சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க முடியாது என்று கேரள அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு என்று உள்ள மரபுகளை மீற முடியாது என்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கேரள அரசு தெரிவித்துள்ளது.கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் உள்ள ஐயப்பன் சிலையை 18 படியேறி பார்ப்பதற்கு, 41 நாட்கள் கடும் விரதம்இருந்து இருமுடியுடன் வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பெண்களைப் பொறுத்த வரை, 10 வயதுக்கு உட்பட்டவர்களும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
மாதவிடாய் ஏற்படும் பெண்களை அனுமதித்தால், கோயிலின் புனிதம் கெட்டுவிடும் என்று காரணம் கூறப்பட்டு வருகிறது.இந்நிலையில், அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் என்.வி. ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த ஜனவரி 12-ம் தேதி இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, “பெண்களை ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள்? எந்த அடிப்படையில் பெண்கள் கோயிலுக்குள் நுழைவதை தடுக்கிறீர்கள்? இதன் தர்க்கம் என்ன?” என்று நீதிபதி தீபக் மிஸ்ரா அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பினார். இதுதொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேரள அரசுக்கு உத்தரவிட்டார். பிப்ரவரி 8-ஆம் தேதிக்கு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.இந்நிலையில், வெள்ளியன்று இந்த வழக்கு தொடர்பாக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது என்றும்; மரபுகளை மீற முடியாது என்றும் கேரள அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதையொட்டி புதிய தலைமுறை நேர்படப் பேசு நிகழ்ச்சியில் விவாதம் நடந்தது. அதில் பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், சமூக ஆர்வலர் அனு சந்திரமவுலி, முன்னாள் எம் எல் ஏ ஃபதர் சயித், சமூக ஆர்வலர் ஃபாத்திமா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார் கார்த்திகைச்செல்வன். இந்த நிகழ்ச்சியில் இந்து மதம் தொடர்பான நடைமுறைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் கவிதா முரளிதரன். வீடியோ இணைப்பு கீழே…
அதற்கு கோவை பாஜக பிரமுகர் விஜயகுமார் திருமூர்த்தி என்பவர் கவிதா முரளிதரன் மீது தனிப்பட்ட முறையில் தாக்கி ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
பனிமலர் பன்னீர்செல்வம்
இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மதங்களும் பெண்களும் என்ற தலைப்பில் பேசிய மூத்த பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் எப்படி எல்லா மதங்களிலும் ஆணாதிக்க சிந்தனை புரையோடிக் கிடக்கிறது என்பது பற்றி பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தார். அவரது கருத்துகள் சிலருக்கு ஏற்புடையதாக இருக்கலாம், சிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். மாற்றுக் கருத்துக்கு எப்போதும் இடமளிக்க வேண்டும் என்று கூறுபவர்களில் ஒருவர் தான் கவிதா முரளிதரனும். ஆனால் அவர் கூறிய கருத்தைப் பற்றி விவாதிக்காமல் அவரைப் பற்றி பேசியிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. பொது வெளியில் ஒரு பெண் தனது கருத்துகளை, அதுவும் மதங்களுக்குள் இருக்கும் ஆணாதிக்கத்தைப் பற்றி கருத்துகள் கூறும்போது அதை எதிர்த்து மாற்றுக் கருத்துகள் கூற தைரியமில்லாததாலேயே இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இந்நேரத்தில் பெண்கள் பற்றி வலைதளங்களில் இழிவாக கருத்துகள் பதிவிடுவதை தடுத்து நிறுத்த உரிய விதிமுறைகள் உருவாக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதை வரவேற்கத்தக்கது.
இந்த பதிவில் பாலியல் தொழிலாளர்களை இழிவுப்படுத்தும் நோக்கம் இல்லை. ஒரு பெண்ணை இழிவுப்படுத்த வேண்டும் என்றால் கூட, மற்றொரு பெண்ணை இழிவுப்படுத்தி தான் அதை செய்ய பழகியிருக்கும் சமூகத்தில் வாழ்கிறோம் என்பது வேதனைக்குரியது.
பெண்களுக்கு உரிய மரியாதையை உரிமையை தர மறுக்கும் மதம் உள்ளிட்ட சமூகக் கட்டமைப்புகளை கண்டிப்பதும் கேள்வி கேட்பதும் விபச்சாரம் என்றால் அதை விருப்பத்தோடும் திமிரோடும் செய்யவே செய்வோம்.
சமூக வலைத்தளங்களில் கண்டனத்துக்குப் பிறகு, இந்தப் பதிவை நீக்கியிருக்கிறார் விஜயகுமார்.
சகோதரி கவிதா முரளிதரன் குறித்து நான் பதிவிட்டது அவர் மனம் புண்பட்டதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்
காவல்துறைக்கு செல்வேன் என தெரிந்ததும் வருத்தம் தெரிவித்திருக்கிறார் அந்த நபர். மாற்று கருத்துகளை கருத்துகளால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் வன்முறையால் அல்ல என்பதை புரிந்து கொண்டால் சரி.
மத கட்டுப்பாடுகள் குறித்து கேள்வி எழுப்புபவர்களை தனிப்பட்ட முறையில் இணையத்தில் எழுதும் போக்கு அதிகரித்துவரும் நிலையில் இவற்றை கட்டுப்படுத்த நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.