சாதி பெருமிதங்களை வளர்க்கும் வெகுஜென அரசியல்!

கார்ல் மார்க்ஸ்
கார்ல் மாக்ஸ்
கார்ல் மாக்ஸ்
கவுண்டர்  சாதிப்பெண் ஒருவரை, அதே சாதியைச் சேர்ந்த சிலர் அலைபேசியில் மிரட்டும் ஒலிப்பதிவைக் கேட்டேன். அந்த உரையாடலில் அவள் தன்னுடன் படிக்கும் ஒருவனைக் காதலிக்கிறார் என்பதும், அவர் சக்கிலிய சாதியைச் சேர்ந்தவர் என்பதும் அந்த செய்தி இவர்களை எட்டியிருக்கிறது என்பதும் புரிகிறது. இதில் அந்தப் பெண்ணின் சாதி என்ன என்பது அந்த உரையாடலில் இருந்து அனுமானித்தது தான்.
நைச்சியமாகவும், வன்மமாகவும் அந்தப் பெண்ணிடம் இந்தத் தகவல்களை அவர்கள் உறுதிசெய்து கொள்ள முயல்கிறார்கள். அவள் மிகத் தெளிவாக ”இதையெல்லாம் கேட்க நீங்கள் யார்? உங்களுடன் இதை ஏன் நான் சொல்ல வேண்டும்?” என்று கேட்கிறாள். “இந்த சாதியில பொறந்துட்டு இப்படியெல்லாம் பேசலாமா கண்ணு” என்று அறிவுறுத்தும் அவர்களது  குரல் ”வீணா உன்னால ஒரு உசுரு போய்டும் பாத்துக்க, உன் உசுரும் சேர்ந்து தான் போகும்’’ என்கிறது. இன்னும் அஞ்சு நிமிசத்துல உன் வீட்டுக்கு வர்றோம், அங்க வச்சி பேசிக்கலாமா என்கிறார்கள்.
அவள் உள்ளூர நடுங்குவதை அவளது குரலிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இந்த ஆடியோவின் நம்பகத்தன்மை குறித்தெல்லாம் கவலைப்பட ஒன்றுமில்லைதான். இத்தகைய சாதி வன்முறைகள் மிக வெளிப்படையாகத்தானே நடக்கின்றன. இந்த நிகழ்விலிருந்து இரண்டு விசயங்களை மட்டும் நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு அதைப்பற்றி பேசுவோம்.
முதலாவதாக, இந்த பொறுக்கிகளைப் பற்றி வீட்டில் சொல்ல முடியாத அவளது கையறு நிலை. ஏனெனில் வீடு என்பது இந்தப் பொறுக்கிகளின் பண்பட்ட வடிவமாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம். தன் பெண்ணை ஒருவன் மிரட்டுகிறான் என்றால் ”அவன் எவனாக இருந்தாலும்” அவனைப் பொறுக்கி என்று வரையறுக்கும் திமிர் ஒரு குடும்பத்துக்கு இருக்க வேண்டும். ஆனால் நமது சூழலில் வீடு என்பது சமூகத்தின் ஒரு பகுதி. இந்த சமூகம் என்பது சாதியைக் காப்பாற்றும் நிறுவன அமைப்பின் ஒரு பகுதி. பெண்ணுக்காக சாதி உறவுகளை எதிர்த்து ”கூட்டிக்கொடுத்தவன்” என்று பெயர் வாங்குவதா அல்லது பெண்ணுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு ”மானமுள்ளவன்” என்று பெயர் வாங்குவதா அல்லது இது இரண்டையும் செய்யாமல் “தானே செத்துப் போவதா” என்பதே குடும்பத்தின் முன் உள்ள கேள்வியாக இருக்கிறது. இந்த ஊசலாட்டம் தான் இத்தகைய பொறுக்கிகளுக்கு மிரட்டும் ஊக்கத்தை வழங்குகிறது.
இரண்டாவதாக, இந்த சாதிப் பெருமை பேசும் பொறுக்கிகளுக்கு  “சாதி என்பதைப் பெருமையாக நினைக்கும் மனநிலை” எங்கிருந்து வருகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு, அவர்கள் வேறு எந்தத் தகுதியும் இல்லாத உதிரிகள் என்பதும், இவர்களது உருவாக்கத்திற்கும், நிலைத்தலுக்கும் பின்னால் சாதி அரசியல் முதல் வெகுஜன அரசியல் வரை இருக்கிறது என்பதும் காரணம்.
உன்னைக் கொன்றுவிடுவேன் என்று ஒருவன் மிரட்டினால் அது பொறுக்கித்தனம். அதே ஒருவன் சாதிப் பெருமையின் பெயரால் அதைச் செய்கிறபோது அதற்கு ஒரு கவுரவம் வந்துவிடுகிறது. அந்த கவுரவத்திற்குப் பின்னால் சாதியை அங்கீகரிக்கிற நமது மனநிலை இருக்கிறது. அங்கீகாரம் என்றாலே “எனது சாதி உயர்ந்தது” என்கிற பெருமிதம் இருக்கிறது. இந்தப் பெருமிதத்துக்குப் பின்னால் ஒரு புனித கட்டுமானம் இருக்கிறது. இந்தப் புனிதத்தைக் காப்பாற்றும் கடமை அந்த சாதியில் பிறந்த பெண்ணின் மீது சுமத்தப்படுகிறது.
அந்த புனிதக் கடமையில் இருந்து அவள் தவறுகிறபோது அவளை ஒழுங்குபடுத்தும் தார்மீகக் கடமை அந்த சாதி ஆணுக்கு வந்துவிடுகிறது. அல்லது அவனாகவே அதை எடுத்துக்கொள்கிறான். “உன்னைக் கொன்று விடுவேன்” என்று சொல்வதற்குப் பின்னால் உள்ள திமிரை வழங்குவது அவன் நம்புகிற இந்த “கடமைதான்”.
இந்த மனநிலையை அரசியல் கட்சிகள் பல வழிகளில் தூபம் போட்டு வளர்க்கின்றன. ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை என்கிற அளவுக்கு அவை நமது அரசியலோடு பிணைந்திருக்கின்றன. சாதிக்கட்சிகள் வெளிப்படையாக செய்கின்றன என்றால் வெகுஜனக் கட்சிகள் இத்தகைய பொறுக்கிகளிடம் பேணும் சமரசம் மூலம் இந்த அத்துமீறலுக்குத் துணை போகின்றன.
இப்போது அரசு செய்ய வேண்டியது, அது தன் கடமையை நிலை நிறுத்துவதுதான். அந்த ஒலிக்குறிப்பை பின்தொடர்ந்து இந்த சமூக விரோதிகளைக் கைது செய்வதன் மூலம் அது ஒரு வெளிப்படையான செய்தியைச் சொல்ல முடியும். தேசியக் கொடியை எரித்து சமூகவலைத்தளங்களில் அந்தப் படத்தைப் பதிவேற்றியதற்காக, ஒரு விடலைப் பையனின் கையை உடைத்து பாடம் கற்பிக்கும் நமது காவல் துறைக்கு இதைச் செய்வது ஒன்றும் கடினமானதாக இருக்க முடியாது.
கார்ல் மார்க்ஸ், சமூக-அரசியல் விமர்சகர். இவரை  Karl Max  இங்கே பின் தொடரலாம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.