மக்கள் நலக் கூட்டணியை ஆதரித்து பத்திரிகையாளர் ஞாநியும் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியும் தங்களுடைய முகநூல் பக்கத்தில் கருத்து இட்டிருந்தனர். இதை ஆதரித்தும் நிகராகரித்தும் பல வகையான விவாதங்கள் முகநூலில் எழுந்துள்ளன. ஞாநியும் பத்ரியும் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பது முதலில்…
ஞாநி சங்கரன்
அ.தி.மு.கவா தி.மு.கவா என்றால் இன்று நான் தி.மு.கவுக்கே என் ஓட்டை அளிப்பேன். தி.மு.கவா மக்கள் நலக்கூட்டணியா என்றால் இன்று நான் மக்கள் நலக் கூட்டணிக்கே என் ஓட்டை அளிப்பேன்.
மக்கள் நலக் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வியை ஊடகங்கள் சில நியாயமான அக்கறையோடும் பல விஷமமான நோக்கத்தோடும் கேட்டு வருகின்றன. குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் கூட்டாட்சி அமைக்க முன்வரும் நான்கு கட்சிகள் ஒற்றை முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கத் தேவையே இல்லை. மாறாக அவற்றின் பிரதிநிதிகள் சுழற்சி முறையில் முதல்வர் பொறுப்பை ஏற்பதே சரியாக இருக்கும். இந்த சுழற்சி முறைப்படி நான்கு கட்சிகளில் ஒன்று தலித் இயக்கமாகவும் இருப்பதால், தலித் முதலமைச்சரும் இதே அணியிலிருந்து வரும் சாத்தியமும் ஏற்படுகிறது. எனவே சுழற்சி முறையில் முதலமைச்சர் வேட்பாளர் என்பதே சரியான தீர்வு. இந்த என் கருத்தை மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களிடமும் தெரிவித்துள்ளேன்.
ஃபேஸ்புக்கில் இன்று படித்ததில் பிடித்தது:
அ.தி.மு.க.வின் B டீம் தி.மு.க.!
தி.மு.க.வின் B டீம் அ.தி.மு.க.தான்!
தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்று வேண்டும் என்று மெய்யாகவே கருதுகிற, அரசியல் மாற்றம் வரவேண்டும் என்று விரும்புகிற அனைவரும் அவரவர் தொகுதியில், வேட்பாளராக இருக்க தகுதியானவர் என்று தாங்கள் கருதுவோர் பெயர்களை, மக்கள் நலக்கூட்டணிக்குப் பரிந்துரைத்து அனுப்பவேண்டும் என்று விரும்புகிறேன். 234 தொகுதிகளிலும் மக்கள் மதிக்கக்கூடிய, நேர்மையான, திறமையான சரியான வேட்பாளர்களை முன் நிறுத்த முடிந்தால்தான் அரசியல் மாற்றம் நிகழமுடியும்.
ஞாநி சங்கரன்
மக்கள் நலக் கூட்டணிக்கு எதிராக ஏன் அ.தி.மு.கவை விட அதிகமாக தி.மு.கவினர் சிலர் பொங்கி எழுகிறார்கள் என்று விசாரித்தேன். ஒரு அ.தி.மு.ககாரர் சொன்ன விளக்கம் இது: ” எங்களோட முதல் இடத்தை யாராலும் தட்டிப் பறிக்கமுடியாதுன்னு நாங்க தைரியமா இருக்கோம். தி.மு.கவுக்கு போன தடவையே ரெண்டாவது இடமும் பறி போயிடுச்சு. அது அப்ப விஜய்காந்த்தால. இப்ப அந்த ரெண்டாம் இடத்தை மக்கள் நலக் கூட்டணி தட்டிகிட்டுப் போயிடுமோங்கற பயத்துலதான் அவங்க எரிச்சலடையறாங்க.” இந்தக் கருத்தை நான் முற்றிலுமாக ஒப்புக் கொள்ளவில்லை. முதல் இடத்திலிருந்து தன்னை அசைக்க முடியாது என்ற அ.தி.மு.கவின் நம்பிக்கையே தவறானதுதான். அ.தி.மு.கவுக்கு எதிரான மக்கள் அதிருப்தி நீறு பூத்த நெருப்பாக கனிந்துகொண்டிருப்பதை அவர்கள் உணரவில்லை. ஆனால் தன்னை மக்கள் நலக் கூட்டணி முந்திப் போய்விடுமோ என்ற கலக்கம் தி.மு.கவினருக்கு இருப்பது புரிந்துகொள்ளக் கூடியது. 18 முதல் 25 வரை உள்ள புதிய இளம் வாக்காளர்கள் மனது வைத்தால், தமிழகத்தில் தி.மு.க, அதி.மு.க இரண்டுக்குமான மாற்று நிச்சயம் வெல்ல முடியும்.
தற்போதைய நிலையில் சட்டமன்றத் தேர்தல் நடந்தால் என் வாக்கு மக்கள் நலக் கூட்டணிக்கே. என் முழுமையான ஆதரவு அந்தக் கூட்டணிக்கே.
இதற்கு வந்த எதிர்வினைகள்…
வைகோ, ஞாநி, நெல்லை கண்ணன் ஆகிய ராசியான கைகளை தொடர்ந்து பத்ரியும் மக்கள்நல கூட்டணியை ஆதரிக்கிறார். கம்யூனிஸ்டுகள் ஏன் எப்போதும் படுகுழியிலேயே விழுந்துக் கொண்டிருக்கிறார்கள்?
வெண்ணெய் சுதந்திரம்!
————————————–
நாலு பேர் ஒரு செயல் திட்டத்தோடு ஒன்றாக சேர்ந்து போறாங்க. எதுக்குப் போறாங்க, ஏன் போறாங்க என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம். அதற்குள் கொலை செய்யப் போறாங்க, குத்தப் போறாங்க, வஞ்சகத்தோட போறாங்க, மண்ணைக் கவ்வப் போறாங்க, தேற மாட்டாங்க என்று ஏகப்பட்ட புரணிகள், புரட்டுகள்.
எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்; எது தங்களுக்கு சரி என்றுப் படுகிறதோ, எது தங்களுக்கு லாபம் என நினைக்கிறார்களோ அதைச் செய்ய, அவர்களுக்கு இந்த ஜனநாயக நாட்டில் உரிமை இருக்கிறதா இல்லையா?
நான் விரும்புகிற மாதிரிதான் நீ நடந்துகொள்ள வேண்டும்; இங்க இரு அல்லது அங்கப் போ, ரெண்டும் கெட்டானா இருந்து என் பிழைப்பைக் கெடுக்காத; இல்லையென்றால் இப்படித்தான் உன்னை வம்புக்கிழுப்பேன்; அவதூறு செய்வேன்; புரணி பேசுவேன்; உன் பிழைப்பைக் கெடுப்பேன் என்பதுக்கும்
“நம்ம சாதி புள்ளையா இருந்துட்டு அந்த சாதி பையனோடு சேர்ந்து சுத்துற. அவண்ட்ட அப்படி என்ன இருக்கு? லாரில போட்டு அரைச்சுப்புடுவோம்… வீட்ல சொல்லிப்புட்டே செஞ்சுப்புடுவோம்” என்பதுக்கும்
இரண்டுக்கும் பின்னால் இயங்கும் வன்முறை – கூடுதல், குறைவு என்பதைத் தவிர – ஒரேவிதமானது என்றே நான் நினைக்கிறேன்.
நாலு பேர் அவங்க விருப்பப்படி போவதை அவதூறு செய்யும் ஆட்களில் பெரும்பான்மை பேர், சாதியைக் காப்பாற்ற கொலை செய்யவும் தயங்கமாட்டேன் என்பவனை தூற்றுபவர்களிலும் இருக்கிறார்கள். கருத்து சுதந்திரம், தனி மனித சுதந்திரம் என்றுகொண்டு!
இதென்ன இரட்டை வேடம்… வெற்றிபெற வாய்ப்புள்ள, வலிமையான இரண்டு பெரிய கட்சிகள் மட்டும்தான் போட்டி போடலாம்; சிறிய கட்சிகள், சுயேட்சைகள் எல்லாம் எதுக்கு நேரத்தை விரயம் செய்துகொண்டு; அவர்களுக்கு தடை விதித்து விடலாம் என்பதை நோக்கி இவர்கள் நகர மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்.