திமுக தலைவர் கருணாநிதி கேள்வி- பதில் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுகவை நேரடியாக விமர்சிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அச்சம் என்று குறிப்பிட்டுள்ளார்.
“இரண்டு திராவிடக் கட்சிகளுடைய ஆட்சியில் ஏழையெளிய மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும், அவர்களின் முன்னேற்றத்திற்காக எதுவும் செய்யவில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.
1967ஆம் ஆண்டு தி.மு.க.வுடனும், 1977ஆம் ஆண்டு அ.தி.மு.க.வுடனும், 1980ஆம் ஆண்டு அ.தி.மு.க.வுடனும், 1989ஆம் ஆண்டு தி.மு.க.வுடனும், 2001ஆம் ஆண்டு அ.தி.மு.க.வுடனும், 2006ஆம் ஆண்டு தி.மு.க.வுடனும், 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க.வுடனும் மாறி மாறி கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற போது இப்படியெல்லாம் குறை சொல்லத் தோன்றவில்லை. ஆனால் தற்போது அவருக்கு மட்டும் தி.மு.க. மீது என்னவோ கோபம்? அ.தி.மு.க.வை நேரடியாக விமர்சனம் செய்ய அவர்களுக்கு அச்சம். தி.மு.க.வை எப்படி விமர்சித்தாலும் ஜனநாயகத்தில் இது சகஜம்தானே என எடுத்துக் கொள்ளும் என்று அவர்களுக்கு நம்பிக்கை!”
இதற்கு பதில் அளிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அளித்த பதில் அறிக்கை:
“கருணாநிதி தன்னுடைய கேள்வியில் அதிமுகவை விமர்சிக்கும் அதே நேரத்தில் திமுக ஆட்சியையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய மாநிலச் செயலாளர் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறாரே என்று குறிப்பிட்டுள்ளார். எனவே அதிமுகவை விமர்சிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அச்சம் எதுவும் இல்லை என்று அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். அதிமுகவைக் கண்டு அச்சப்பட வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. ஆனால் திமுகதான் இன்றைக்கு எந்தக் கட்சியுடன் கூட்டணி என்று முடிவு செய்ய முடியாத நிலையில், அதிமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சியையும் விமர்சிக்காமல் கூச்சப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மத்திய கூட்டணி அரசுக்கு தலைமை தாங்கும் பாஜகவைக் கூட அவர்களால் நேரடியாக குறை கூற முடியவில்லை. பாஜகவின் மதவெறி மற்றும் மக்களை பாதிக்கும் பொருளாதார நடவடிக்கைகளைக் கூட திமுகவால் சுற்றி வளைத்துத்தான் சுட்டிக்காட்ட முடிகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை மிக மோசமாக அவமானப்படுத்திய காங்கிரசையும் கடிந்து கொள்ள முடியவில்லை. கசந்து கொள்ளவும் திமுகவால் முடியவில்லை.திமுக-அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் விமர்சிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த காலத்தில் இந்த இரு கட்சிகளுடனும் மாறி மாறி கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற போது குறை சொல்லத் தோன்றாதது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார். திமுகவுக்கு மட்டுமல்ல, அதிமுகவுக்கும் சேர்த்து இதன் மூலம் அவர் வக்காலத்து வாங்க முயல்கிறார். மதுபான கொள்முதல் துவங்கி, ஊழல், லஞ்சம், கமிஷன், இயற்கை வளத்தை சூறையாடுவது என பல்வேறு விசயங்களில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையில் எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறது என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குற்றச்சாட்டு இதன் மூலம் உண்மையாகிறது.
இந்த இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி வைத்திருந்த காலத்திலும் கூட அந்தந்த கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்ட தேவைப்பட்டபோது வீதிக்கு வந்து போராட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயங்கியது இல்லை என்பதை திமுக தலைவர் நன்கு அறிவார்.திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த காலங்களில் அவ்வப்போது எழுந்த அரசியல் சூழலுக்கு ஏற்ப தொகுதி உடன்பாடு கொண்டிருந்தது உண்மை. ஆனால், இனி நவீன தாராளமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிற, சமூக ஒடுக்குமுறைக்குத் துணை போகிற அல்லது சமரசம் செய்து கொள்கிற பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கட்சி முடிவெடுத்தது.
பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக, பாமக அல்லாத அணி சேர்க்கையை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் மலர்ந்தது தான் மக்கள் நலக்கூட்டணி. இந்த கூட்டணியின் வெற்றிகரமான எழுச்சிப் பயணம் இரு துருவ அரசியல் நடத்தி வந்த அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் உண்மை. அதிமுகவை விமர்சிப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் தயங்கியது இல்லை. இன்னும் சொல்லப்போனால் திமுகவை விட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தண்டனை வழங்கியபோது உடனடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றது. ஆனால் திமுக தலைவரோ துவக்கத்தில் கருத்தொன்றுமில்லை என்றார்.அடுத்து, கர்நாடக உயர்நீதிமன்றம் தண்டனை வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தபோது உடனடியாக இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று முதன்முதலில் வலியுறுத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான்.
அப்போது கூட திமுக உடனடியாக கருத்துக் கூறவில்லை.இன்றைக்கு தமிழகம் சந்திக்கும் பல்வேறு துயரங்களுக்கு அடுத்தடுத்து வந்த திமுக மற்றும் அதிமுக ஆட்சிகள் தான் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்கமாக, நேரடியாக குற்றம் சாட்டுகிறது. கிரானைட் ஊழலில் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி அளவிற்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தனது அறிக்கையில் கூறியுள்ளார். இந்த முறைகேடு இரண்டு ஆட்சியிலும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அச்சமின்றி, தைரியமாக கூறுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.