கொங்கு பகுதியின் சாதிய குழுக்களின் வன்மத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் இந்த ஒலிப்பதிவு வாட்ஸ் அப்பில் அதிகமாக பகிரப்பட்டாலும் இணையத்தில் முதன் முதலாக பதிவேற்றியது தி டைம்ஸ் தமிழ் டாட் காம்.
இதன் விளைவாக கொலை மிரட்டல் விடுத்த சாதியவாதிகளை கைது செய்ய வலியுறுத்தி மக்கள் இயக்கங்கள் கோரிக்கை வைத்திருக்கின்றன. செவ்வாய்கிழமை திராவிடர் விடுதலைக் கழகம் சாதி ஆணவ கொலை செய்வோம் என மிரட்டிய நபர்களை கைசெய்ய வலியுறுத்தி காவல்துறையில் புகார் அளித்திருக்கிறது.
இதுகுறித்து வைரம் தி.வி.க தன்னுடைய முகநூலில்,
“ஜாதிவெறியர்களை கைதுசெய்…
அருந்ததிய இளைஞரை காதலித்தால் கௌரவ (ஆணவ)கொலை செய்வோம் என்றும், அந்த இளைஞரையும் கொலைசெய்வோம் என்றும் திருச்செங்கோடு செங்குந்தர் கல்லூரி மாணவியை “அலைபேசி”யில்(யுவராஜ் பாணியில்)மிரட்டிய கவுண்டர் ஜாதிவெறியர்களை வன்கொடுமை தடுப்பு மற்றும் கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் கைதுசெய்…! மாணவிக்கு தகுந்த உயிர் பாதுகாப்பு வழங்கு…! என்று நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறையில் இன்று புகார் அளித்துவிட்டு பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களை சந்தித்து செய்திகளை பதிவு செய்தோம்.
உடன் மாவட்ட கழகசெயலாளர் சரவணன், பள்ளிபாளையம் நகரகழக செயலாளர் பிரகாசு, திருச்செங்கோடு நகரகழக செயலாளர் நித்தியானந்தம், நகர இளைஞரணி செயலாளர் பிரகாசு, ஒன்றிய அமைப்பாளர் சதீசு, கார்த்தி உள்ளிட்ட கழகத்தோழர்கள் வந்திருந்தனர்” என்று பதிவிட்டிருக்கிறார்.
நாகை மாவட்டம் திருநாள் கொண்டச்சேரியில் தலித் முதியவரின் பிணத்தை பொதுப் பாதையில் கொண்டு செல்ல முடியாத நிலைமை குறித்து முதன்முதலில் செய்தி ஆக்கியது தி டைம்ஸ் தமிழ் டாட் காம். ஒரு சில வெகுஜென ஊடகங்கள் என்ன பிரச்சினை என்று குறிப்பிடாமலேயே செய்தியை வெளியிட்டன. சமூக வலைத்தளங்களில் நாம் வெளியிட்ட செய்தி பரவலாக பகிரப்பட்ட நிலையில், சில மக்கள் இயக்கங்கள் இதைப் போராட்டமாக கையில் எடுத்தன. அதன்பிறகே வெகுஜென ஊடகங்களில் அது செய்தி ஆனது.
அதுபோல, ரோஹித் வெமுலா தன் நண்பர்களுடன் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, அம்பேத்கரின் படத்துடன் சாலைகளில் படுத்துறங்கிய காட்சியை பதிவாக்கியது தி டைம்ஸ் தமிழ் டாட் காம்.
வெகுஜென ஊடகங்கள் விலக்கி வைத்திருக்கும் ஆழமான சமூக பிரச்சினைகளை சுட்டிக் காட்டுவதை தன்னுடைய பணியாக தி டைம்ஸ் தமிழ் டாட் காம் செய்யும். அதற்கான பாதையை மேலே கூறியிருக்கும் சம்பவங்கள் அமைத்துக் கொடுத்திருக்கின்றன.
– ஆசிரியர் குழு.
தி டைம்ஸ் தமிழ் டாட் காம் பணி சிறக்க வாழ்த்துக்கள்
LikeLike