மனுஷ்ய புத்திரன் என்ற ஆர்.எஸ்.எஸ்

மனுஷ்ய புத்திரன்

என்னை ஆர்.எஸ்.எஸ்காரர்களோடு ஒப்பிட்டு நண்பர் ஆளூர் ஷாநவாஸ் எழுதியிருப்பதாக அறிந்தேன். ஆர்.எஸ்.எஸ்காரர்களோடு நான் சண்டையிட்ட போதெல்லாம் அதைக் கண்டு குதூகலித்த ஷாநவாஸ் இப்போது மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் இவர்கள் ஆடும் நாடகத்தை அம்பலப்படுத்தியதும் அதற்கு பதில் சொல்ல முடியாமல் நான் பதில் சொல்லவிடாமல் தடுத்தேன் என்று பொய் சொல்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்காரர்கள் என்னை இஸ்லாமிய பயங்கரவாதி என்று அழைத்ததற்கும், தவ்ஹீத் ஜமாத் என்னை காஃபிர் என்று தாக்கியதற்கும், ஷாநவாஸ் இப்போது என்னை ஆர்.எஸ்.எஸ் என்று அழைப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தானும் வெறுப்பு அரசியல் சார்ந்த கும்பல் கலாச்சாரத்தின் பிரதிநிதிதான் என்பதை ஷாநவாஸ் நிரூபித்திருக்கிறார்.

நேற்றைய ‘நேர்பட பேசு‘ விவாதம் முடிந்ததுமே பக்கம் பக்கமாக என்மேல் வெறுப்பு கக்கப்படும் என்பது நான் அறிந்ததுதான். இளவரசன் திவ்யாவிற்காக நான் ஊடகங்களில் தனி ஒருவனாகப் போராடியபோது, மதவாத சக்திகளுக்கு எதிர்த்து நான் குரலை உயர்த்தி சண்டையிட்டபோது என் குரலையும் மொழியையும் ரசித்து மகிழ்ந்தவர்கள் இப்போது ஜெயலலிதாவிற்கு ஆதரவாக உருவாக்கப்பட்டிருக்கும் மக்கள் நலக்கூட்டணியை அம்பலப்படுத்துகிறபோது மட்டும் எந்தத் தயக்கமும் இல்லாமல் என்னை ஒரு வன்முறையாளனாக சித்தரிக்கிறார்கள். நேற்று திமுகவை தாக்கும் மக்கள் நலக்கூட்டணியிலிருந்து இரண்டு பேர். மக்கள் நலக்கூட்டணிக்கு உள்நோக்கம் எதுவும் இல்லை என்று நம்பும் ஒரு பத்திரிகையாளர். அதிமுகவின் மறைமுக பிரதிநிதி ஒருவர். இவர்கள் அனைவருக்கும் பதில் சொல்ல நான் ஒருவன் மட்டும்.

நான் எல்லோரையும் பேசவிடாமல் இடைமறித்தேன் என்பது முழுப்பொய். ஷாநவாஸ் பேசும்போது பொருத்தமில்லாத ஜார்ஜ் புஷ் உதாரணத்தை சொல்ல முற்படும்போதுதான் அதை இடைமறித்து மறுத்தேன். அவரவரும் அவர்கள் தரப்பு கருத்துக்களை முன்வைத்தபிறகே இடையில் என் மறுப்புகளை சொன்னேன்.

நேற்று நான் எழுப்பிய கேள்விகள் மிகவும் எளிமையானவை

அதிமுக தன் அரசின்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் ஊடகங்களில் இருந்து ஓடி ஒளிகிறது. மக்கள் நலக்கூட்டணியினரும் அதிமுகவின் சில proxyகளும் திமுக மேல் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு மட்டும் நாங்கள் தினமும் வந்து பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா? ஒரு ஆளும் கட்சியின் நான்கரை ஆண்டுகால மக்கள்விரோத குற்றச்செயல்களை பேசவேண்டிய நேரத்தில் அதன் எதிர்க்கட்சியான திமுகவை குறிவைத்து தொடர்ந்து தாக்குவதன் நோக்கம் என்ன?

விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் திமுக ஆட்சியில் இருந்தபோது கலைஞரை தலித்துகளின் கடவுள் என்றாரே, எந்த உணர்வின் அடிப்படையில் அது சொல்லப்பட்டது? திமுவின் சமூக நீதிக்கான போராட்டங்களை, சாதனைகளை அத்தனை எளிதில் நீங்கள் கடந்து சென்றுவிட முடியுமா?

இன்று மக்கள நலக்கூட்டணியை திடீர் பாசத்துடன் ஆதரிக்கும் நடுநிலை ஊடகங்கள் எப்போதாவது விடுதலைச் சிறுத்தைகள், இடது சாரிகள் நடத்திய போராட்டங்களை கண்டுகொண்டதுண்டா? மக்கள் நலக்கூட்டணி மேல் ஏன் இந்த திடீர் பாசம்? தமிழ்நாட்டில் இல்லவே இல்லாத பா.ஜ.கவிற்கு ஒரு போலியான முக்கியத்துவத்தை ஊடகங்கள் உண்டாக்கி அதன் தலைமையில் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மூன்றாவது அணி உருவாக்கப்பட்டதுபோல இப்போதும் ஊடகங்களில் மக்கள் நலக்கூட்டணிக்கு அளிக்கப்படும் திடீர் முக்கியத்துவத்தின் ரகசியம் என்ன? நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாம் அணி அதிமுகவுக்கு உதவியதுபோல இந்த அணியும் உதவும் என்பதுதான்.

கடந்த காலம் முழுக்க திராவிட கட்சிகளோடு மாறி மாறி கூட்டணி அமைத்தவர்கள் ஆறு மாதத்திற்கு முன்பு ஒரு கூட்டணியை அமைத்து ஆட்சியில் பங்கு கேட்டதும் அதற்குரிய ரெஸ்பான்ஸ் இல்லை என்றதும் தாங்கள்தான் மாற்றத்திற்கான புதிய சக்தி என்று சொல்வதும் யாரை ஏமாற்ற? மக்கள் நலன் சார்ந்து அப்படி இவர்கள் நடத்தி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போராட்டங்கள் என்ன?

மக்கள் நலக்கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு மட்டுமே ஒப்பீட்டளவில் ஒரு வாக்கு வங்கி இருப்பதால் திருமாவளவன் அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கேட்பதில் எல்லா நியாயமும் இருக்கிறது. இன்று மக்கள் நலக்கூட்டணியின் கூட்டங்களுக்கு வருபவர்களில் பெரும்பாலோர் விடுதலைச் சிறுத்தைகளே என்பதை மறுக்க முடியுமா? இடதுசாரிகள், வைகோவின் வாக்கு வங்கி என்ன என்பது ஊரறிந்த ரகசியம். அப்படியிருக்க, எந்த அடிப்படையில் ஆட்சியமைப்போம் என்கிறார்கள்?

இத்தகைய என்னுடைய அடிப்படைக் கேள்விகள்தான் இங்கு பலரையும் துன்புறுத்துகின்றன.

நேற்று வரை தொலைக்காட்சி விவாதங்களில் மக்கள் நலக் கூட்டணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று சொல்லிய நடுநிலை நாயகர்கள் திமுக எதிர்ப்பு என்ற ஒரே அளவுகோலில் இன்று மக்கள் நலக்கூட்டணியை ஆதரிக்கிறார்கள். ஏனென்றால் இப்போது ஜெயலலிதாவை நேரடியாக ஆதரிக்க முடியாதே. அதனால்தான் இந்த ஏற்பாடு.

நேற்றுவரை ஊடகங்களில் பா.ஜ.க.வை மூர்க்கமாகத் தூக்கிப்பிடித்தவர்கள் இன்று ஏன் மக்கள் நலக்கூட்டணியை ஆதரிக்கிறார்கள்? இடதுசாரிகள், வைகோ, திருமா ஆகியோரின் எந்த அரசியலையாவது இவர்கள் இதுவரை அங்கீகரித்ததுண்டா? இந்தக் கேள்விகளை எல்லாம் நான் எழுப்புவதுதான் இவ்வளவு ஆத்திரத்திற்கு காரணம். பொய்களையும் நாடகங்களையும் நேருக்கு நேர் சந்திப்பது அவ்வளவு எளிய பணியல்ல. இந்தப் போராட்டத்தில் எல்லாவிதமான அவதூறுகளையும் சந்தித்திருக்கிறேன்

மனுஷ்ய புத்திரனை ஊடக விவாதங்களுக்கு அழைக்கக்கூடாது என்றெல்லாம் சில தோழர்கள் இந்த்துத்துவா சக்திகளுக்கு இணையாக எழுதத்தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள்தான் சகிப்பின்மையைப் பற்றி பேசக்கூடியவர்கள் வாழ்த்துக்கள்.

(நேற்று விவாதம் முடிந்ததும் அதிமுகவின் நிழல் பிரதிநிதியான ஷேக்தாவூது என்னை ஒருமையில் திட்டி கத்த ஆரம்பித்தார். அவரை பிரித்துக் கூட்டிகொண்டுபோய் காரில் ஏற்றி அனுப்பினார்கள்.)

மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர்; திமுக உறுப்பினர்.

2 thoughts on “மனுஷ்ய புத்திரன் என்ற ஆர்.எஸ்.எஸ்

  1. நேற்று நான் நேர்பட பேசும் நிழ்ச்சியை பார்த்துக் கொண்டு இருந்தேன் ஷா நவாஷ் அவர்களுக்கு என்ன தோன்றியதோ அதே எண்ணம் தான் எனக்கும் மனுஷ்ய புத்திரன் அவர்கள் மீது உண்டாயிற்று காவிகள் தான் இப்படி அவர்களுக்கு எதிராக பேச்சு வரும் போது அடுத்தவரை பேசவிடாமல் காட்டுக் கத்து கத்தி அடக்க முனைவார்கள் குணா ஏதோ சொல்லிப் பார்த்தார் அடங்கவில்லை மிக மோசமாக நடந்து கொண்டார் மக்கள் நல கூட்டணிக்குள் சிண்டு மூட்டி விட முனைந்தார் ஸ்டாலின் சொல்லி விட்டு இருப்பார் போல மனுஷ்ய புத்திரன் மனு புத்திரர் மாதிரி பேசினார் கண்டிப்பாக இவருக்கு M.L.A சீட்டு கிடைக்கும்

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.