சுயவிமர்சனத்தினூடான கருத்தியல் மாற்றங்களை ஏற்று ஆதரிக்கவில்லை என்று நான் முன்பு எழுதினேன்.

அதாவது விசிக திமுக கூட்டணியில் இருந்ததாலேயே ஆதரிக்கிறார்கள் என்பதே நான் எழுதியதன் பொருள். அதைதான் சுபவீ இப்போது நிருபித்துக்கொண்டிருக்கிறார். அதை சில தலித் தோழர்கள் புரிந்துகொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.ஒரு தலித் கட்சிக்கு நிலவும் சூழலில் கூட்டணி எப்படியும் அமையலாம். அது திமுகவா அதிமுகவா என்பது அவர்களைப் பொறுத்தது. ஆனால் பிரச்சினை எங்கு வருகிறது என்றால்,அந்த அரசியல் கூட்டணியையே கருத்தியல் கூட்டணி என்பது போல புரிந்து கொள்வதனாலும் அக்கட்சி தலைமையும் கூட அவ்வாறே தன் தொண்டர்களிடம் விளக்குவதினாலும் தான் நிகழ்கிறது. விடுதலைச் சிறுத்தைகளிடம் திமுக கூட்டணியில் இருக்கும் போது நடந்த மாபெரும் சறுக்கல் இதுதான். அப்போது சுபவீ உள்ளிட்டோரை வானவளாவ புகழ்ந்ததும் இப்போது திட்டுவதிலும் என்ன நியாயம் இருக்கமுடியும்?

சுபவீ நேரடியான திமுககாரரை விட ஆபத்தானவர். திமுககாரரை கட்சி நிலைபாடுடையவராக கருதி விவாதத்தை தொடங்க முடியும். ஒரே நேரத்தில் மனதளவில் திமுககாரராகவும், அக்கட்சியின் பலவீனத்தை சுட்டி பேசும் போது, தான் கட்சிகாரர் அல்ல கொள்கைகாரன் என்று சொல்லி தப்பும் விதத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்ற பெயரளவு அமைப்பையும் முகமூடியாக அணிந்துகொள்ளும் தந்திரசாலி சுபவீ.

விசிக மீது சுபவீ இப்போது கேட்கும் அருந்ததியர் பற்றிய கேள்வியை திமுக கூட்டணியிலிருந்தவரை ஏன் கேட்க வில்லை? நாங்கள் விரும்பும் கூட்டணியிலிருந்தால் உங்கள் குறையை நாங்கள் பேசமாட்டோம், மாறாக நாங்கள் விரும்பாத மாதிரி இருந்தால் உங்களை எப்படியாவது மோசமானவர்களாக காட்டுவோம் என்கிற பார்வைதானே இதிலிருக்கிறது? உண்மையில் இதுதானே ஆண்டைத்தனம்?வேறுபெயரில் மறைமுகமாக செயல்படும் சாதியம் தானே இது?

உண்மையில் அருந்ததியரை பற்றி இவர்கள் பேசுவதன் நோக்கமே,அவர்களுக்கு உதவவேண்டுமென்பதை விட, தலித் விமர்சனத்திலிருந்து திராவிட இயக்கத்தை காப்பதற்கான கேடயமாக அதை கைக்கொள்வதற்கேயாகும் என்பதற்கு இதை விட உதாரணம் வேண்டுமா?

உண்மையில் சுபவீ போன்றோர் தலித் மேடைகளுக்கு வருவதன் காரணமே திராவிட இயக்கத்தை தலித்துகளிடம் பிரச்சாரம் செய்வதற்கும் தலித் அமைப்புகளை திராவிட பிடியில் இருத்துவதற்கும் தான். தர்மபுரி வன்முறை பற்றி சென்னையில் நடந்த கூட்டமொன்றில் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ பீமாராவ் தம் பேச்சில் திமுகவின் நிலைபாட்டையும் விமர்சித்தார். அடுத்து பேச வந்த சுபவீ, பீமராவின் மற்ற கருத்துகளை விடுத்து கருணாநிதி பற்றிய பேச்சுக்கு ‘பதிலளித்து’விட்டு தான் தம் பேச்சுக்குள்ளே சென்றார் என்றறிந்தேன். அதாவது சாதிவன்முறையை ஒன்றை ஒட்டி தலித்துகளின் கோபம் திமுக மீது மட்டும் திரும்பிவிடக்கூடாது என்பது அவர் நோக்கம்.

தர்மபுரி வன்முறையின் போது வீரமணி கூட்டமொன்றை நடத்தினார். தலித்துகள் மீதான வன்முறைக்கு எதிராக முதன்முறையாக திக கூட்டம் நடத்தியதை வரவேற்றுவிட்டு, அதேவேளையில் தலித் தலையீடுகளில் திராவிட இயக்கத்திற்கிருக்கும் வரையறையை எழுதியிருந்தேன். அதாவது திமுக கூட்டணியில் இருப்பதாலேயே திக போன்ற திராவிட கட்சிகள் விசிகவை ஆதரிக்கின்றன. எனவே இது அரசியல் கூட்டணியே தவிர கருத்தியல் கூட்டணியாகவோ இயற்கையான கூட்டணியாகவோ இருக்க இயலாது என்று மேலும் எழுதியிருந்தேன். இப்போது அதுதான் நடந்திருக்கிறது.

இயற்கையான கூட்டணி என்று கூறியிருந்த அ.மார்க்ஸின் கூற்றை மறுக்கும் விதமாக இதை எழுதியிருந்தேன். உடனே எதிரான கருத்தென்றால் அதை பார்ப்பனியமாக ஆக்கிவிட்டு எதிர்கொள்ளும் அவரின் வழக்கமான உத்திபடி, அவரின் அடிபொடி ஒருவர் என்னை மிகவும் இழிவுபடுத்தி எழுதியிருந்தார். சுபவீயோ திகவோ திமுக கூட்டணியில் இல்லாத காரணத்தினால் தலித் கட்சியை கைவிட்டிருக்கும் நிலையில் எந்த விதத்திலும் இணைத்து பேச முடியாத நிலையில், அதே அ. மார்க்ஸ் இப்போது இடதுசாரிகளும் தலித்துகளும் தான் இயற்கையான கூட்டணி என்று எழுதியிருக்கிறார். (முன்பு அவராலேயே இதேபோன்று கூறப்பட்ட திராவிட இயக்கத்தை இப்போது ஏன் கூறமுடியவில்லை என்பதையும் அவர் சேர்த்து எழுதியிருக்க வேண்டும்)

இதை நம்மூர் அறிவுஜீவிகள் அரசியல்வாதிகளை மிஞ்சிவிடுவார்கள் போலிருக்கிறது என்று கூறலாம் இல்லையா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.