சமூக நீதி என்பது திமுகவுக்கு மட்டும் சொந்தமா?

இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஆளும் அதிமுக அரசைவிட அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது திமுக. ஆட்சியில் இருந்தபோது அதன் நடவடிக்கைகளால் வெறுத்துப் போய் விமர்சிப்பது போய், ஆட்சியில் இல்லாதபோதும் விமர்சிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது திமுக. அதிக எதிர்ப்பார்ப்புகள் உள்ள ஒன்றின் மீதுதான் அதிகம் விமர்சனம் எழும். அந்த வகையில் 35 ஆண்டுகால தமிழகத்தை ஆண்ட, பல நல்ல சமூக மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் திராவிட கட்சிகள் மீது மக்கள், குறிப்பாக திராவிட கருத்தியலை முதன்மையாக முன்வைத்த திமுக மீது விமர்சனம் எழுவது இயல்பானதே.

ஆனால் அதே நேரத்தில் தொடக்கத்தில் இருந்த அதே திராவிட கருத்தியலோடுதான் திமுக இருக்கிறதா என்கிற கேள்விக்கும் நாம் பதில் தேட வேண்டும். இந்த பதிலை நோக்கிப் போகும்போது, பல விஷயங்கள் நம் முன் விரிகின்றன.

1969-ஆம் ஆண்டு அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதுவரையில் இல்லாத தலைவர் என்கிற பதவி உருவாக்கப்படுகிறது. அந்தப் பதவியை இன்று வரை தக்க வைத்துக்கொண்டதன் மூலம், திராவிட முன்னேற்றக் கழகத்தை குடும்ப சொத்தாக மாற்றிக்கொண்டதற்கு அன்றே விதை போடப்பட்டது எனலாம். திராவிட கருத்தியல் திமுக எனவும் குடும்பச் சொத்தைக் காப்பாற்ற பல முறை வளைந்து கொடுக்கப்பட்டதும் இதனால்தான். திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய நெடுஞ்செழியன், மதியழகன், ஈவிகே சம்பத், நடராஜன் ஆகியோர் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டார்கள். க. அன்பழகன் மட்டும் திமுக பொதுச் செயலாளர் என்னும் பதவியோடு திமுகடன் இருக்கிறார்.

திமுகவை உருவாக்கியவர்கள் பற்றிய விவரத்தைக் கூட திமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்க முடியாது. திமுக என்றால் கருணாநிதியும் ஸ்டாலினும்தான் என்று உருவாக்கப்பட்டுவிட்டது. பொதுநலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கட்சி, சமூக நீதிக்காக உருவாக்கப்பட்ட ஒரு கட்சி எப்போது தனிப்பட்ட ஒருவரின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது, அப்போது அது முன்வைத்த பொதுநலனும் சமூகநீதியும் காணாமல் போய்விடுகிறது.

எனில், திமுக சமூக நலனுக்காக எதையும் செய்யவில்லை? செய்தது. அது ஒருவகையான நிர்பந்தம். தமிழகத்தில் பெரியாரும் அவர் வழிவந்த அண்ணாவும் சமூக நீதி கோட்பாட்டை சாமானியன் வரை கொண்டு சென்றுவிட்டார்கள். கருணாநிதி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரானபோது லட்சக்கணக்கான தொண்டர்கள் அண்ணாவின் தம்பிகளாகத்தான் இருந்தார்கள். எனவே, சமூக நீதி கோட்பாட்டை தாங்கும் நிர்பந்தம் திமுக தலைமைக்கு இருந்தது. அதே வழியில் திமுகவில் இருந்து பிரிந்து உருவான அதிமுகவுக்கு சமூக நீதி கோட்பாட்டை தொடரும் நிர்பந்தம் இருந்தது.

திராவிட கட்சியாக சொல்லப்பட்டாலும் கடவுள் நம்பிக்கையை, வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளும் அதிமுகவின் தற்போதைய பொதுச் செயலாளரான ஜெயலலிதாவுக்கும் சமூக நீதி கோட்பாட்டை தொடரவேண்டிய நிர்பந்தம் இருந்தது. திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, சமூக நீதி காத்த வீராங்கனை என ஜெயலலிதாவுக்கு பட்டம் அளித்தது நினைவிருக்கலாம்.

பெரியார்-அண்ணா ஏற்படுத்திய வழியில்தான் 35 ஆண்டுகாலம் பயணம் செய்தன திமுகவும் அதிமுகவும். இனிவரும் காலத்திலும் அந்த வழியில் தான் பயணித்தாக வேண்டிய கட்டாயம். ஆனால், நாங்கள்தான் சமூக நீதி காப்பவர்கள் என திமுகவும் சரி அதிமுகவும் சரி உரிமை கோர முடியாது. தமிழகத்தில் உள்ள பாஜக, சில சாதிக் கட்சிகள் தவிர மற்ற அனைவரும் சமூக நீதி பேசுகிறவர்கள்தான்.

திமுக மீது விமர்சனம் வைக்கும்போதெல்லாம், திமுகவினரும் திமுக ஆதரவாளர்களும் வைக்கும் முதன்மையான வாதம், திமுகவைத் தவிர, சமூக நீதி காக்க வேறு கட்சியே தமிழகத்தில் இல்லை; அதனால்தான் திமுக பலவீனமாகக் கூடாது என்கிறோம்’ என்று வாதாடுகிறார்கள்.

35 ஆண்டு காலம் மாறி மாறி திராவிடக் கட்சிகள் ஆண்ட தமிழகத்தில்தான் இன்று மூளைக்கு மூளை சாதியக் குழுக்கள் தோன்றி, மிக வலுவான அதிகார மையங்களாக மாறிவருகின்றன. குறிப்பிட்ட தொகுதியில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவரை மக்கள் பிரதியாக தேர்ந்தெடுத்து சாதிய அரசியலை ஆரம்பித்து வைத்த திராவிடக் கட்சிகளுக்கு இந்த பங்கு இல்லாமல் போகுமா? சாதி ஆணவக் கொலைகளாக, பல இளைஞர்களை பலிவாங்கிக் கொண்டிருக்கும் இந்த சாதி அரசியலைத் துவக்கி வைத்த பெருமை திராவிட கட்சிகளைத்தானே சேரும்.

பெரியார் முன்வைத்த சாதி ஒழிப்பும் தீண்டாமை ஒழிப்பும் எங்கே போனது. ஒரு தலித் முதியவரின் பிணத்தை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல முடியாத நிலையில்தானே சமூக நீதி காத்தவர்கள் சமூகத்தை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

சாதி அரசியலை முன்னெடுத்து இப்போது மத அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளோடு கூட்டணி வைக்கவும் தயாராகிவிட்டதை சமூக நீதி கோட்பாட்டின் எந்த அத்தியாயம் சொல்கிறது? ஆணவக் கொலைகளையும் தீண்டாமையையும் எதிர்த்து விதியில் இறங்கிப் போராடும் கம்யூனிஸ்டுகள் சமூக நீதியை முன்னெடுக்க மாட்டார்களா? திராவிட முன்னேற்றக் கழகம் கைவிட்ட கொள்கைகளைத்தான் மாற்று அரசியலாக இவர்கள் முன்வைக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தை குடும்பச் சொத்தாக்கலாம்; சமூக நீதி கோட்பாட்டையுமா குடும்பச் சொத்தாக்க முடியும்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.