பாபுராஜ்

விசாரணையில் வரும் பாண்டி போலீஸிடம் அடி மேல் அடிவாங்கி, ஒரு கட்டத்தில், ‘எவ்வளவு வேணும்னாலும் அடிச்சுக்க’ என்ற மரத்துப்போன நிலைக்கு வருவதற்கு முன்பே, எனக்கு மரத்துவிட்டது.
பொதுவெளியில் காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் வீடியோக்களாக இணையத்தில் பார்க்கக் கிடைக்கின்றன. அரசை எதிர்த்து போராடுகிறவர்கள் முதலில் எதிர்கொள்வது காவல்துறையின் வன்முறையைத்தான்.
டாஸ்மாக்கை மூடச் சொன்னால் அடிக்கிறது. தலித் மாணவனின் தற்கொலைக்கு நியாயம் கேட்டால் தாக்குகிறது. சமானியர்களையும் விட்டு வைப்பதில்லை. டெல்லியில் இளைஞன் ஒருவனை கையை தூக்கச் சொல்லி லத்தியால் அவன் புட்டத்தை பிளக்கும் வீடியோவை சில நொடிகளுக்கு மேல் பார்க்க முடியவில்லை.
இந்த அராஜகங்களை ரகசியமாக அல்லாமல் பொது இடத்தில் மீடியாவுக்கு முன்பாகவே காவல்துறை அரங்கேற்றுகிறது. பேஸ்புக்கில் இந்த வீடியோக்களை பகிர்ந்தவர்கள்தான், ‘விசாரணையைப் பார்த்து கலங்கிப் போனேன்’, ‘காவல்துறையில் இப்படியெல்லாமா அராஜகம் நடக்கிறது?’, ‘விசாரணை காவல்துறையின் இருண்ட பக்கத்தை திறந்து காட்டியிருக்கிறது’ என்றெல்லாம் அதிர்ச்சி காட்டுகிறார்கள். இதுபோன்ற ‘ஐரணி’களைத்தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
வெற்றிமாறனோ இல்லை வேறு யாரோ காவல்துறையின் அத்துமீறல்களை அம்பலப்படுத்த வேண்டியதில்லை. அவர்களே மீடியாவின் முன்பு அந்த வேலையை தினம் செய்து கொண்டிருக்கிறார்கள். எனில், இப்படியெல்லாமா நடக்கும்? முதல்முறையாகப் பார்க்கிறேன், இரண்டு நாள்கள் தூங்கவில்லை என்ற வியப்புகள் எங்கிருந்து வருகின்றன?
பொது நீரோட்டத்துக்கு இயைந்து இவர்கள் பசப்புவதாக இந்த ஐரணியை நான் நினைக்கவில்லை. விசாரணையில் இவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவது காவல்துறையின் வன்முறையோ, சாமானியர்களை ஏறி மேயும் அதன் கட்டற்ற அதிகாரமோ அல்ல. அடிவாங்குகிறவர்கள் அப்பாவிகள் என்பதால் வரும் கருணையே அது. அந்த கருணையை காவல்துறையின் வன்முறையை கண்டு அதிர்ச்சியாவதுபோல் மனம் பாவனை செய்கிறது.
உதாரணமாக, விசாரணையில் பாண்டியும் நண்பர்களும் கொல்லப்படுவது போன்ற ஒரு போலி என்கவுண்டரில்தான் அஞ்சாதே படத்தின் வில்லன் கதாபாத்திரமும் கொல்லப்படும். அந்தப் படத்தை எடுத்த மிஷ்கின்தான், விசாரணைக்காக வெற்றிமாறனுக்கு முதலில் பாராட்டுவிழா நடத்தினார்.
அஞ்சாதேயை ரசித்துப் பார்த்தவர்கள்தான், விசாரணையின் போலி என்கவுண்டருக்காக பதறுகிறார்கள். இங்கு பிரச்சனை, காவல்துறையின் அராஜகமோ, அத்துமீறலோ அல்ல. அது யார் மீது பிரகியோகிக்கப்படுகிறது என்பதுதான்.
நல்லவன் மீதா இல்லை கெட்டவன் மீதா. நாளையே ஹரியின் துரைசிங்கம் ஒரு கெட்டவனை என்கவுண்டரில் போடும்போது, இன்று பதறுகிற அதே மனங்கள் கைதட்டி அதனை வரவேற்கும். ஆக, காவல்துறை என்ற சிஸ்டத்தின் அராஜகமோ, அது அம்பலமானதோ அல்ல, அராஜகம் அப்பாவிகள் மீது ஏவப்பட்டதால் எழுந்த கருணையே விசாரணையில் அதிர்ச்சி மதிப்பீட்டை தருகிறது.
வணிக சினிமாக்கள் இந்த கருணையின் தடத்தில்தான் காலங்காலமாக பயணிக்கின்றன. பார்வையாளர்களின் உணர்ச்சியை தூண்ட கருணையே ஆயுதமாக்கப்படுகிறது. நல்ல சினிமாக்கள் கருணையின் முகத்துடன், காவல்துறை போன்ற எந்த சிஸ்டத்தையும் அம்பலப்படுத்த முயல்வதில்லை.
உதாரணமாக, கீஸ்லோவ்ஸ்கியின், ‘ஏ ஷார்ட் ஃபிலிம் எபௌட் கில்லிங்’ படத்தை எடுத்துக் கொள்வோம். அதிகாரத்தின் ஒரு முகமான மரண தண்டனையை விமர்சித்து எடுக்கப்பட்ட படம் அது. அதில் ஒரு கொலை நடக்கிறது.
ஒரு காரோட்டியை இளைஞன் ஒருவன் கொலை செய்கிறான். கழுத்தை நெரித்தும் சாகாத காரோட்டி கல்லால் முகம் சிதைக்கப்பட்டு சாகடிக்கப்படுகிறான். முன்விரோதமோ முன்பரிட்சயமோ எவ்வித காரணமோ இல்லாமல் நடக்கும் இந்த கொலை கால்மணி நேரத்திற்கும் மேல் தொடர்ச்சியாக குளோசப்பில் காட்டப்படுகிறது. சினிமா வரலாற்றில் காட்சிப்படுத்தப்பட்ட கொடூரமான கொலைக் காட்சிகளில் இதுவும் ஒன்று.
இளைஞனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இப்போது, கீஸ்லோவ்ஸ்கி கொடூரமான இந்த கொலைகாரனை முன்னிறுத்தி, மரண தண்டனை என்ற நடவடிக்கையை விமர்சிக்க வேண்டும்.
இதுபோன்ற சூழலை வணிக சினிமாக்கள் இருவிதங்களில் எதிர்கொள்ளும். கொலைகாரனுக்கு மரண தண்டனையை நிறைவேற்றி பார்வையாளர்களை திருப்தி செய்யும். ஆனால், அது மரண தண்டனையை விமர்சிப்பதாகாது.
வணிக சினிமாவுக்கு இருக்கும் ஒரே மாற்றுவழி, கொலைகாரனின் இடத்தில் ஒரு அப்பாவியை வைப்பது. அப்பாவி மரண தண்டனைக்குள்ளாகும் போது, அவன் மீதான பார்வையாளர்களின் கருணை, மரண தண்டனைக்கு எதிராக அப்படம் பேசியதான ஒரு மயக்கத்தை ஏற்படுத்தும். விசாரணையில் நாம் அனுபவப்படுவதும் அந்த மயக்கத்தைதான்.
உண்மையில் இந்தப் படங்கள் எதையும் விமர்சிப்பதில்லை. மாறாக, பார்வையாளர்களின் கருணையின் பிரகாசத்தில் அமைப்புகளின் வன்முறைகள் மறைக்கப்படுகின்றன. இந்த வன்முறைகள் இந்த அமைப்பின் ஒரு பகுதி என்று உறுதி செய்வதுடன், மறைமுகமாக நம்மை அதனை ஏற்றுக் கொள்ளவும் வைக்கின்றன. அமைப்பின் முன்னால் அப்பாவியை நிறுத்துவதன் பெரும் அபாயம், அப்பாவிகளின் இடத்தில் ஒரு கெட்டவனை நிறுத்தி அமைப்பின் அனைத்து வன்முறைகளையும் நியாயப்படுத்திவிட முடியும் என்பதுதான்.
அதனால்தான், கீஸ்லோவ்ஸ்கி தனது படத்தில் கருணையின் இடத்தில் ஒரு கொலைகாரனை நிறுத்தினார். சாகடிக்கப்படுவதற்கான சகல தகுதிகளையும் கொண்டவனை முன்னிறுத்தி மரண தண்டனை என்ற நடவடிக்கையை விமர்சித்தார். இதன் மூலம், அப்பாவியின் இடத்தில் கெட்டவனை நிறுத்தி அமைப்பை நியாயப்படுத்தும் பலவீனம் களையப்பட்டது. கொலைகாரனை அடித்துத் துன்புறுத்தாமல், படத்தில் நடக்கும் கொடூர கொலைக்கு எந்தவிதத்திலும் மரண தண்டனை என்ற நடவடிக்கை குறைந்ததில்லை என்பதை உணர வைத்தார்.
*
வெற்றிமாறனின் முந்தையப்படம் ஆடுகளத்தில் வெளிப்பட்ட கலாபூர்வமான அணுகுமுறையும், நுட்பமும் விசாரணையில் இல்லை. விசாரணை அப்பட்டமான உண்மைகளை முன்வைக்கிறது, நுட்பங்களின்றி நேரடியாக பார்வையாளர்களுடன் உரையாடுவதே அதன் பலம் என்பதெல்லாம் பசப்புகள்.
திரைப்படத்தில் கலாபூர்வமான அணுகுமுறை என்பது அதன் ஜீவநாடி. விசாரணையின் சித்திரவதைகளை நேரடியாக காண நேர்கையில் படத்தின் காட்சிகள் ஒன்றுமில்லாததாகிவிடும். ஆடுகளத்தில் பேட்டைக்காரனின் காவல்நிலைய அனுபவம் அப்படியில்லை. பேட்டைக்காரனை யார் அடித்தார்கள்? எங்கு அடித்தார்கள்? உண்மையில் யாராவது அடித்தார்களா? எதுவும் சொல்லப்படுவதில்லை. காவல் நிலையத்தின் எத்தனை வன்முறைகளை கடந்து வந்தாலும், பேட்டைக்காரனின் காவல்நிலைய அனுபவத்தை மனம் மீட்டெடுக்கும் போதெல்லாம் ஒரு திகிலை மனம் அனுபவப்படும். அதுதான் கலாபூர்வமான அணுகுமுறையின் வெற்றி. அப்படியொரு முயற்சியை விசாரணையில் இயக்குனர் மேற்கொள்ளவில்லை.
பாண்டியின் நிராதரவான பின்னணி, காதலியின் நிர்கதியான நிலைமை, சாகடிக்க அழைத்துச் செல்கையில் வரும் காதலியின் அழைப்பு என விசாரணை வணிக சினிமாவின் கூறுகளை முன்னிறுத்தியே நகர்கிறது. அதனால்தான், நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக முத்துவேல் அழைக்கப்பட்டதும், முத்துவேலில் ஒரு எம்ஜிஆரை கண்ட பரவசத்துடன் திரையரங்கு ஆர்ப்பரிக்கிறது.
பாண்டியும் நண்பர்களும் ஆந்திராவில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுவதுடன் லாக்கப் கதை முடிகிறது. அதனை சினிமாவாக்க படத்தின் பிற்பகுதியில் இயக்குனர் ரொம்பவும் மெனக்கெடுகிறார்.
காவல்நிலையத்தை துப்புரவு செய்ய பாண்டியும் நண்பர்களும் பணிக்கப்படும்போதே திரைக்கதையில் செயற்கையின் இழை சேர்ந்துவிடுகிறது. போலீசின் அராஜக வளையத்தில் மாட்டப் போகிறார்கள் என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்தும்விதமாகவே காட்சிகளும் வசனங்களும் வருகின்றன. அந்த நிகழ்வும் நடக்கிறது.
ஆடிட்டர் விசாரிக்கப்படும் முன்பே பாண்டியும் நண்பர்களும் கூட்டிப் பெருக்கி கக்கூஸ் கழுவ ஆரம்பிக்கிறார்கள். அதன் பிறகு ஆடிட்டர் தூங்குகிறார். ஜட்டியோடு அடித்து விசாரிக்கப்படுகிறார். பேரம் நடக்கிறது. வேறொரு அதிகாரி வந்து ஆடிட்டரை அடித்து தொங்கவிடுகிறார். செத்துப்போன ஆடிட்டரின் உடல் அவரது வீட்டிற்கு எடுத்து வந்து தற்கொலைபோல் ஜோடிக்கப்படுகிறது. இவ்வளவும் ஒரே இரவில் நடக்கிறது. இதற்கெல்லாம் பிறகு அதிகாரிகள் கூடி லாப நஷ்டக் கணக்கு பேசுவதை பாண்டியும் நண்பர்களும் கேட்டுவிடுவதால் மாட்டிக் கொள்கிறார்கள். எப்படி? கக்கூஸ் கழுவும்போது. அர்த்த ராத்திரியில் என்ன கக்கூஸ் கழுவுதல்? விடிய விடிய கழுவ அந்த ஸ்டேஷனில் அப்படி எத்தனை கக்கூஸ்கள்தான் உள்ளன?
உண்மையில் இது ஒன்றும் பெரிய தவறில்லை. அதேநேரம், இது போன்ற லாஜிக் மீறல்கள் எப்படி கவனத்திலேயே வராமல் போகின்றன?
லாக்கப் உண்மைச் சம்பவம் என்பதால் லாஜிக் மீறல்களும், அதிகாரிகளின் பேரத்திலும், நடவடிக்கைகளிலும் வெளிப்படும் செயற்கைத்தனங்களும் கேள்விக்கேட்கப்படாமலே பார்வையாளர்களால் உள்வாங்கப்படுகின்றன. போதாததற்கு சில புளிப்பு மிட்டாய்களும் விநியோகிக்கப்படுகிறது.
என்கவுண்டரும், தற்கொலை செட்டப்பும் காவல்துறையில் சாதாரணம் என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்த இயக்குனர் விரும்பியதன் பேரில், இறுதிக்காட்சியில் ஒரு போலீஸ் கதாபாத்திரம் வருகிறது. பாண்டியையும் நண்பர்களையும் சுட்டுக் கொல்வதை, ‘சின்ன விஷயம், ஈஸியா முடிக்க வேண்டியது’ என்று அது சொல்லிக் கொண்டேயிருக்கிறது. இன்னும் கொஞ்சம் பேசவிட்டிருந்தால், ‘கஷ்டப்படுறதுக்கு காபியா போடுற. ஆளைத்தானே போடுற’ என்று அந்த கதாபாத்திரம் சலித்திருக்கும்.
‘கோட்டாவுல வந்திட்டு நியாயம் பேசுகிறான்’ என்று ஒரு வசனம். கோட்டாவுல சீட் வாங்கி தப்பு தப்பா ஊசி போடுறான் என்று சொல்லும் மனநிலையின் இன்னொரு வடிவம்தான் இதுவும். படத்துக்கு எந்தவிதத்திலும் பொருந்தாமல் விட்டெறியப்படும் இதுபோன்ற முற்போக்கு மிட்டாய்களைத்தான் பலரும் சப்பிக் கொண்டிருக்கிறார்கள். படத்துக்காக அல்ல, சப்புகிறவர்களுக்காகவே மிட்டாய்கள் விநியோகிக்கப்படுகின்றன. சப்புகிற சுகத்தில் பலவீனங்கள் மறக்கப்படும் என்பது மிட்டாய்களை விட்டெறிகிறவர்களுக்கும் தெரியும்.
இறுதிக்காட்சியில், செயற்கையாக சம்பவங்கள் இழுக்கப்பட்டு, முத்துவேல் கதாபாத்திரத்திடம் பச்சாதாபத்தை வரவைத்து பார்வையாளர்களின் கருணை கறக்கப்படுகிறது. அதில் இயக்குனர் அடைந்த வெற்றியைத்தான் திரையரங்குகள் இன்று கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. பார்வையாளர்களுக்கும் திருப்தி. தாங்கள் காருண்யமிக்கவர்கள் என்பதை உறுதி செய்து கொண்டாயிற்று. பதிலுக்கு, தங்களின் மிகை உணர்ச்சியின் பாரத்தை படைப்பாளியின் தலையில் ஏற்றுகிறார்கள்.
இந்த படத்தை கொண்டாடி தீர்க்க வேண்டுமென்றெல்லாம் கூறவில்லை. ஆனால், இந்த பதிவு பேசணும்னு பேசினவர் எழுதியது மாதித்தான் இருக்கிறது
LikeLike
ivlo detail logic lam padam pathu review clear ah ezhudhura neenga…..oru ulaga cinema edunga…pakrom …..review unga padathuku neengaley review panuvingala…..??????
LikeLike
வி பார் வெந்தட்டா, போன்று தமிழ் திரை இயக்குனர்கள் தைரியமான வகளா? ஆடுகளத்தின் முடிவு ஏற்றுக் கொள்ளத்தக்கதா? கமல் தேவர்மகன் படத்தில் சொல்ல வந்தது என்ன? முடிவு என்ன? அந்தத் தலைப்பெ படத்திற்குப் பொருந்துமா?
LikeLike
யோவ் உன்கிட்ட கருணைய அந்த அப்பாவிகள் மேல காட்ட வைக்க தான் படம் எடுக்குறாங்க,..அப்புறம் கருணைய தூண்டுறாங்க னா என்னா பண்றது?^ திரைக்கதாசிரியர் நீங்க திரைக்கதை எழுதுன ஒரு படத்த சொல்லுங்களேன் …??
LikeLike
தவன் எனக்கு வெந்நீர் கூட சமைக்கத் தெரியாது, ஆனால் என் அம்மாவோ, அக்காவோ மனைவியோ சமைத்த சாம்பாரில் உப்பு அதிகம், காரம் அதிகம் என்றால் உடனே சொல்லத் தெரிந்து விடும்.
ஆனால் சாம்பார் சமைக்கத் தெரிந்தவர் மட்டுமே , காரம் அதிகம் என்று சொல்லும் உரிமை உள்ளவர்கள்
என்று என் அம்மா சொல்ல மாட்டார்
LikeLike
in movie what a man has to show if you know let me tell i want to know
LikeLike
திரு பாபுராஜுடன் முழுதும் உடன் படுகிறேன் நான். என் பார்வையில் ஆடுகளம் இதை விட சிறப்பான படம். இன்று நாம் விசாரணைக்கு அளிக்கும் பாராட்டு, ஆதரவு எல்லாம் ஆடுகளத்திற்கு அளித்து இருக்க வேண்டும், ஆனால் அப்போது தனுஷைக் கொண்டாடியே நாம் ஓய்ந்து விட்டோம்.
மேலும் இந்தியாவில் அதுவும் சென்னை CA INSTITUTE (SIRC OF ICAI) அதிகாரம் என்ன என்பதை முற்றிலும் மறந்து விட்டார் இயக்குனர். இவ்வளவிற்கும் சென்னை CA INSTITUTE சாலி கிராமத்திற்கு அருகிலான நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் தான் இருக்கிறது.
CA institute,(2 central cabinet ministers are CA today), வக்கீல் போன்ற விவகாரங்களையே இயக்குனர் மறந்து விட்டதால், இடைவேளைக்குப் பிறகு எனக்கு ஹரி பேரரசு வசந்த பாலன் படங்களைப் பார்த்த உணர்வே , கோடிக் கணக்குகளில் பேசும் ஆடிட்டருக்கு வக்கீல் வராத நிலை,
நம் ஊர் காட்சிகளில் 5இல் ஒரு உறுப்பினர் வக்கீல் என்னும் யதார்த்தம்
ஆகியவை தாண்டி படம் டிவி நெடும் தொடர் போல்
LikeLike
முன்தீர்மானத்துடன் படத்தைப் பார்த்து எழுதியிருப்பதாகவே தெரிகிறது. ஏனென்றால், ரசிகர்களின் பார்வையையும் அவரே எடுத்துக் கொண்டு கருத்துரைப்பதுதான் வியப்பு ! அப்பாவிகளுக்கே இந்த கதி என்றால்….. இப்படித்தான் நம்மால் அவற்றை ஜீரணிக்கவே இயலாததாக இருக்கிறது. நல்லவேளை, நடந்த முன்பாதி ( லாக் அப் ) சம்பவத்தில் கூட தாம் எதிர்பார்த்த மாதிரியான நிகழ்வுகள் என்று அங்கலாயிக்காமல் விட்டாரே ! இவரை போன்று, படம் பார்த்தவர்கள் ஒரு திரை எழுத்தாளராகவோ, திரைக்கதையாசிரியராவோ இல்லாது போனதுதான் ஆகப் பெரிய குறை !
LikeLike
Ellathayum kura solradhuku sila per irukathan seiranga…oru vishayatha thappa patha adhu thappa mattum dhan theriyum….yedhuvume namba pakra vision la dha iruku….enaku oru padathai pathadhum (cinema enbadhu alla adhu neril parkinra sambavamaga irundhalum seri) theriginra katchiyum puriganra porulum marravargalukum adhe porul dhan puriya vendum enbadhu alla…indha padhivugalai yellam parkum bodhu kurudargalin yaanai yenru naan enadhu paadathil paditha siru kadhaye niyabagam varugiradhu
LikeLike