#காதல்மாதம்: எங்கே போனது காதல்?

நந்தன் ஸ்ரீதரன்
nandhan sridhar
நந்தன் ஸ்ரீதரன்

இது ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது..

அப்போது நடிகர் விஜய் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் பாஸ்கர் காலனியில் அந்த குளம் உள்ள பார்க் உருவாக்கப்பட்டிருக்கவில்லை.. ஆனால் அந்த ஏரியாவே தண்மையாக இருக்கும்.. தூங்கு மூஞ்சி மரங்களின் நிழலும், டிராபிக் குறைவான சாலைகளுமாக அந்த ஏரியா ஏகாந்தத்துக்குப் பக்கத்தில் இருக்கும் – சென்னையின் நொடிக்கு நான்கைந்து வாகனங்கள் கடக்கும் தெருக்களின் இடையில் நிமிடத்துக்கு பத்து அல்லது பதினைந்து வாகனங்கள் போகும் தெருக்கள் எல்லாம் ஏகாந்தத்தின் அருகில் இருப்பவைதாம்.

எனக்கு அந்த இடம் மிகப் பிடிக்கும். ஒரு பக்கம் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் ஓவர்ஹெட் டேங்க் அதன் காலடியில் குளம் என்று இருக்கும்.. குளத்தில் நீர் இருக்கும் காலங்களில் கொசுக்கள் பெருகினாலும் குளுமை அங்கு நிறைந்திருக்கும்.. எதாவது கதை விவாதம் என்றால் வண்டியுடன் அங்கே சென்று விடுவோம். வண்டிகளை சென்டர் ஸ்டாண்ட் போட்டுவிட்டு அவரவர் வண்டியில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசுவோம்..

அப்போதே அந்த ஜோடி அங்குதான் வருவார்கள். அந்த இளைஞர் இருபத்தெட்டிலிருந்து முப்பது என்ற அளவில் இருப்பார். அந்தப் பெண்மணி முப்பத்திரண்டு அல்லது அதற்கு மேல் என்ற நிலையில் இருப்பார். உயரத்திலும் அந்தப் பெண்மணி அவரை விட இரண்டு மூன்று இஞ்ச் கூட இருப்பார்.. அவர்கள் பாட்டுக்கு வண்டியில் வருவார்கள். ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு சத்தம் மற்றவர்களுக்குக் கேட்காமல் பேசியபடி இருப்பார்கள். பகல், மாலை, இரவு என்ற பேதங்களெல்லாம் இல்லை. வருவார்கள் பேசுவார்கள். மற்றபடிக்கு பாலியல் ரீதியான தொடுகைகள் உரசல்கள் எல்லாம் இருக்காது. ஆனாலும் அவர்களுக்கு நடுவில் வழியும் காதல் பார்ப்பவருக்கு எளிதில் புரியும்..

அப்புறம் பாஸ்கர் காலனி பார்க்கை கட்டினார்கள். அந்த குளத்தைச் சுற்றி கம்பி வேலி போட்டு சிமிட்டிக் கல் பாவிய நடைபாதை போட்டார்கள். தெருமரங்களின் குளுமை பூங்காவுக்குள் படர்ந்தது. போதாததற்கு பூங்காவுக்குள்ளும் இரண்டோ மூன்றோ தூங்கு மூஞ்சி மரங்கள். அவ்ளவு ரம்யமும் குளுமையும்..

அப்போதும் அவர்கள் இருவரும் அங்கே வருவார்கள். உள்ளே ஒரு இருட்டு ஓரமாக உட்கார்ந்து மணிக்கணக்கில் பூங்கா மூடும் வரை உட்கார்ந்து பேசுவார்கள்.. அப்புறம் பாஸ்கர் காலனி பூங்காவுக்கு கூட்டம் அதிகரித்து விட்டது. இப்போதெல்லாம் அங்கே பார்க் திறந்திருக்கும்போது போனால் மாரத்தான் கூட்டமளவுக்கு வாக்கிங் போகிறார்கள். குழந்தைகளுக்கான ஊஞ்சல்கள், சறுக்கு மரங்கள், சீசா பலகைகள் என்று பார்க்கும் தனிப்பொலிவு பெற்றுவிட்டது. அதன் காரணமாக குழந்தைகளோடு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது..

அந்த ஜோடியை அந்த பார்க்கில் இப்போது பார்க்க முடிவதில்லை..

நான் குடியிருப்பது சாலிகிராமம் காந்தி நகர் ஏரியா.. இதுவும் கொஞ்சம் ஏகாந்தமான ஏரியாதான்.. சமீப இரண்டு வருடங்களாக அந்த ஜோடி இந்தப் பக்கமாகத்தான் உலாவுகிறார்கள். உலாவுதல் என்றால் பைக்கில் ..\

இப்ப அந்த இளைஞருக்கு முப்பத்தேழு கிட்ட.. அவங்களுக்கு நாற்பது கிட்ட..

இப்போது என்ன வித்தியாசம் என்றால் பைக் ஓட்டியபடி அந்த இளைஞர் சத்தமாக அந்தப் பெண்மணியை திட்டியபடி வண்டி ஓட்டுகிறார். வசை என்றால் அனைத்தும் கெட்ட வார்த்தை வசைகள். அவரை பாலியல் தொழிலாளியாக சித்தரிக்கும் வசைகள்..

அந்தப் பெண்மணி ஒரு வார்த்தையும் பேசாதவராக பின்னால் உட்கார்ந்தபடி போகிறார்.. அல்லது நான் பார்க்கும்போது அவர் எந்த வார்த்தையும் பேசுவதில்லை.. சில நேரம் நான் வண்டியில் போகும்போது அவர்களது வண்டி எனக்குப் பின்னால் வரும் அல்லது நான் தொடர்ந்து போக வேண்டி வரும்.. அந்த ஒரு அல்லது இரு நிமிடப் பொழுதில் இத்தனை வசவை எப்படித் தாங்குகிறார் இந்தப் பெண்மணி என்று எனக்கு திகைப்பாக இருக்கும்..

இன்று மாலை கூட அவர்களது இந்த ஊர்வலத்தைப் பார்த்தேன்.. அந்த இளைஞர் அந்தப்பெண்மணியை மிகக் கொடூரமாக திட்டியபடி வண்டியோட்டிச்சென்றார்.. பின்னால் அலமலர்ந்து அமர்ந்தபடி அந்தப் பெண்மணி கலங்கிய கண்களுடன் சென்றார்..

இதே போல் இன்னொரு ஜோடி..

அவர் வெள்ளை பேண்ட் வெள்ளை சட்டை கண்ணாடி அணிந்திருப்பார். குறைந்தது ஐம்பதுக்கருகில் இருக்கும் வயது. அந்தப் பெண்மணிக்கு முப்பத்தெட்டு அல்லது நாற்பது..

ஒரு நாள் எங்கள் வீட்டை ஒட்டிய தெருவில் அரையிருளில் அந்தப் பெண்மணியை கொஞ்சியும் மிரட்டியுமாக எங்கோ கூப்பிட்டபடி இருந்தார். எனக்கு என்ன நடக்கிறது என்று கேட்கும் தைரியம்இல்லை.. பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்தப் பெண்மணியின் கையை அவர் முறுக்கியது போல் இருந்தது. அப்புறம் அவர்களைக் காணவில்லை.. அந்த உரையாடல் முழுக்க அந்தப் பெண்மணிஅழுதபடி இருந்ததை கவனித்திருந்தேன்.

போன மாதம் ஒரு நாள்.. தெருவில் நின்று ஒரு நண்பருடன் போனில் பேசிக் கொண்டிருந்தேன். அதே வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் ஆள்.. அதே பெண்மணி.,. அன்று அந்தப் பெண்மணி பட்டவர்த்தனமாக அழுது கொண்டிருந்தார். அந்த ஆள் பேசியதற்கு கொஞ்சமாவது சத்தமாக ஆட்சேபணை தெரிவித்துக் கொண்டிருநதார். அந்த ஆள் விடாமல் அந்தப் பெண்மணியை எங்கோ அழைத்துக் கொண்டிருந்தார். அந்தப் பெண்மணி மறுத்துக் கொண்டிருந்தார்..

ஒரு கட்டத்தில் நான் போனை கட் பண்ண முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கவே அந்த ஆள் அந்தப் பெண்மணியை அதட்டிவிட்டு மரியாதையா பின்னாடி வா.. என்று சொல்லிவிட்டு முன்னால் நடந்தார்.. அந்தப் பெண்மணி பேசாமல் நின்ற இடத்திலேயே நின்றார். அந்த ஆள் பெண்மணி தொடர்ந்து வருவார் என்ற நம்பிக்கையில் விவேகானந்தர் தெருவை நோக்கிப் போனார்.. அந்தப் பெண்மணி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. படக்கென்று ஓட்டமும் நடையுமாக இவர்கள் இருவருக்கும் இடையில் பிரியும் வஉசி தெருவுக்குள் ஓடி அதன் வழியாக ஓடத் துவங்கினார்..

விவேகானந்தர் தெருவுக்குள் திரும்ப எத்தனித்த அந்த வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் மனிதர் திரும்பி பார்த்து அந்த பெண்மணியைக் காணவில்லை என்றதும் பதறி ஓடி வந்தார்.. ஓட்டமும் நடையுமாக வஉசி தெருவில் சென்று கொண்டிருந்த பெண்மணியை சைல்டு ஃபுரூட் ஸ்கூல் கேட்டின் அருகிலேயே பிடித்து விட்டார்.. கேட்டின் மேலிருந்து ஒளிர்ந்த விளக்கின் வெளிச்சத்தில் அவரது முடியைப் பிடித்து சப்பு சப்பென்று நான்கைந்து அறைகள் வைத்தார்.. எனக்கு அப்படியே நெஞ்சம் கொதித்துப் போனது..

பேசிக் கொண்டிருந்த போனை கட் செய்து விட்டு பக்கத்து ஃபிளாட்டில் புதிதாக தேனியில் இருந்து குடிவந்திருக்கும் தம்பி முஜீப்பை அழைத்துக் கொண்டு வேக வேகமாக அவர்களிடம் சென்றேன்.. முக்கிய நோக்கமே அந்த மனிதனை முதலில் கன்னம் கன்னமாக அறைவதுதான்.

டேய்.. நில்லுடா.. என்னடா உன் பிரச்சினை..? எதுக்கு அந்த லேடியை அடிக்கிற..? என்றுதான் துவங்கினேன்.. அந்த மனிதர் ஆடிப் போய் விட்டார். ஒண்ணுமில்ல சார்.. புருஷன் பொஞ்சாதி பிரச்சினை என்றார்..

செருப்பு பிஞ்சிரும்.. புருஷன் பொண்டாட்டி பிரச்சினைன்னா தெருவுல வச்சு ஒரு லேடிய அடிப்பியா..? …………… கொன்னுருவேன்.. என்றவன், அந்தப் பெண்மணியிடம், என்னம்மா பிரச்சினை? என்றேன்..

ஒண்ணும் இல்லங்க சார்.. இவரு என் வீட்டுக் காரருதான். சும்மா குடும்ப சண்டை என்றார்.. ஆனால் அவரது கண்கள் அவர் பொய் சொல்வதை தெளிவாக காட்டிக் கொடுத்தன. எனக்கு உறுதியாக அவர்கள் கணவன் மனைவி அல்ல என்று தெரிந்தது..

அந்த ஆளிடம் அடிச்சன்னு தெரிஞ்சது.. துரத்தி வந்து அடிப்பேன்.. போடா.. என்றேன் நான்..

இருவரும் மௌனமாக நடந்து போனார்கள்..

இரண்டு சம்பவங்களும் தொடர்பில்லாதவை..

ஆனாலும் இரண்டு சம்பவங்களும் ஒன்றுதான்..

அந்த பைக் ஓட்டிச் செல்லும் ஆளும், அந்த வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் ஆளும் வேறு வேறு ஆட்கள்தான்.. ஆனால் அந்த பைக்கின் பின்னால் உட்கார்ந்திருந்த பெண்மணியும், அந்த மனிதரிடம் அடி வாங்கிய பெண்மணியும் ஒன்றுதான் என எனக்குத் தோன்றுகிறது.. இருவருமே ஆண்களால் பயன்படுத்தப் படுபவர்கள்.. இருவருமே ஆண்களால் குற்றவுணர்வுக்கு ஆட்படுத்தப் படுபவர்கள்.. கண்ணை மூடி யோசித்தால் இந்த லிஸ்ட் இவர்கள் இருவரோடு முடியவில்லை என்பது நன்றாகப் புரிகிறது.

நந்தன் ஸ்ரீதரன், எழுத்தாளர்; வசனகர்த்தா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.