ஜெயமோகன் தன்னுடைய வலைப் பக்கத்தில் எழுதிய வாகபியம் குறித்த கட்டுரைக்கு முகநூலில் விவாதம் எழுந்திருக்கிறது. அவற்றில் சில பதிவுகள் இங்கே…
//”கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம்? கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்? குடும்பநண்பர்களே காஃபிர்களை அழைக்கலாகாது என்று கட்டுப்பாடு உள்ளது, மன்னித்துவிடுங்கள் என்று நம்மிடம் கோரும் நிலை உருவாகியிருக்கிறது.”//
– ஜெயமோகன்
நான் மூன்றாம் வகுப்பில் படிக்கும்பொழுது உளுந்தாண்டார் கோவில் தெருவில் ஒரு செட்டியார் வீட்டில் குடியிருந்தோம். நான்காம் வகுப்பிற்கு வந்தபொழுது கந்தசாமிபுரத்தில் உள்ள வேறொரு வீட்டிற்குக் குடிவந்தோம். பள்ளிப்படிப்பு , கல்லூரி, பிறகு வேலைக்குச் சேர்ந்து நான்கு ஆண்டுகள் கழிந்த பிறகு சொந்த வீடு கட்டி VKS கார்டனுக்கு இடம் பெயர்ந்தோம்.
கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் ஒரே வீட்டில் குடியிருந்திருக்கிறோம். வீட்டின் உரிமையாளர் இஸ்லாமியர்.
கல்லூரி நண்பர் முகமது ரஃபி உடுமலைப்பேட்டைக்காரர். அவரது திருமணத்திற்கு அழைத்திருந்தார். உளுந்தூர்பேட்டையில் இருந்து உடுமலைப்பேட்டை. ரைமிங்காக இருக்கிறது இல்லையா?. உடுமலைப்பேட்டை வரைச் சென்றுவிட்டு சும்மா வரமுடியுமா? அப்படியே வால்பாறை போகலாம் என்கிற திட்டத்தோடு லோக்கல் நண்பர்கள் பத்து பேருடன் கிளம்பிவிட்டேன்.
இவர்கள் எல்லோரும் சங்கோஜப்பட, ‘ சரி நா போய்ட்டு மொய் மட்டும் வச்சுட்டு சீக்கிரம் வந்துர்றேன் வெய்ட் பண்ணுங்க’ என்று சொல்லிவிட்டு மண்டபத்தினுள் சென்றேன். பொறுத்திருந்து மேடையேறி வாழ்த்து கூறிவிட்டு வெளியே வருகையில் பந்தியில் இருந்து பரிச்சையமான குரல் அழைத்தது. வெளியே காத்திருப்பதாக நான் நினைத்துக் கொண்டிருந்தவர்கள் பந்தியிலமர்ந்து ‘செம்ம’ கட்டு கட்டிக்கொண்டிருந்தார்கள்.
‘ நாங்களா வர்ல மச்சி. அதா அந்த பாய்தான் யாரு என்னான்னு விசாரிச்சாப்ல. வேணாம் வேணான்னு சொன்னாலும் கேட்காம கூட்டிட்டு வந்து உட்கார வச்சுட்டாரு .. இன்னொருக்கா மேடைக்கு போவனும் மச்சி.. ரஃபி யாரு , நம்ம தோஸ்த்துய்யா..’ என்று கூறியபடியே எலும்பைக் கடித்தார் நண்பர்.
எனது தம்பி , அவனது நண்பர்களோடு ஏற்காடு சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருக்கையில் வண்டி அப்ஸைட் ஆகிவிட்டது. மற்றவர்கள் எல்லாம் சிராய்ப்பு, சின்ன காயங்களுடன் தப்பி விட்டார்கள். இவனுக்கு தலையில் பலத்த அடி. நினைவிழந்து விட்டான். இடது கை உடைந்துவிட்டது. விரல்கள் பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்தன. முகத்தில் எல்லாம் கண்ணாடி சில்லுகள் ஏறி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. வாழப்பாடியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து விட்டு எனக்கு போன் செய்தார்கள் அவனது நண்பர்கள்.
இதைப்போன்ற சூழ்நிலையில் என்ன செய்வதென்றே அறியாத பதட்டம் ஒரு பக்கம் யாரிடம் சென்று உதவி கேட்பது என்றும் தெரியவில்லை. அப்பொழுது நானொரு தனியார் பள்ளியில் ஆயிரம் ரூபாய்க்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன்.
வீட்டு ஓனர் ரஹிமான்ஷா, அவரது நண்பரிடம் பேசி கார் ஏற்பாடு செய்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் பதட்டமாக இருந்த என்னிடம் ஆறுதல் பேசியவாரே வண்டியை அவரே ஓட்டி வந்தார். இடைப்பட்ட நேரத்தில் தம்பியைச் சேலத்திற்கு மாற்றி இருந்தார்கள்.
அவருக்கு அப்பொழுது அறுபது வயதிற்கு மேல் இருக்கும். முதுகில் ஆபரேஷன் செய்திருந்தார்கள். கண் பார்வை குறைந்து கொண்டிருந்தது. இரவில் வண்டி ஓட்டக்கூடாது என்று அவரது மருத்துவர் அறிவுறுத்தியிருந்தார். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் என்னுடன் இருந்தார். சேலம் சென்று மீண்டும் உளுந்தூர்பேட்டை திரும்பிய அந்த இரவு என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. Nightmare என்று சொல்வார்களே. அதேதான். கிட்டத்தட்ட 260 கிமீ தம் சொந்த வலிகளைப் பொறுத்துக்கொண்டு எனக்காக என் தம்பிக்காக வண்டி ஓட்டிய அந்த ஜீவன் ஒரு இஸ்லாமியர்.
இவ்வளவு ஏன், அப்படி இப்படி என்று இழுத்துக்கொண்டிருந்த என் திருமணம் நடக்கக் காரணமாக இருந்தவரும் ஒரு இஸ்லாமியரே. எனக்காக மாநிலம் விட்டு மாநிலம் வந்து பஞ்சாயத்துப் பேசி , சமாதானம் செய்து சுமூகமாக முடித்து வைத்தவர் அவர்.
என் மைத்துனி திருச்சியில் பணிபுரிகிறார். நான் என் மனைவியைத் தூத்துக்குடி அழைத்து வந்து விட்டேன். தெரியாத ஊரில் தனியாக வசிப்பதற்குப் பயமாக இருக்கிறது என்று வேலையை விடப்போனவரை ‘ நாங்கள் இருக்கும் வரை உனக்கு என்ன கவலை?’ என்று ஆறுதல் கூறி தம் வீட்டில் தங்க வைத்துக் கொண்டது ஒரு இஸ்லாமியர் குடும்பம். தீவிர இந்து பாரம்பரிய குடும்பத்தைச் சார்ந்த என் மைத்துனி வசிப்பது ஒரு இஸ்லாமியர் வீட்டில். Paying guest கூட இல்லை, இலவசமாகவே. நம்புங்கள் ஆசானே. நீங்கள் வசிக்கும் தமிழ்நாட்டில்தான் இது எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.
எனக்கு மட்டுமா? மனசாட்சியைத் தொட்டு நினைத்துப் பார்ப்போம். நமது அருகாமையில் உள்ள இஸ்லாமியர்கள் நம்மை எல்லாம் காஃபிர்களாகவா பார்க்கிறார்கள்?
பொய்யை எழுதுங்கள் ஜெமோ. அது புனைவில் மட்டுமாக இருக்கட்டும். கருத்து கூறுகிறேன் பேர்வழி என்று புளுகாதீர்கள். அபாயகரமான மனிதர் நீங்கள். Disgusting.
ஜெயமோகனின் தளத்தில் விஷம் கக்கும் கட்டுரையொன்றின் வரிகள் இப்படி உள்ளன.
// இந்து- முஸ்லீம் மதஒற்றுமை எல்லாம் பொய்யாய் பழங்கதையாய் போய் நெடுநாட்களாகின்றன. கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம்? கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்து கொண்டிருக்கிறார்? குடும்பநண்பர்களே காஃபிர்களை அழைக்கலாகாது என்று கட்டுப்பாடு உள்ளது, மன்னித்துவிடுங்கள் என்று நம்மிடம் கோரும் நிலை உருவாகியிருக்கிறது//
மேற்கு கேகே நகரில் ஆற்காடு சாலையில் இருந்து டிஸ்கவரி புக் பேலஸ் திரும்பும் வழியில் இஸ்லாமிய பெரியவர் ஒருவர் நடத்தும் பிரியாணிக்கடை உள்ளது. டிசம்பரில் வெள்ளம் வருவதற்குமுன்பு அங்கு ஒருநாள் இலவசமாக பிரியாணி போட்டார்கள். வெள்ளம் வந்தபிறகு அந்த பாய்க்கடையில் ஒருவாரம் தொடர்ந்து இலவசமாக பிரியாணி போட்டார்கள். அந்தப்பக்கமாக செல்லும் எல்லாரும் அங்கு சாப்பிட்டார்கள். இந்த தகவலை வேடியப்பன் என்னிடம் சொன்னார். எங்கள் வீட்டின் இரண்டாவது தளத்தில் ஓர் இஸ்லாமிய குடும்பம் வசிக்கிறது. வெள்ளம் வந்தபோது நான் முதல் தளம் சென்றுவிட்டேன். அது ஒரு கிறிஸ்துவரின் வீடு. இரண்டாவது தளத்தில் இருக்கும் இஸ்லாமிய குடும்பத்தினர் வெள்ளத்தை பார்த்து மிகவும் பயந்து குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றார்கள். செல்வதற்குமுன்பு எங்களிடம் வீட்டுசாவியை கொடுத்து எங்கள் வீட்டில் தங்கிக் கொள்ளுங்க என்று சொல்லிவிட்டு சென்றார்கள். வெள்ளம் வந்தபோது சென்னையின் பல இடங்களில் இஸ்லாமியர்கள்தான் உடனடியாக இறங்கி உதவி செய்தார்கள். உதவி செய்பவர்களை பார்த்து நீங்க எந்த மதம் என்று கேட்கவில்லை. ஓர் இந்துப்பெண் வெள்ளத்தில் தன்னை பத்திரமாக மீட்ட நன்றிக்காக தனக்கு பிறந்த குழந்தைக்கு யூனூஸின் பெயரை வைத்துள்ளார். வருடத்துக்கு இரண்டு மூன்று இஸ்லாமிய நண்பர்களின் வீட்டுத்திருமண விசேடங்களுக்கு செல்கிறேன். மூக்குப்பிடிக்க பிரியாணி சாப்பிடுகிறேன். தீபாவளிக்கு எனது வீட்டிலிருந்து பலகாரம் செல்கிறதோ இல்லையோ ரம்ஜானுக்கு அவர்கள் வீட்டிலிருந்து அழைப்பு வரும். அண்ட புளுகர்களை சமாளித்து விடலாம். அவதூறு சேற்றை வாரி வீசுபவர்களை என்ன செய்வது?
Shah Jahan
7 February at 17:42 · New Delhi
ஜெயமோகனை ஆசான், போசான்னு தூக்கிக் கொண்டாடிட்டு இருக்கிற அறிவுஜீவிகள் என் நட்பு வட்டத்தில் இருந்தால்…
கீழே நான் எழுதியிருக்கிறதைக் கொண்டுபோய் அந்தாளுக்குக் காட்டுங்க. அதுக்கும் போலிக்கடிதம் ஒண்ணு அவரே எழுதி பதிலும் எழுதட்டும். //இந்து- முஸ்லீம் மதஒற்றுமை எல்லாம் பொய்யாய் பழங்கதையாய் போய் நெடுநாட்களாகின்றன//வான்னு சொல்லட்டும்.
• என் பெயர் ஷாஜஹான். இஸ்லாமியப் பெயர்தான். ஆனால் இந்தப் பெயர் வைத்தது யார் என்று தெரியுமா…? வீட்டுக்கு வந்து போய்க்கொண்டிருந்த இந்துக்கள்தான்.
• என் அப்பா அம்மா காலத்தில் எங்கள் வீட்டுப் பிள்ளைகளாக இருந்து இப்போதும் எங்கள் உறவுகளாகத் தொடர்கிறவர்கள் யார் தெரியுமா? அண்ணாத்துரை, காமாட்சி, பரமசிவம்.
• பள்ளிக்காலம் துவங்கி இன்று வரை என்னுடைய நண்பர்களாக இருக்கிறவர்கள் யார் தெரியுமா? – மாணிக்கம், ஃப்ரான்சிஸ், தங்கவேல், பழனிச்சாமி.
• கல்யாணம் ஆனதும் எனக்கு சென்னையில் வீடுபார்த்து வைத்து உறுதுணையாக இருந்தது யார் தெரியுமா? கணேசன்.
• சென்னை போகும்போதெல்லாம் நாங்கள் தங்குகிற வீட்டில் அண்ணா அண்ணா என்று உயிரைத் தருகிறவர் யார் தெரியுமா? கணேசன் மனைவி கோட்டீஸ்வரி.
• தில்லியில் என் வீட்டுப் பையன்களாக இருந்தவர்கள் யார் யார் தெரியுமா? திருநெல்வேலி ஜெயகுமார். காரைக்குடி சுப்பிரமணியன். எந்த ஊர் என்றே தெரியாத சீனிவாசன். இன்னும் பெயர்களும் மறந்துபோன எத்தனையோ பேர்.
• பலகாலம் என்னிடம் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை செய்து என் குடும்பத்தில் அங்கமாக இருந்தவர் யார் தெரியுமா? மைதிலி.
• ஒவ்வொரு ஆண்டும் திருமண நாளில் தவறாமல் வந்து காலில் விழுந்து ஆசிகள் பெற்றுச் செல்பவர்கள் நாகராஜன் – மீனா தம்பதி.
• தில்லியில் 25 ஆண்டுகாலமாக குடும்ப நட்புகளாகத் தொடர்கிறவர்கள் யார் தெரியுமா? சேது ராமலிங்கம், சீனிவாசன், நாக. வேணுகோபாலன், அபிராமசேகர்.
• தில்லியில் அண்ணாச்சி என்று அழைக்கிறவர் யார் தெரியுமா? சத்யா அசோகன்.
• பேஸ்புக்கில் என்னை வாப்பா என்று கூப்பிடுகிறவர்களில் சிலர் பெயரைக் குறிப்பிடவா ? சத்யா, பூங்கொடி ……….
• என் மகள் கல்யாணத்துக்கு முறையான அழைப்புகூட இல்லாமலே வந்து வாழ்த்திய பேஸ்புக் நண்பர்கள் சிலர் பெயரைச் சொல்லவா? ஈரோடு கதிர், தீபா நாகராணி, சிவகுமார், தினேஷ், துரைராஜ், ஆரூரான் விசு, ஷான் கருப்புசாமி, மோகனா சோமசுந்தரம், ஷண்முக வடிவு, எட்வின், வர்ஷா, செல்வராசு, கவிதா, ஜெயபாலன், சுபாஷ் கிருஷ்ணமூர்த்தி, அருண் குமார் ……………
• புதுச்சேரியில் எங்களை வரவேற்று, உபசரித்து, மூன்று நாட்கள் காரில் எல்லா இடங்களுக்கும் அழைத்துச்சென்று வந்தவர் யார் தெரியுமா? அறிவழகன்.
• என்னைப் புத்தகம் வெளியிடுங்கள் என்று வற்புறுத்தி வெளியிடச் செய்தவர் யார் தெரியுமா? நான் ராஜாமகள் என்கிற தேன்மொழி
• தில்லிக்குக் குடிபெயர்ந்து வந்தபிறகு 25 ஆண்டுகளில் என் வீட்டில் வந்து ஒருநாளோ பல நாட்களோ தங்கிச் சென்ற “உங்களவர்கள்” மட்டுமே ஐநூறு பேருக்கும் மேல் இருக்கலாம்.
இது உதாரணத்துக்குத்தான். இதுமாதிரி ஆயிரம் பெயர்களை நான் மட்டுமே குறிப்பிட முடியும்
இலக்கியவாதி என்ற போர்வையில், உங்களைப் போன்றவர்கள் ஆயிரம்பேர் எவ்வளவு விஷமத்தனமாக எழுதினாலும் சரி, விஷத்தை விதைக்க முயன்றாலும் சரி…
தமிழர்கள் மத்தியில் காலம் காலமாக வேரோடி இருக்கும் மத நல்லிணக்கத்தை சிதைத்துவிட முடியாது.
#
திரு ஷாஜகான் அவர்கள் தமிழ்நாடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேற்று வரை உதவி செய்து கொண்டு இருப்பவர். தமிழ் நாடு மழை வெள்ளத்தால் பதிக்கப் பட்ட போது டோல் கேட்டில் சுங்கம் வசூலிப்பதை சில காலத்திற்கு நிறுத்தி வைக்க மத்திய அரசிடம் சொல்லி அனுமதி வாங்கி கொடுக்க உதவி செய்தவர் இந்த செய்தி விகடனில் கூட இவரது வெள்ள நிவாரண உதவி பற்றிய பதிவில் வந்ததது ஜெமோ இந்து வெறி நோயால் பதிக்கப் பட்டவர் போல நடந்து கொள்கிறார்
LikeLike
சபாஷ் சரியான பதிலடி
யார் என்ன உளறினாலும் நம்மிடையே பிளவுகளை உண்டாக்கிட எவனாலும் முடியாது
“இராமன் ஆண்டாளும், இராவணன் ஆண்டாளும்” எங்களுக்கு ஒரு கவலை இல்லை என்றும் போல் இந்துக்களும், முஸ்லீம்களும் அண்ணன், தம்பிகள்தான், மாமன், மச்சான்கள்தான்
LikeLike