“ஸ்டாலின் தலைமையில் பாஜக-திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது; அதற்கு கவிஞர்தான் தூதர்”: ஜெயமோகன் சொல்லும் தேர்தல் கூட்டணி ‘ரகசியம்’

பாஜகவுடன் திமுக கூட்டணி குறித்து பரபரப்பு கிளம்யிருக்கும் சூழலில் எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய  வலைப்பக்கத்தில், “ஸ்டாலின் தலைமையில் பாஜக-திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது; அதற்கு கவிஞர்தான் தூதர்” என்று தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து வாசகர் ஒருவரின் கேள்விக்கு  ஜெயமோகன் அளித்த பதில்…

எழுத்தாளர் ஜெயமோகன்
எழுத்தாளர் ஜெயமோகன்

“அன்புள்ள செல்வராஜ்,

இதைவிட ‘அனல்பறந்த’ பாராளுமன்றத்தேர்தலிலேயே நான் ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு இந்த அரசியலில் தரப்பே எடுக்கமுடியவில்லை. காரணம் பேசப்படுவன அனைத்தும் பொய்யான மிகைநாடகங்கள் என அறிவேன். உள்ளே நடப்பதை எவராவது என்னிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

உதாரணமாக கடந்த மூன்றுமாதங்களாகவே ஸ்டாலின் தலைமையில் பாரதியஜனதாவும் திமுகவும் கூட்டணிப்பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. அதற்கு கவிஞர்தான் தூதர். தமிழிசையும் குருமூர்த்தியும் எதிர்ப்பு, இல.கணேசன் ஆதரவு. இந்தப்பக்கம் கனிமொழியின் நிபந்தனைகள். நடுவே மணல்சக்கரவர்த்தியின் தலையீடுகள். இதையெல்லாம் கேரளத்தின் அத்தனை இதழாளர்களும் தண்ணியடித்தால் விரிவாகப்பேசிக்கொண்டிருந்தனர்.

தமிழகத்தில் எந்த செய்தித்தாளிலும் செய்தியில்லை, அது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால் இருகட்சிகளிலும் தொடர்புள்ளவர்கள், இதழாளர்களுக்குத் தெரியாமலா இருக்கும்? இப்போது ஏதோ புதியதாகக் கேள்விப்பட்டவர்கள்போல அவர்கள் ரத்தம்கக்குகிறார்கள். இருபக்கமும் கொள்கைவீரர்கள் கண்ணீர்வடிக்கிறார்கள். நடிப்பா இல்லை அத்தனை அப்பாவிகளா? இல்லை, எனக்குத்தான் ஏதாவது பிரச்சினையா?

நேற்று இதழாளர் ஒருவரிடம் பேசினேன். [சினிமா விவாதத்தில்தான்] இந்தத்தேர்தலில் 2 சதவீதம்தான் வாக்குமாறுபாடு இருக்கும். அதன்பொருட்டே மூன்றாம் அணி என்று சொன்னார். ஆனால் திமுகவுக்கு அது ஒரு பிரச்சினையே அல்ல.அவர்களின் பிரச்சினை பணப்பட்டுவாடாவும் கள்ளவாக்கும்தான். காபந்து அரசாக அதிமுக இருந்தால் ஒன்றும் செய்யமுடியாது. ஆகவே மத்திய அரசின் ஆதரவு தேவை, மத்திய அரசு உண்மையாகவே கடிவாளம் பற்றவும் வேண்டும், இல்லையேல் வெற்றிவாய்ப்பே இல்லை என்றார்.

ஆகவேதான் பாஜக கூட்டணிப்பேச்சுவார்த்தை. ஆனால் அதைத்தடுக்க மணல்சக்கரவர்த்தி முயல்வது பெரிய எதிர்விசை. எதுவும் நடக்கலாம். ஏனென்றால் அவர் இவர்களின் பெரிய நிதியூற்று. அத்துடன் இதைவைத்து பாஜக போடும் நிபந்தனைகளை ஏற்கவும் திமுக தயங்குகிறது. எல்லாவற்றையுமே வதந்திகளாகத்தான் தெரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. எதை நம்புவதற்கும் ஆதாரம் இல்லை.

தமிழகத்தின் நிலைகுறித்து மலையாள இதழாளர்களின் பார்வை ஒப்புநோக்க தெளிவானது, யதார்த்தமானது என்றுபட்டது. ஒன்று, உணர்ச்சிகரமாக ஈடுபாடு என ஏதுமில்லை. ஜெயலெளித, வெய்க்கோ,கலைஞ்சர் என்றுதான் உச்சரிக்கிறார்கள். ஆனால் நேரடியாகவே பயணம்செய்து அறிந்திருக்கிறார்கள்.

அவர்கள் சொல்வதில் முக்கியமானது சென்ற ஐந்தாண்டுக்காலம்தான் தமிழ்வரலாற்றிலேயே ஆட்சி என ஏதும் நிகழாத காலகட்டம் என்பதுதான். எந்த வளர்ச்சித்திட்டமும் இல்லை. எந்த பொதுப்பணிவேலையும் இல்லை. ஏன் அன்றாடப் பராமரிப்புகூட இல்லை. நேரடியான கட்டாய வசூல் மட்டுமே. மறுபக்கம் திமுக வென்றால் மறுபடியும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கேடியின் நேரடி ஆட்சி வரும். அட்டாக்பாண்டிகளின் அரசு. திமுக தலைமையே அதற்குக் கட்டுப்பட்டதுதான்.

ஆனால் ஓர் அரசு ஐந்தாண்டுக்காலம் அடித்துப்பிடுங்கும் பணியை, டாஸ்மாக் விற்பனையை மட்டுமே செய்து அந்தக்காசில் ஒருபகுதியை இலவசங்களாகவும் தேர்தல்கால அன்பளிப்பாகவும் வழங்கி மீண்டும் ஆட்சிக்குவரமுடியும் என்றால் அதைவிட மோசமான முன்னுதாரணம் இருக்கமுடியாது. ஜனநாயகம் என்பதே அழிந்துவிடும்.

கடைக்கோடியில் ஒருகூட்டம் மூன்றாம் அணிக்காக நுரைகக்கி எழுதுகிறார்கள். முஸ்லீம் வாக்கு திமுகவுக்குச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக திடீரென்று கோவைக் கலவரமே திமுக நடத்தியது என்று பேசத்தொடங்குகிறார்கள். ஏன் குண்டுவெடிப்பே திமுக செய்ததாம்! அப்பாவி முஸ்லீம்ளைக் கொல்வதற்காக! ஆனால் அதன்பின்புதான் தமிழகத்தின் வஹாபியக் கட்சிகளை அரசியல் அங்கீகாரம் கொடுத்து திமுக வளர்த்துவிட்டது என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள்.

வஹாபியக்கட்சிகளின் திரட்டப்பட்ட வாக்குகளின் மேல் ஏறி நின்றுகொள்ளலாம் என வைக்கோவும் கம்யூனிஸ்டுகளும் கணக்குப்போடுகிறார்கள். திடீரென முஸ்லீம்கைதிகள் விடுதலை மாநாட்டில் இடதுசாரிகள் போய் நிற்கிறார்கள். பாஜகவின் அணுக்கமான கூட்டணியாக மட்டும் அல்ல அவர்களுடன் தொடர்பு ஊடகமாகவும் வைக்கோ இருந்தார் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

ஆக,எந்த அளவுக்குத் தெரிந்துகொள்கிறோமோ அந்த அளவுக்குச் சோர்வு, தனிமை, கசப்பு. பேசாமல் அமெரிக்கத் தேர்தல் பற்றிக் கவலைப்படலாம் என்று தோன்றுகிறது. குறைந்தது எல்லாவற்றையும் எழுதி அப்பட்டமாக வைத்திருக்கிறார்கள். டிரம்ப்தான் எத்தனை வெளிப்படையானவர் என வியக்கிறேன்

ஆகவே நான் ஒன்றுமே சொல்லப்போவதில்லை. வாக்களிப்புநாளன்று இந்த ஊரிலேயே இருக்கவும்போவதில்லை. இமையமலைச்சாரலில். ஸ்பிடிவேலியில் மலையேற்றம்.

ஜூன்மாதம் எல்லாம் தெளிவாகிவிடும். அதன்பின் பேசவேண்டியதும் இருக்காது”.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.